`அந்தச் சிறிய ஆத்மாவுக்கு நீதி கிடைத்துவிட்டது!'- கத்துவா வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரி | Kathua rape & murder case: Three have been sentenced to life imprisonment; 

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (10/06/2019)

கடைசி தொடர்பு:14:17 (11/06/2019)

`அந்தச் சிறிய ஆத்மாவுக்கு நீதி கிடைத்துவிட்டது!'- கத்துவா வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரி

கத்துவா

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் கத்துவாவில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17-ம் தேதி, சிறுமி ஒருவர் காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். பிரேதப் பரிசோதனை அறிக்கையில், சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்தச் சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. இதுதொடர்பாக 8 பேர் கைதுசெய்யப்பட்டனர். 8 பேரில் ஒருவர் சிறார். அவர்களிடம் நடத்திய விசாரணையில், சிறுமிக்கு மயக்கமருந்து கொடுத்து, நான்கு நாள்கள் அடைத்து வைத்திருந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. பல்வேறு காரணங்களுக்காக,  கத்துவா முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கை  பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டுக்கு மாற்றி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், விசாரணை நடைபெறும் போது வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 

வழக்கு விசாரணை ஜூன் 3-ம் தேதி முடிவடைந்த நிலையில், தீர்ப்பை ஜூன் 10-ம் தேதிக்கு (இன்று) நீதிபதி தேஜ்விந்தர் சிங் ஒத்திவைத்தார். கத்துவா சிறுமி  வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதையடுத்து, பதான்கோட் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்த வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என பதான்கோட்  சிறப்பு நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பு வழங்கியது. தண்டனை விவரம் மதியம் வெளியிடப்படும் எனக் கூறப்பட்டது. இந்த வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 6 பேரில், சஞ்சி ராம், தீபக் கஜூரியா, பர்வேஷ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சாட்சியை அழிக்க முயன்ற குற்றச்சாட்டில் கைதான காவல்துறை உதவி ஆய்வாளர் ஆனந்த் தத்தா சுரிந்தர் வர்மா மற்றும் தலைமைக் காவலர் திலக் ராஜ் ஆகிய மூவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஊர் தலைவர் சஞ்சி ராம் மகன் விஷாலை நீதிமன்றம் விடுவித்துள்ளது.

பதான் கோட் நீதிமன்ற வளாகம்


``அந்தச் சிறிய ஆத்மாவுக்கு நீதி கிடைத்தது என்று நான் சந்தோசப்படுகிறேன்'' என்று கத்துவா சிறுமி வழக்கை விசாரித்த முன்னாள் காவல்துறை அதிகாரி  ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார். இவரது தலைமையில்தான் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.  தீர்ப்பு குறித்துப் பேசிய ரமேஷ்,  ‘'நான் பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டேன். எனக்கு  அழுத்தமும் கொடுக்கப்படவில்லை.  எனக்கு இருந்த அழுத்தமே இந்த வழக்கு தொடர்பாக ஊடகத்தில் வரும் தகவல்கள்தான். ஒவ்வொரு பத்திரிகையிலும் ஒரு விதமாக எழுதினர். விசாரணையின்போது, எங்கள் குழுவுக்கு உள்ளூரில் இருக்கும் சில அரசியல் பிரமுகர்கள்தான் தடையாக இருந்தனர்'’ என்றார்.