`ஆரம்பமே அமைச்சர்களுக்கு கிலி!'- முதல் கூட்டத்தில் ஜெகன் அதிரடி | Chief Minister YS Jagan Mohan Reddy’s first ever Cabinet meeting held yesterday

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (11/06/2019)

கடைசி தொடர்பு:16:23 (14/06/2019)

`ஆரம்பமே அமைச்சர்களுக்கு கிலி!'- முதல் கூட்டத்தில் ஜெகன் அதிரடி

ஜெகன்மோகன் ரெட்டி புதிய முதல்வராகப் பதவியேற்ற பிறகு, முதல்முதலாக அமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திராவின் புதிய முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பொறுப்பேற்ற பிறகு, அம்மாநிலத்தில் புதிதாகப் பதவியேற்றுள்ள அமைச்சர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. முதல்வருடன் சுமார் ஆறு மணி நேரம் நடந்த கூட்டத்தில், அமைச்சர்களுக்கு பல ஸ்ட்ரிக்ட் ஆர்டர்கள் விதிக்கப்பட்டுள்ளன.

ஜெகன்மோகன் ரெட்டி

குறிப்பாக, அமைச்சர்கள் யாரும் ஊழலில் ஈடுபடுவதாகச் செய்திகள் வெளிவந்தால் உடனடியாக அவர்கள்மீது விசாரணை கமிஷன் வைக்கப்படும் என்றும், அதிலும் குற்றம் உறுதியானால், கேள்வி இல்லாமல் அமைச்சர்களின் பதவி பறிக்கப்படும் என எச்சரித்துள்ளார். இது மட்டுமல்லாது தேர்தலின்போது தங்கள் கட்சி சார்பில் வழங்கப்பட்ட தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள திட்டங்களை நிறைவேற்றுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கிராம, நகர்ப் புறங்களில் உள்ள 10-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்துள்ளவர்கள், இளைஞர்களுக்கு ஆந்திர அரசு அழைப்பு விடுத்துள்ளது. தன்னார்வலர்களாகச் சேரும் அவர்கள்தான் அரசின் அனைத்துப் பணிகளையும் செய்யவுள்ளனர். கிராமம் மற்றும் பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் நேரடியாகச் சென்று, அரசின் திட்டங்களைச் சேர்க்க உள்ளனர். 

ஆந்திர அமைச்சரவைக் கூட்டம்

விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன் வழங்கப்படும் என்ற ஜெகனின் திட்டம் அமைச்சரவை கூட்டத்தில் கையெழுத்தாகியுள்ளது. விவசாயிகளுக்கு வழங்கும் கடனை வட்டி இல்லாமல் வழங்க வேண்டும். அவர்களுக்காக அரசே வங்கிக்கு வட்டி செலுத்தும். அதற்காக அனைத்து வங்கிகளுடனும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. வட்டி செலுத்தியதும் வங்கி வழங்கும் ரசீது, ஆந்திரா முழுவதும் உள்ள தன்னார்வலர்கள் மற்றும் இளைஞர்கள் மூலம் அனைத்து விவசாயிகளுக்கும் நேரடியாக வழங்கப்பட உள்ளது.

ரேஷன் கார்டு உள்ளவர்கள், மாதாமாதம் ஐந்து முதல் ஆறு பொருள்களை வாங்குகின்றனர். அவர்கள் வாங்கும் பொருள்களையும் இளைஞர்களை வைத்து இனி மக்களின் வீட்டுக்கே நேரடியாக அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

ஆந்திர அமைச்சரவைக் கூட்டம்

 

 

ஆந்திராவைப் பொறுத்தவரை வெள்ளை மற்றும் பிங்க் என இரண்டு ரேஷன் கார்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. 'வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் வெள்ளை நிற ரேஷன் அட்டை பயன்படுத்துகின்றனர். அப்படி வெள்ளை நிற ரேஷன் அட்டைகள் பயன்படுத்தும் தாய்மார்கள், தங்கள் வீட்டில் உள்ள அனைத்து குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பினால், ஒரு குடும்பத்துக்கு வருடம் 15,000 ரூபாய் வழங்கப்படும்' என தன் ப்ரஜா சங்கல்ப யாத்ராவின்போது ஜெகன் அறிவித்திருந்தார். இது தொடர்பாகவும் கூட்டத்தில்  விவாதிக்கப்பட்டது.  ஆந்திரா முழுவதும் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில், 200 இலவச ஆழ்துளைக் கிணறு தோண்டவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது தவிர, இன்னும் பல திட்டங்கள் தொடர்பாகவும் அவற்றை நடைமுறைப்படுத்தும் விதம் தொடர்பாகவும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. 


அதிகம் படித்தவை