`150 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன்; 4-வது நாளாக மீட்புப் பணி!' - பஞ்சாப் ரியல் `அறம்' போராட்டம் | Rescue for child trapped in punjab bore well enters 4th day

வெளியிடப்பட்ட நேரம்: 22:17 (10/06/2019)

கடைசி தொடர்பு:22:27 (10/06/2019)

`150 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன்; 4-வது நாளாக மீட்புப் பணி!' - பஞ்சாப் ரியல் `அறம்' போராட்டம்

பஞ்சாப்பில், பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவனை கிட்டத்தட்ட 4 நாள்கள் கழித்தும் மீட்க முடியாமல் அதிகாரிகள் தவித்துவருகின்றனர். 

ஆழ்துளைக் கிணறு

பயன்படுத்தப்படாத ஆழ்துளைக் கிணறுகளைப் பாதுகாப்பாக மூடிவைக்காத நிலையில், அதில் சிறுவர்கள் விழுவதும் அவர்களைக் காப்பாற்ற பலமணி நேரப் போராட்டம் நிகழ்வதும் தொடர் கதையாகிவிட்டது. இதேபோல் ஒரு சம்பவம் பஞ்சாப் மாநிலம் சங்ரூர் பகுதியில் நடந்திருக்கிறது. அப்பகுதியில் உள்ள 150 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணறு, பயன்பாடு முடிந்த நிலையில் துணியால் மூடி வைக்கப்பட்டிருந்திருக்கிறது. அந்தப் பகுதியில் தனது நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது சிறுவனான பதேவீர், கடந்த வியாழக்கிழமை எதிர்பாராமல் அந்தக் குழிக்குள்  விழுந்தார். இதைக் கேள்விப்பட்டு, அவனை மீட்க பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் முயற்சி எடுத்து பலனளிக்காமல் போகவே, தீயணைப்புத் துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது. அவர்களது முயற்சியிலும் முன்னேற்றம் இல்லாத நிலையில், தேசிய பேரிடர் மீட்புப் படை அந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது. 

ஆழ்துளைக் கிணறு

150 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் பதேவீர் விழுந்து ஏறக்குறைய 4 நாள்கள் ஆகிவிட்ட நிலையில், மீட்புப் பணியில் பல்வேறு தொழில்நுட்ப சிக்கல்கள் எழுந்திருப்பதாகச் சொல்கிறார்கள். ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த அந்தச் சிறுவனுக்கு இதுவரை உணவு, தண்ணீர் என எதுவும் கொடுக்க முடியவில்லை. அந்தப் பகுதியில் முகாமிட்டுள்ள மருத்துவக் குழு, குழாய் மூலம் ஆக்ஸிஜன் அளித்து வருகிறது. அந்தக் குழிக்கு அருகிலேயே மற்றொரு குழியைத் தோண்டிவரும் மீட்புக் குழுவினர், சிறுவன் சிக்கியிருக்கும் தூரத்துக்கு சென்றவுடன், கிடைமட்டமாகத் துளையிட்டு, அவனை மீட்கும் வகையில் பணிகளை முடுக்கிவிட்டிருக்கின்றனர். 36 இன்ச் அகலத்தில் தோண்டப்பட்டுவருகிறது. அதேநேரம், சிறுவனை மீட்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் அலட்சியமாகச் செயல்பட்டுவருவதாகவும், 90 மணி நேரம் கடந்தும் இதுவரை சிறுவன் மீட்கப்படவில்லை என்று கூறி அந்த கிராம மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்திவருகிறார்கள். இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்புப் பணிக்காக போலீஸார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். 

ஆழ்துளைக் கிணறு

இதுகுறித்து பேசிய காவல் துணை ஆணையர் ஞான்சியம் தோரி, `ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியிருக்கும் சிறுவனுக்கு குழாய்மூலம் ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டுவருகிறது. அதேபோல், அந்தச் சிறுவனின் செயல்பாடுகள் அனைத்தும் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது' என்றார். இந்த விவகாரம், பஞ்சாப் மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டிருப்பதாவும், பதேவீர் பத்திரமாக மீட்கப்படுவான் என்றும் அம்மாநில முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தெரிவித்திருக்கிறார். இன்று பதேவீருக்கு இரண்டாவது பிறந்தநாள் என்று கூறி கலங்குகின்றனர் அவரது பெற்றோர்.

ஆழ்துளைக் கிணறு

மீட்புப் பணியில், தேசிய பேரிடர் மீட்புப் படை, இந்திய ராணுவம், மாவட்ட நிர்வாகத்தைச் சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் என 26 பேர் இரவு, பகலாக ஈடுபட்டுவருகிறார்கள். இதுதவிர சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் ஆகியோரும் அவர்களுக்கு உதவிவருகிறார்கள். 150 அடி ஆழக் கிணற்றில் 110 அடி ஆழத்தில் பதேவீர் சிக்கியிருப்பதாக மீட்புப் படையினர் நம்புகிறார்கள். அவன், அதிக ஆழத்துக்குச் சென்றுவிடாமல் இருக்க கயிறு மூலம் கட்டப்பட்டிருப்பதாகவும் மீட்புக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடித்திருந்த 'அறம்' படத்தின் அடிநாதமே, ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியிருக்கும் சிறுவனை மீட்பதுதான். அதேபோன்று ஒரு சம்பவம் இப்போது பஞ்சாபில் நடந்திருக்கிறது.