‘பா.ஜ.க-வில் மட்டுமே இது சாத்தியம்!’ - என்ன சொல்கிறார் பிரதாப் சாரங்கி  | This is the speciality about BJP Says pratab sarangi

வெளியிடப்பட்ட நேரம்: 19:12 (09/06/2019)

கடைசி தொடர்பு:07:52 (10/06/2019)

 ‘பா.ஜ.க-வில் மட்டுமே இது சாத்தியம்!’ - என்ன சொல்கிறார் பிரதாப் சாரங்கி 

இந்தியாவில் பா.ஜ.க என்ற  கட்சிதான்  டீ விற்றவரை பிரதமராகவும் செய்தித்தாள் விநியோகம் செய்தவரை குடியரசுத்தலைவராகவும் அலங்கரித்துப் பார்த்தது என மத்திய இணை அமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி தெரிவித்துள்ளார்.

பிரதாப் சாரங்கி

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. மோடி இரண்டாவது முறையாக மீண்டும் பிரதமரானார். தேர்தல் வெற்றிக்குப் பின்னர், மோடியைப்போலவே அதிக கவனம் பெற்றவர் பிரதாப் சாரங்கி. குடிசை வீட்டில் எளிமையான வாழ்க்கையை நடத்தி வரும் சாரங்கி ஒடிசாவின் பாலாசோர் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். மத்திய அமைச்சரவையில் இவர் இடம் பிடித்துள்ளார். இந்த நிலையில் மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதான், சாரங்கி இருவரும்  ஒடிசா சென்றனர்.

அங்கு பேசிய சாரங்கி, “பா.ஜ.க-வின் சிறப்பம்சம் என்னவென்றால் இங்கு டீ விற்பவர் பிரதமராக முடியும். செய்தித்தாள் விநியோகித்தவர் ஜனாதிபதியாகலாம். குடிசையில் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பவர் அமைச்சராகி மக்கள் சேவையாற்ற முடியும். மோடி என் மீது நம்பிக்கை வைத்துள்ளார். நான் அமைச்சர் பதவியை ஒருபோதும் தேடிப்போனதில்லை. அந்தப் பதவி தானாகவே என்னைத் தேடி வந்துள்ளது. மக்களுக்குப் பணியாற்ற வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. அமித் ஷா எனக்கு போன் செய்தபோது நான் மற்றொருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் இரண்டு முறை போன் செய்திருந்தார். இதையடுத்து நான் அவரைத் தொடர்புகொண்டு பேசினேன். அவர் பதவியேற்பு விழாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அவர் கூறியது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. மக்களுக்குத் தொண்டாற்ற கடவுள் எனக்குக் கொடுத்த வாய்ப்பாகத்தான் இதைப் பார்க்கிறேன்’’ என்றார்.