கத்துவா சிறுமி கொலை வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு! | six persons convicted by Pathankot court in Kathua rape & murder case.

வெளியிடப்பட்ட நேரம்: 12:17 (10/06/2019)

கடைசி தொடர்பு:14:17 (11/06/2019)

கத்துவா சிறுமி கொலை வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு!

கத்துவா சிறுமி  கொலை வழக்கு

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்துவாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17-ம் தேதி 8வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். தன் மகள் காணாமல்போனதாக ஜனவரி 10-ம் தேதி காவல்நிலையத்தில் தந்தை புகார் தெரிவித்தார். காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமிதான் காணாமல்போனது என்பது விசாரணையில் தெரியவந்தது. பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்தச் சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. இதுதொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். 8 பேரில் ஒருவர் சிறார்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து நான்கு நாள்கள் அடைத்து வைத்திருந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறியுள்ளனர். இதன் பின்னர், சிறுமியைக் கொடூரமாகக் கொலை செய்து அருகில் இருந்த காட்டுப்பகுதியில் வீசியதாகக் கூறினர். இந்த வழக்கில் சாட்சியத்தை அழிக்க முயன்றதாகக் காவல்துறை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு உள்ளது. இந்த வழக்கில் சஞ்சீ ராம் என்பவர் மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்பட்டது.

காஷ்மீரில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இந்து ஏக்தா மஞ்ச் என்ற அமைப்பு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேசியக்கொடியுடன் மிகப்பெரிய அளவில் பேரணி நடத்தியது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவிடாமல் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தீபிகா ராஜாவத்துக்குப் பல்வேறு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இந்த வழக்கிலிருந்து விலகுமாறு அவருக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் பார் கவுன்சிலுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து ஒருவழியாக கத்துவா முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

நீதிமன்ற வளாகம்

ஆனால், காஷ்மீரில் வழக்கு நடந்தால் தங்களுக்கு உரிய நீதி கிடைக்காது. எனவே, இந்த வழக்கை சண்டிகருக்கு மாற்றும்படி சிறுமியின் தந்தை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதிகள், பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டனர். மேலும், விசாரணை நடைபெறும்போது அதை வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. வழக்கு விசாரணை ஜூன் 3-ம் தேதி முடிவடைந்த நிலையில் தீர்ப்பை ஜூன் 10-ம் தேதிக்கு நீதிபதி தேஜ்விந்தீர் சிங் (Tejwinder Singh) ஒத்திவைத்தார்.

கத்துவா சிறுமி  வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதையடுத்து பதான்கோட் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. சிறையில் இருந்து குற்றவாளிகள் 8 பேரில் 7 நபர்கள் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டனர். ஒருவர் சிறார் என்பதால் அவர் அழைத்து வரப்படவில்லை. இந்த வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என பதான்கோட்  சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஊர்த் தலைவர் சஞ்சி ராம், அவரின் மகன் விஷால், போலீஸ் அதிகாரிகள் தீபக் , சுரேந்தர் வர்மா, தலைமைக் காவலர் திலக் ராஜ் ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.