‘பிரசாந்த் படித்த கல்லூரியில் அமித் ஷா முதல்வர்’ - மம்தாவின் தேர்தல் ஆலோசகரை விமர்சித்த விஜய்வர்கியா | Amit Shah is a bigger poll strategist than Kishor says Vijayvargiya

வெளியிடப்பட்ட நேரம்: 08:14 (10/06/2019)

கடைசி தொடர்பு:12:49 (10/06/2019)

‘பிரசாந்த் படித்த கல்லூரியில் அமித் ஷா முதல்வர்’ - மம்தாவின் தேர்தல் ஆலோசகரை விமர்சித்த விஜய்வர்கியா

மக்களவைத் தேர்தல் முடிவுகள் அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தங்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். கம்யூனிஸ்டுகளின் கோட்டையாக இருந்த மேற்கு வங்கத்தில் அதை உடைத்து தன் கட்சியை நிலைநாட்டினார் மம்தா. ஆனால், நடந்து முடிந்த தேர்தலில் மம்தாவின் கட்சி பல இடங்களில் தோல்வியையே சந்தித்தது. 

மம்தா பானர்ஜி

இதற்கிடையில் வரும் 2021-ம் ஆண்டு அங்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால், அதில் எப்படியேனும் ஜெயித்து தன் முதல்வர் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என முனைப்பில் உள்ளார் மம்தா. அதனால் தன் தேர்தல் ஆலோசகராகப் பிரசாந்த் கிஷோரை நியமித்துள்ளார்.

பிரசாந்த் கிஷோர்

பிரசாந்த் கிஷோர் இந்திய அரசியலின் பெரும் தேர்தல் வித்தகர். சமீபத்தில் ஆந்திராவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி இமாலய வெற்றி பெற்றதுக்கு இவரின் தேர்தல் வியூகங்களும் காரணம். இதுமட்டுமல்லாமல் மோடி, நிதிஷ் ஆகியோர் முதல்வராவதற்கும் 2014-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க-வுக்கு ஆதரவாகவும் இவர் பல வியூகங்களை வகுத்துக் கொடுத்தார். தற்போது பிரசாந்த் கிஷோர் மம்தாவுடன் இணைந்திருப்பது அம்மாநில அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்வர்கியா

இந்நிலையில், மம்தாவுடன் பிரசாந்த் இணைந்திருப்பதை பா.ஜ.க-வின் தேசிய செயலர் விஜய்வர்கியா கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் பேசியுள்ளதாவது, “மேற்கு வங்க மக்கள் மம்தாவின் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்துவிட்டனர். அவர்கள் மம்தா பானர்ஜியையும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியையும் அம்மாநிலத்திலிருந்து அகற்ற முடிவெடுத்துவிட்டனர். 

அமித் ஷாவைவிட பெரும் தேர்தல் வித்தகர் யாரும் இருக்க முடியாது. அவருக்கு அடுத்துதான் பிரசாந்த் கிஷோர். அமித் ஷாவின் தேர்தல் திறமையை பா.ஜ.க-வின் கடந்த வெற்றிகளின் மூலம் நன்கு அறிந்துகொள்ளலாம். பிரசாந்த் கிஷோர் மாணவர் என்றால் அந்தக் கல்லூரியின் முதல்வர் அமித் ஷா. அதனால் நாங்கள் ஒருபோதும் இதுபற்றி கவலைப்படபோவதில்லை” எனப் பேசியுள்ளார்.