`வதந்திகள் மூலம் வன்முறை பரப்ப பா.ஜ.க கோடிக்கணக்கில் செலவு செய்கிறது!' - பகீர் கிளப்பும் மம்தா | BJP spending crores to spread fake news, incite violence in Bengal’ says mamtha

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (10/06/2019)

கடைசி தொடர்பு:21:00 (10/06/2019)

`வதந்திகள் மூலம் வன்முறை பரப்ப பா.ஜ.க கோடிக்கணக்கில் செலவு செய்கிறது!' - பகீர் கிளப்பும் மம்தா

பா.ஜ.க வன்முறையைத்தூண்டும் வகையிலான வதந்திகளைப் பரப்ப கோடிக்கணக்கான ரூபாய் பணத்தைச் செலவழிக்கிறது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

மம்தா


மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க தொண்டர்களிடையே மோதல் வெடித்துள்ளது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. பர்கானா மாவட்டத்தில் பா.ஜ.க கொடிக்கம்பத்தை திரிணாமூல் கட்சி ஆதரவாளர்கள் அகற்றினர். இருதரப்புக்கும் இடையே தொடங்கிய வாக்குவாதம் மோதலாக மாறியது. மோதல் உச்சக்கட்டத்தை எட்டியதால் பா.ஜ.க தொண்டர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பானர்ஜி

பா.ஜ.கவினரும், திரிணாமுல் ஆதரவாளர்களை கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், மேற்கு வங்க அரசுக்குக் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. `தேர்தலுக்குப்பின் நடக்கும் வன்முறைச் சம்பவங்கள் கவலையளிப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. மேற்கு வங்க அரசு, `மாநிலத்தின் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், அசம்பாவிதச் சம்பவங்கள் நடக்கவில்லை’ என்று அறிவித்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பாகப் பேசியுள்ள மம்தா பானர்ஜி, ``பா.ஜ.க சமூகவலைதளங்கள் மூலம் வதந்திகளைப் பரப்ப கோடிக்கணக்கான ரூபாயைச் செலவழிக்கிறது.

மோடி

அக்கட்சியின் தொண்டர்கள் மேற்குவங்கத்தில் வன்முறையைத்தூண்ட முயற்சி செய்து வருகின்றனர். மாநிலங்களில் கலவரமோ அல்லது வன்முறையோ ஏற்பட்டால், அதுக்கு மத்திய அரசும் பொறுப்புத்தான். மற்ற மாநிலங்களில் வன்முறையோ, கலவரமோ நடந்தால் மத்திய அரசு வாலைச் சுருட்டிக்கொண்டிருக்கிறது. ஆனால் மேற்குவங்கத்தில் நடந்தால் மட்டும் பாய்கிறது. மேற்குவங்கத்தில் வன்முறையை ஏற்படுத்தவேண்டும் என்று அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதன்மூலம் என் குரலை நசுக்கப் பார்க்கிறார்கள். ஏனெனில் அவர்களுக்குத்தெரியும், மம்தா மட்டும்தான் அவர்களுக்கு எதிராக குரல்கொடுக்கக்கூடிய ஒரே நபர் என்று. எங்கள் அரசை வீழ்த்துவதற்கான அவர்களது சதி ஒருபோதும் வெற்றிபெறாது.