பம்பையில் எதிரிகள்; குருவாயூரில் நண்பர்கள்! - யதீஷ் சந்திரா மீது பி.ஜே.பி திடீர் பாசம் | Surendran BJP The leader shook hands with Yathish Chandra

வெளியிடப்பட்ட நேரம்: 15:35 (10/06/2019)

கடைசி தொடர்பு:15:35 (10/06/2019)

பம்பையில் எதிரிகள்; குருவாயூரில் நண்பர்கள்! - யதீஷ் சந்திரா மீது பி.ஜே.பி திடீர் பாசம்

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து, பல மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான பெண்கள் சபரிமலை நோக்கிச் சென்றனர். அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரளா முழுவதும் பல இடங்களில் போராட்டங்களும் கலவரங்களும் நிகழ்ந்தன.

சபரிமலை செல்லும் பொன்னார்

இதனால், நிலக்கல்லில் இருந்து சபரிமலை வரை சில நாள்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அந்த நேரத்தில், முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நாகர்கோவிலில் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்குச் சென்றார்.  பல பா.ஜ.க தொண்டர்களும் அவருடன் சென்றிருந்தனர். தடை உத்தரவு காரணமாக பொன். ராதாகிருஷ்ணன் நிலக்கல்லிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். அப்போது அங்கு பணியாற்றிய போலீஸ் அதிகாரி யதீஷ் சந்திரா, அவரைத் தடுத்து, அமைச்சரின் வாகனம் செல்ல மட்டுமே அனுமதி உள்ளது. தொண்டர்கள் அரசு வாகனங்களில் செல்லலாம் எனக் கூறப்பட்டது. 

பொன்னாரை தடுத்த யதீஷ்

இதனைத் தொடர்ந்து, மறுநாள் கேரள பா.ஜ.க நிர்வாகி கே. சுரேந்திரன் மற்றும் ஏ.என் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சபரிமலை சென்றனர். அவர்களையும் யதீஷ் தடுத்து நிறுத்தினார். இதில் கடுப்பான சுரேந்திரன்,  “உன் தலையில் இருக்கும் தொப்பியைக் கழற்ற எனக்கு ஒரு நிமிடம்கூட ஆகாது” எனக் கூறினார்.  இந்த விவகாரத்தால் போலீஸ் அதிகாரிக்கும் பா.ஜ.க தொண்டர்களுக்கும் இடையே வார்த்தைப் போர் நிலவியது. யதீஸ் சந்திராவுக்கு கேரள பா.ஜ.க தொண்டர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

மோடியை வரவேற்கும் யதீஷ்

இதனையடுத்து, சபரிமலையில் இருந்து திருச்சூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார் யதீஷ். இந்நிலையில், நேற்று முன்தினம் குருவாயூர் வந்திருந்த பிரதமர் மோடியை, யதீஷ் தான் நேரில் சென்று வரவேற்றார். தொடர்ந்து, மோடி கேரளாவில் இருக்கும் வரையிலும் அவருக்கு பாதுகாப்பு வழங்கினார். அப்போது, மோடி தங்கியிருந்த விருந்தினர் மாளிகைக்கு வந்த யதீஷை சிரித்த முகத்துடன் வரவேற்றார் சுரேந்திரன். இவர்கள் இருவரும் கை குலுக்கிக்கொள்ளும் புகைப்படம்  சமூக வலைதளத்தை ஆக்கிரமித்துள்ளது.

யதீஷுடன் சுரேந்திரன்

மேலும், பிரதமர் மோடி குருவாயூர் வருவதற்கு முன் ஐபிஎஸ் அதிகாரி யதீஷ் சந்திரா அங்கு சென்றுள்ளார். அவருக்கு பலத்த வரவேற்பு அளித்து தடபுடலாகக் கவனித்துள்ளனர் பா.ஜ.க நிர்வாகிகள். இந்த நிகழ்வு கேரளாவில் அதிக கவனம் ஈர்த்துள்ளது. 
 


அதிகம் படித்தவை