`ரோஜாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்காததுக்குக் காரணம்?’ - ஜெகனின் சீனியர் பாசம் | To avoid calls from Jagan Mohan Reddy, Roja has switched off her mobile phone

வெளியிடப்பட்ட நேரம்: 11:53 (10/06/2019)

கடைசி தொடர்பு:19:22 (11/06/2019)

`ரோஜாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்காததுக்குக் காரணம்?’ - ஜெகனின் சீனியர் பாசம்

ஆட்சி மாற்றம், அமைச்சரவை பதவியேற்பு, புதிய திட்டங்கள் என ஆந்திர அரசியலில் புயலைக் கிளப்பி வருகிறார் ஜெகன்மோகன் ரெட்டி. முதல்வராகப் பதவியேற்றது முதல் மதுவிலக்கு, சனிக்கிழமைகளில் குழந்தைகள் பள்ளிகளுக்கு பேக் எடுத்துச் செல்லத் தேவையில்லை, உயர்த்தப்பட்ட ஓய்வூதியம், இப்படி அதிரடித் திட்டங்களால் மக்கள் மனதைக் கவர்கிறார். இதுமட்டுமல்லாமல் 5 துணை முதல்வர்களை நியமித்து, இந்த ஐந்து பேரையும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களாகத் தேர்ந்தெடுத்துள்ளார். பட்டியலினத்தவர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர், சிறுபான்மையினர், காப்பூ சமூகத்தினர் என மாநிலத்தின் முக்கிய சமூகங்களுக்குச் சரிசமமாக வாய்ப்பு வழங்கியுள்ளார்.

ஜெகன்மோகன் ரெட்டி 

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள 25 அமைச்சர்கள் பட்டியலிலும் இதே நிலைதான். 25 அமைச்சர்களில் 7 பேர் பிற்படுத்தப்பட்டவர், 5 பேர் பட்டியலினத்தவர், கபூ மற்றும் ரெட்டி சமூகத்திலிருந்து தலா 4 பேரும், முஸ்லிம் மற்றும் பழங்குடியினர் சமூகத்திலிருந்து தலா ஒருவரும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என்றும், அதற்குப் பிறகு புதிய தலைவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் ஜெகன் அறிவித்துள்ளார். இதற்கிடையே, ஜெகனின் தீவிர விசுவாசியாகவும் நகரி தொகுதியிலிருந்து இரண்டுமுறை எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரான நடிகை ரோஜா அமைச்சரவையில் இடம்பிடிப்பார் எனக் கூறப்பட்டது. 

ரோஜா

ஒய்.எஸ்.ஆர் கட்சியில் ஐக்கியமான பிறகு, அந்தக் கட்சியின் பீரங்கிப் பேச்சாளராக வலம் வந்தவர் ரோஜா. கட்சிக்காகப் பல்வேறு விஷயங்களை அசாத்தியமாகச் செய்துமுடித்தார். இதனால் ஜெகனின் நம்பிக்கைக்குரிய சகோதரியாக மாறினார். இவரின் பேச்சு தெலுங்கு தேசத்தை அசைத்துப் பார்க்க தவறவில்லை. இதனால் அவருக்கு உள்துறை அமைச்சர் அல்லது வேறு ஏதாவது அமைச்சர் பதவி உறுதி என அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பேசப்பட்டு வந்தது. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக அமைச்சரவை பட்டியலில் ரோஜா பெயர் இடம்பெறவில்லை. அமைச்சரவையில் அனைத்துச் சமூகத்துக்கும் பங்களிப்பு கொடுக்க வேண்டும் என்ற ஜெகனின் கொள்கையே ரோஜாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்கவிடாமல் செய்துவிட்டது என்கிறது ஆதரவாளர்கள்.

ரோஜா 

ரோஜா சித்தூர் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். இதே மாவட்டத்தில் உள்ள புங்கானூர் தொகுதியில் இருந்து 6 முறை எம்.எல்.ஏ-வாக இருந்துவருபவர் ராமச்சந்திரா. கட்சியின் சீனியரான இவர் ரோஜாவின் சொந்த சமூகத்தைச் சேர்ந்தவர். சீனியர் என்பதாலும் சமூக ரீதியாகவும் அமைச்சர் பதவி ரேஸில் அவர் முந்த ரோஜாவுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே, ஜெகனின் பதவியேற்பு விழாவில் ரோஜா பங்கேற்கவில்லை. அமைச்சர் பதவி கிடைக்காத விரக்தியில் ரோஜா மற்றும் அவரின் ஆதரவாளர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்காமல் இருந்ததுடன் போனையும் ஸ்விட்ச் ஆப் செய்துவைத்திருந்ததாக ஆந்திர மீடியாக்கள் செய்திவெளியிட்டு வருகின்றன. அதேநேரம் அடுத்த முறை அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும்போது ரோஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் எனக் கூறப்பட்டுவருகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க