வெளிநாடுகளில் மருத்துவம் படிப்பதன் சிக்கல்கள் என்னென்ன? - விவரிக்கும் கல்வி ஆலோசகர்கள்! | The things to be watched while planning for medical studies in abroad

வெளியிடப்பட்ட நேரம்: 20:26 (10/06/2019)

கடைசி தொடர்பு:17:34 (11/06/2019)

வெளிநாடுகளில் மருத்துவம் படிப்பதன் சிக்கல்கள் என்னென்ன? - விவரிக்கும் கல்வி ஆலோசகர்கள்!

மக்கள் தொகை குறைவாக இருக்கும் நாடுகளில் அதிக மருத்துவ இடங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இதனால் வெளிநாடுகளிலிருந்து படிக்க வரும் மாணவர்களுக்கு கணிசமான எண்ணிக்கையில் இடங்களை ஒதுக்குகிறார்கள். வெளிநாடுகளில் மருத்துவம் படிப்பதற்கான செலவுகள் நாட்டுக்கு நாடு வேறுபடும். 

வெளிநாடுகளில் மருத்துவம் படிப்பதன் சிக்கல்கள் என்னென்ன? - விவரிக்கும் கல்வி ஆலோசகர்கள்!

ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகளும் வெளியாகிவிட்டன. சரியான மருத்துவக் கல்லூரிகளில் தங்களின் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான முயற்சிகளில் பெற்றோர்கள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் எப்பாடுபட்டாவது தன் பிள்ளையை வெளிநாட்டுக்கு அனுப்பி மருத்துவம் படிக்க வைத்துவிட வேண்டும் என்றும் முயன்று வருகின்றனர். 

மருத்துவம்

வெளிநாடுகளில் மருத்துவப் படிப்புகள் தொடர்பாகப் பல்வேறு கேள்விகள் பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் இருக்கின்றன. வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கலாமா, படிப்பதற்கான வழிமுறைகள் என்னென்ன, படித்து முடித்த பின்னர் நாடு திரும்பும் மருத்துவர்கள் சந்திக்கும் பிரச்னைகள், வெளிநாடுகளில் மருத்துவப் படிப்புகளின் தரம் எனப் பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் இருக்கின்றனர்.

சபேசன்ஸ்ரீநிவாசன்

வெளிநாட்டில் மருத்துவம் படிப்பது தொடர்பாக பெற்றோர், மாணவர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு வெளிநாட்டு கல்வி ஆலோசகர்கள் ஸ்ரீநிவாஸ் மற்றும் சபேசன் ஆகியோர் பதிலளித்துள்ளனர்.

இந்தியாவில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிறைய இருக்கும் நிலையில், மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவம் படிக்க வேண்டியதன் அவசியம் என்ன?

இந்தியாவின் மக்கள்தொகையைக் கணக்கிடும்போது இங்கு இருக்கும் இடங்கள் குறைவுதான். மேலும் இங்குள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் படிக்க அதிகமாகச் செலவாகிறது. இதன்காரணமாகவும் வெளிநாட்டில் மருத்துவம் படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். மக்கள் தொகை குறைவாக இருக்கும் நாடுகளில் மருத்துவ இடங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அதனால் வெளிநாடுகளிலிருந்து படிக்க வரும் மாணவர்களுக்கு கணிசமான எண்ணிக்கையில் இடங்களை ஒதுக்குகிறார்கள். வெளிநாடுகளில் மருத்துவம் படிப்பதற்கான செலவுகள் நாட்டுக்கு நாடு வேறுபடும். 

மருத்துவம்

வெளிநாடுகளில் மருத்துவம் படிப்பதில் இருக்கும் சிக்கல்கள் என்னென்ன?

வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பைத் தேர்ந்தெடுப்பதில் முக்கியச் சிக்கல் மொழிப் பிரச்னைதான். ஆங்கிலம் பேசும் நாடுகளில் அதிக சிக்கல் இல்லை. ஆனால் ஆங்கிலம் பேசாத நாடுகளில் பாடங்களை ஆங்கிலத்தில் கற்றாலும், உடன் படிக்கும் மாணவர்களுடன் உரையாடுவது, சிகிச்சை அளிக்கும் நோயாளிகளுடன் உரையாடி, அவர்களின் பிரச்னைகளைப் புரிந்து சிகிச்சை அளிப்பதற்குச் சிரமப்படுவார்கள். 

வெளிநாட்டில் படிப்பை முடித்தாலும் இந்தியாவில் மருத்துவராகப் பணியாற்ற இந்திய மருத்துவ கவுன்சில் நடத்தும் FMGE (Foreign Medical Graduate Examination) தேர்வில் வெற்றி பெற வேண்டும். இந்தத் தேர்வில் தேர்ச்சிபெறவில்லை என்றால் இந்தியாவில் மருத்துவராகச் செயல்பட முடியாது. இந்தத் தேர்வில் தேர்வு பெறாமல் இந்தியாவில் மருத்துவராகப் பணியாற்றினால் அவரைப் போலி மருத்துவர் என்றுதான் கூற முடியும். ஆனால் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் வெறும் 10 சதவிகிதத்தினர் மட்டுமே. வருடத்துக்கு இரண்டு முறை இந்தத் தேர்வு நடைபெறுகிறது. மூன்று முறைதான் எழுத முடியும். இதில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் நிலை என்ன என்பது பெரும் கேள்விக்குறி. 

வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு நீட் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இது அவசியமா?

இங்குப் பள்ளியில் குறைவான மதிப்பெண் பெறும் மாணவர்கள் பலர் வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவம் படிக்கிறார்கள். அங்கு தேர்ச்சியும் பெறுகிறார்கள். ஆனால் அதற்குப் பிறகு இந்தியாவில் நடைபெறும் இந்திய மருத்துவ கவுன்சிலின் தேர்வில் தேர்ச்சி பெறமுடியவில்லை. அப்படி தேர்ச்சி பெறாத மாணவர்களின் எதிர்காலம் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. எதாவது ஒரு நுழைவுத் தேர்வு வழியாக மாணவர்கள் தேர்வாகிச் சென்றால் தரமான மாணவர்கள் மட்டுமே செல்வார்கள். அப்போது அவர்களின் எதிர்காலம் உறுதிசெய்யப்படும். நீட் மாதிரியான நுழைவுத் தேர்வு வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவர்களுக்கும் கட்டாயம் நல்ல விஷயம்தான்.

மருத்துவர்

நீட் தேர்வு தெரியும். அதென்ன `நெக்ஸ்ட்’ தேர்வு? 

இந்தியாவில் மருத்துவம் படித்து முடிக்கும் மாணவர்கள் NEXT(National Exit Test)தேர்வை எதிர்கொள்ள வேண்டும். இதன் மூலம் தரமான மருத்துவர்களை வெளிக்கொண்டு வர முடியும் என  இந்திய மருத்துவ கவுன்சில் நம்புகிறது. இந்தத் தேர்வில் மருத்துவக் கல்லூரி பாடத்திட்டத்தின் அடிப்படையில்தான் கேள்விகள் கேட்கப்படும். அதைச் சரியாகப் படித்திருந்தால் நெக்ஸ்ட் தேர்வை எளிதாக வென்றுவிடலாம். மருத்துவம் என்பது மனித உயிர்கள் சம்பந்தப்பட்டது என்பதால்தான் இத்தனை விஷயங்கள் கையாளப்படுகின்றன. 

வெளிநாட்டில் மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது?

வெளிநாட்டில் மருத்துவம் என்பது இயலாத காரியம் கிடையாது. தவறான காரியமும் கிடையாது. ஆனால் எங்கு படிக்க வேண்டும், வெளிநாட்டில் இருக்கும் அந்தக் குறிப்பிட்டக்  கல்லூரி இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டதா என்பதைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் வெளிநாட்டு மருத்துவக் கல்வி என்பது மாணவர்களின் நேரத்தையும் பெற்றோர்களின் பணத்தையும் வீணடித்துவிடும். மருத்துவம் சார்ந்த பிற படிப்புகளையும் படிக்கலாம். அதற்கும் அதிக தேவை இருக்கிறது. அவற்றுக்கு உலகம் முழுவதும் நல்ல வேலை வாய்ப்புகளும் உள்ளன. இந்தப் படிப்புகளுக்கும் பெற்றோர், மாணவர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். 

மேலும் பல கேள்விகளை வீடியோ வடிவில் காண...


டிரெண்டிங் @ விகடன்