காங்கிரஸ் தோல்விக்கு என்ன காரணம்?- ரேபரேலியில் விவாதிக்கிறார் பிரியங்கா காந்தி | Priyanka Gandhi to visit Rae Bareilly tomorrow to discuss defeat

வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (10/06/2019)

கடைசி தொடர்பு:15:20 (10/06/2019)

காங்கிரஸ் தோல்விக்கு என்ன காரணம்?- ரேபரேலியில் விவாதிக்கிறார் பிரியங்கா காந்தி

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்வி குறித்து விவாதிப்பதற்காக, நாளை ரேபரேலிக்குச் செல்லவிருக்கிறார், பிரியங்கா காந்தி. தேர்தல் தோல்விக்குப் பிறகு, முதன்முறையாக அங்கு செல்கிறார். 

பிரியங்கா காந்தி

நடந்து முடிந்த 17-வது நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பலத்த தோல்வியைச் சந்தித்தது. சமீபத்தில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில்கூட அக்கட்சியால் வெற்றிபெற முடியவில்லை. மேலும், அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, தன்னுடைய சொந்தத் தொகுதியான அமேதியிலேயே தோல்வியடைந்தார். ராகுலுக்காக அந்தத் தொகுதியில் அடிக்கடி தொடர்ந்து பிரசாரம் செய்தார், காங்கிரஸ் கட்சியின் உத்தரப்பிரதேச கிழக்குப் பகுதி பொதுச் செயலாளரும், ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா. அதேபோல், தன் சகோதரர் போட்டியிட்ட மற்றொரு தொகுதியான கேரள மாநிலம் வயநாட்டிலும் தொடர்ந்து பிரசாரம் செய்தார். இதுதவிர, தன் தாயாரின் சொந்தத் தொகுதியான ரேபரேலியிலும் தொடர்ந்து பிரசாரம் செய்தார். கடந்த ஆண்டுகளில் தன் சகோதரரின் அமேதி தொகுதியிலும், தன் தாயாரின் ரேபரேலி தொகுதியிலும் பிரசாரம் செய்துவந்த பிரியங்கா, இந்த முறை வயநாடு மற்றும் பிற தொகுதிகளிலும் பிரசாரம் செய்தார். ஆனாலும், அவருடைய பிரசாரத்துக்குப் போதிய அளவு பலன் கிடைக்கவில்லை. 

இந்த நிலையில், பிரியங்கா காந்தி தன் தாயாரின் சொந்த தொகுதியான ரேபரேலிக்கு நாளை செல்லவிருக்கிறார். தேர்தல் தோல்விக்குப் பிறகு முதன்முறையாக அங்கு செல்லும் பிரியங்கா காந்தி, அங்குள்ள கட்சி நிர்வாகிகளைச் சந்தித்துப் பேச இருக்கிறார். இந்தக் கூட்டத்தில் கட்சியின் தோல்வி குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. இதில் அப்பகுதியைச் சார்ந்த தலைவர்களும், நிர்வாகிகளும் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க