`என்னைக் குறிவைத்துத் தாக்குகிறார்கள்!'- அமித் ஷாவுக்குக் கறுப்புக்கொடி காட்டிய மாணவி வேதனை | Allahabad University student Neha Yadav has been suspended from the university

வெளியிடப்பட்ட நேரம்: 17:13 (10/06/2019)

கடைசி தொடர்பு:17:13 (10/06/2019)

`என்னைக் குறிவைத்துத் தாக்குகிறார்கள்!'- அமித் ஷாவுக்குக் கறுப்புக்கொடி காட்டிய மாணவி வேதனை

உத்தரபிரதேச மாநிலத்தின் அலகாபாத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர் மாணவி நேஹா யாதவ். மாணவர் கோரிக்கைகளை முன்வைத்து அடிக்கடி கல்லூரியில் போராட்டங்களை முன்னெடுத்து வந்தார். யோகி ஆதித்யநாத் அரசில் உத்தரபிரதேசத்தில் மாணவர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்படுவதாகக் கூறி, கடந்த வருடம் ஜூலை மாதம் அலகாபாத் வந்த பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷாவின் கான்வாய் வாகனத்தை மறித்து கறுப்புக் கொடி காண்பித்து அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினார். இதற்காகக் கைதும் செய்யப்பட்டார். இதேபோல் இன்னும் சில போராட்டங்களை மாணவர்கள் கோரிக்கை தொடர்பாக முன்னின்று நடத்தினார். 

கறுப்புக்கொடி

இந்த நிலையில் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கடிதத்தை வெளியிட்டிருந்தார். அதில், கல்லூரியில் தொடர்ந்து ஒழுக்கமற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டிருந்தது. இதுகுறித்து பேசிய கல்லூரி நிர்வாகிகள், ``ஒழுங்கீனமற்ற செயல்களில் ஈடுபட்டதாக அவர் மீது பல்வேறு புகார்கள் உள்ளன. இதில்  ஹாஸ்டலுக்கு லேட்டாகச் செல்வது, காவலர்களிடம் தவறாக நடந்துகொள்வது எனப் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன" எனக் குற்றம் சாட்டியுள்ளனர். கூடவே ஹாஸ்டலிலிருந்து உடனடியாக வெளியேற்றியுள்ளனர். சமீபத்தில் ஹாஸ்டலிலிருந்து மாணவர்கள் சீக்கிரமாக வெளியேற்றப்பட்டதுக்கு எதிராக மாணவி நேஹா கல்லூரிக்கு எதிராகப் போராட்டம் நடத்தியுள்ளார்.

மாணவி நேஹா யாதவ் 

இதைக் காரணமாக வைத்துதான் சஸ்பெண்டு செய்யப்பட்டதாக கல்லூரி சார்பில் கூறப்பட்டு வரும் நிலையில் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள நேஹா, ``என் மீது நிறைய புகார்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. எத்தனை புகார்கள் எனக்கு எதிராகக் கூறப்பட்டாலும், நான் மாணவர்களின் நலனுக்காகத்தான் போராடி வருகிறேன். பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றுதான் இங்குச் சேர்ந்தேன். அப்படி இருக்கையில் சிலர் எனக்கு எதிராகச் சதி செய்து எனது எதிர்காலத்தை நசுக்கப் பார்க்கிறார்கள். நான் இங்குள்ள குறைகளுக்கு எதிராகப் போராடுவதுதான் இதற்கான காரணமாக உள்ளது" எனக் கூறியுள்ளதுடன், ``அமித் ஷாவுக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டிய பின்தான் தன்னை குறிவைத்துத் தாக்குகிறார்கள்' எனக் குற்றம் சாட்டியுள்ளார் நேஹா. இந்த விவகாரம் உத்தரபிரதேசத்தில் சர்ச்சையை ஏற்படுத்த, ``எதிர்காலத்தில் ஒழுங்கீனமற்ற செயல்களில் ஈடுபட மாட்டேன் என்று நேஹா உறுதி அளித்தால் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய தயார்" எனப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

நேஹா யாதவ்

ஆனால், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியின் மாணவர் அமைப்பில் உள்ள நேஹா, இந்த விவகாரத்தை அகிலேஷ் கவனுத்துக்கு எடுத்துச் செல்வதுடன், கோர்ட்டில் வழக்குப் பதிந்து சந்தித்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க