புதிய கல்விக்கொள்கை... புது நுழைவுத்தேர்வு... புது அபாயமா? | New education policy to introduce new entrance exams

வெளியிடப்பட்ட நேரம்: 15:19 (11/06/2019)

கடைசி தொடர்பு:15:19 (11/06/2019)

புதிய கல்விக்கொள்கை... புது நுழைவுத்தேர்வு... புது அபாயமா?

"கஸ்தூரி ரங்கன் கமிட்டி இப்போது கொடுத்திருப்பது வெறும் பரிந்துரைகள் மட்டும்தான். அதுவே இறுதிக் கொள்கையோ, அரசின் முடிவோ அல்ல!”

புதிய கல்விக்கொள்கை... புது நுழைவுத்தேர்வு... புது அபாயமா?

நுழைவுத்தேர்வு... இது கடந்த சில ஆண்டுகளாகச் சமூக மற்றும் அரசியல் களத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) கட்டாயமாக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்ட பின், நுழைவுத்தேர்வு குறித்த விவாதங்கள் மேலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இந்த ஆண்டு நீட் தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, அதில் போதிய மதிப்பெண் பெற முடியவில்லையே என்ற வருத்தத்தில் தமிழகத்தில் அடுத்தடுத்து மூன்று மாணவிகள் தற்கொலை செய்துகொண்டனர். நீட் தேர்வு அறிமுகப்படுத்தியதில் இருந்து, கடந்த மூன்று ஆண்டுகளாகவே இத்தகைய தற்கொலைச் சம்பவங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்த நிலையில் 'அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் கீழ்வரும் அரசுக் கல்லூரிகளில் எல்லா இளங்கலைப் படிப்புகளிலும் மாணவர்கள் சேர்வதற்குத் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும்' என்ற பரிந்துரை புதிய தேசிய வரைவுக் கல்விக்கொள்கையில் இடம்பெற்றுள்ளது. இதனால் புதிய கல்விக் கொள்கை மீதான சர்ச்சைகள் மேலும் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன. 

அரசு கல்லூரி - கல்வி

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் புதிய வரைவுக் கல்விக்கொள்கை குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்து, அவை சர்ச்சைகளாக எதிரொலித்துக்கொண்டிருக்கும் சூழலில், அந்தக் கொள்கையில் இடம் பெற்றுள்ள மும்மொழிக் கொள்கை குறித்த பரிந்துரையும் தமிழகத்தில் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இருமொழிக் கொள்கை ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சூழ்நிலையில் மும்மொழிக் கொள்கை கொண்டுவரும் இத்தகைய முயற்சிகளைத் தமிழகம் கடுமையாக எதிர்த்தது. பல்வேறு அரசியல் கட்சிகளும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. மேற்கு வங்காளம் உள்ளிட்ட வேறு பல மாநிலங்களிலும் எதிர்ப்புக்குரல்கள் எழுந்ததால் 'இந்தி மொழி கட்டாயமில்லை' என்ற திருத்தம் வரைவுக் கொள்கைக்கான பரிந்துரை அறிக்கையில் உடனடியாக மாற்றப்பட்டது. இந்த நிலையில் 'இந்தியா முழுமைக்கும் உள்ள அரசுப் பல்கலைக்கழகங்கள், அரசுக் கல்லூரிகளில் உள்ள இளங்கலைப் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு தேசிய அளவில் பொதுநுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும்' என வைக்கப்பட்டுள்ள பரிந்துரையும் 'நீட்'  தேர்வு போன்ற பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கிறார்கள் கல்வியாளர்கள்.

'அரசுக் கல்லூரிகளில் சேர்வதற்கு பொது நுழைவுத்தேர்வு' என்னும் பரிந்துரை ஒருவேளை ஏற்றுக்கொள்ளப்படும்பட்சத்தில், அடுத்த கல்வியாண்டு முதல் அதற்கான நுழைவுத் தேர்வுமுறை அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது. அப்படி நடத்தப்படும் நுழைவுத்தேர்வானது, 'அமெரிக்காவில் உள்ள கல்லூரிகளில் சேர்வதற்கு நடத்தப்படும் எஸ்.ஏ.டி (SAT- standardised Aptitude Test) தேர்வுகளுக்கு இணையானதாக இருக்கும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு மற்றும் ஐ.ஐ.டி, என்.ஐ.டி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு ஜே.இ.இ போன்ற தேர்வுகளை நடத்திவரும் தேசிய தேர்வு நிறுவனம் - என்.டி.ஏ (National Testing Agency) அமைப்புதான், இந்தத் தேர்வையும் நடத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நுழைவுத் தேர்வானது, பல்வேறு மொழிகளில் நடத்தப்படும் என்றும், தேர்வுக்குத் தயார்செய்வதற்கான புத்தகங்கள் அனைத்து மொழிகளிலும் வழங்கப்படும் என்றும் கல்விக்கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாரியப்பன்

இதுகுறித்துப் பேசிய இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மாரியப்பன், “பாடத் திட்டங்களில் பல வேறுபாடுகள் உள்ள சூழலில் ஒரே மாதிரியான தேர்வு என்பது மாணவர்களுக்கு அநீதியாகத்தான் அமையும். அதற்கு ஓர் முன்னுதாரணம் இந்த வருடம் நடத்தப்பட்ட நீட் தேர்வை எடுத்துக் கொள்ளலாம். அரசுப் பள்ளிகளில் பயின்ற ஒரு மாணவருக்குக்கூட, அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இது மாதிரியான தேர்வு முறைகளைக் கொண்டு வருவதன் அடிப்படை நோக்கமே கல்வி நிலையங்களைத் தனியாரிடம் ஒப்படைப்பதற்குத்தான். '2014-ம் ஆண்டு அமைக்கப்பட்ட சுப்ரமணியன் கமிட்டி புதிய கல்விக் கொள்கையின் உள்ளீடுகள்' என ஒரு அறிக்கையை வெளியிட்டபோது, அதற்கு நிறைய எதிர்ப்புகள் கிளம்பின. அதன் பின்னர்தான் கஸ்தூரி ரங்கன் தலைமையில் புதிய கமிட்டி அமைக்கப்பட்டது. அந்தக் கமிட்டிதான் தற்போது புதிய வரைவுக் கல்விக்கொள்கையைப் பரிந்துரை செய்து அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

எனினும், கஸ்தூரி ரங்கன் கமிட்டி என்பதே சுப்ரமணியன் கமிட்டியின் நீட்சியாகத்தான் உள்ளது. யோகா கட்டாயம், இந்தி திணிப்பு போன்றவற்றின் வாயிலாகப் புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் பி.ஜே.பி-யின் கொள்கைகளைத் திணிப்பதற்குத்தான் முயல்கிறார்களே தவிர, வேறெந்த முன்னேற்றமும் இல்லை. உயர் கல்வி நிறுவனங்களில் முன்னாள் மாணவர்கள், தேர்வு செய்த தலைப்புகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால், தற்போது கல்வி நிறுவனங்கள் கொடுக்கும் தலைப்பின் கீழ்தான் ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்ள முடியும் என்ற நிலை உள்ளது. அரசுக் கல்வி நிலையங்களைத் திட்டமிட்டு ஒழிப்பதுதான் இதுபோன்ற நுழைவுத்தேர்வுகளைக் கொண்டு வருவதன் நோக்கம்” என்றார்.

நுழைவுத் தேர்வு - கல்விக் கொள்கை

பி.ஜே.பி-யைச் சேர்ந்த நாராயணன் திருப்பதி, “கல்விக் கொள்கைகள் என்பது தொடர் நிகழ்வுகள்தான். இப்போது சர்ச்சையாகப் பேசப்பட்டு வரும் இந்தி சம்பந்தமான விஷயங்கள்கூட 1984, 1996, 2005 எனக் கடந்த காலகட்டங்களிலும் இடம்பெற்றிருந்தவைதான். ஆனால், இவற்றைச் சிலர் இப்போது வேண்டுமென்றே  ஊதிப் பெரிதாக்குகிறார்கள். இதே விஷயங்கள்தான் இதற்கு முன்பு இருந்த கல்விக் கொள்கையிலும் இடம்பெற்றிருந்தன. ஆனால், அப்போது எதிர்ப்பு தெரிவிக்காதவர்கள், தற்போது எதிர்ப்பு தெரிவிப்பது வேடிக்கையாக உள்ளது. இதிலிருந்து, 'மக்களை எதிர்க்கட்சிகள் அரசியல் நோக்கத்துக்காகத் தூண்டிவிடுகிறார்கள்' என்றுதான் அர்த்தம். தவிர, கஸ்தூரி ரங்கன் கமிட்டி இப்போது கொடுத்திருப்பது வெறும் பரிந்துரைகள் மட்டும்தான். அதுவே இறுதிக் கொள்கையோ, அரசின் முடிவோ அல்ல” என்றார்.

 கல்வி மற்றும் உயர் கல்வி என்பது அரசின் முடிவு சார்ந்தது மட்டுமல்ல; மாணவர்களின் வாழ்வு சார்ந்ததுமாகும்.


டிரெண்டிங் @ விகடன்