``வேற்றுக்கிரகவாசிகளால் கடத்தப்பட்டதா AN 32 விமானம்?” - வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் | indian airforce located missing flight; and also burst alien theory

வெளியிடப்பட்ட நேரம்: 20:28 (11/06/2019)

கடைசி தொடர்பு:20:28 (11/06/2019)

``வேற்றுக்கிரகவாசிகளால் கடத்தப்பட்டதா AN 32 விமானம்?” - வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

கடந்த ஜூன் 3ம் தேதி அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து மாயமான AN 32 ரக விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. விமானத்தில் பயணித்தவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

ரஷ்ய தயாரிப்பான AN 32 ரக விமானங்கள், ராணுவ வீரர்கள், போர்க் கருவிகளை ஏற்றிச் செல்ல இந்திய விமானப்படையால் பயன்படுத்தப்படுகின்றன. இந்திரா காந்தி காலத்தில் கொண்டுவரப்பட்ட இவ்விமானங்கள், மிகப் பழைமையாகிவிட்டது என்றும், அவற்றை எடுத்துவிட்டு புதிய ரக விமானங்களைக் கொண்டுவர வேண்டுமென்றும் அவ்வப்போது ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், கடந்த ஜூன் 3-ம் தேதி அஸ்ஸாம் மாநிலம் ஜோர்காட் நகரிலிருந்து, அருணாசலப் பிரதேசத்தின் மெசூகா உயர்மட்ட விமான தளத்துக்குப் பயணித்த AN 32 ரக விமானம் மாயமானது. இவ்விமானத்தில் விமானப்படையைச் சேர்ந்த எட்டுப் பேரும், ஐந்து பயணிகளும் பயணித்துள்ளனர். பயணத்தைத் தொடங்கிய 33 நிமிடங்களில் மாயமான விமானத்தைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது.

மெசூகா கிராமம் அருணாச்சலப் பிரதேசம்

AN 32 விமானம் பயணித்த பாதை மலை சூழ்ந்த அடர்ந்த வனப்பகுதி என்பதால், இந்திய செயற்கைக்கோள்களால் கூட ஒருகட்டத்துக்கு மேல் ஊடுருவித் தேடுதல் பணியைச் செய்ய முடியவில்லை. சுகாய் 30 ரக போர் விமானங்களும் தேடுதல் வேட்டையில் களமிறக்கப்பட்டன. விமானத்தைப் பற்றித் தகவல் தருவோருக்கு ஐந்து லட்ச ரூபாய் சன்மானம் தரப்படும் என இந்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், இந்திய விமானப்படையின் எம்.ஐ.17 ரக ஹெலிகாப்டர் ஒன்று, உடைந்த AN 32 விமானத்தின் உடைந்த பாகங்களை கண்டுபிடித்துள்ளது. இதை இந்தியவிமானப்படையும் அதிகாரபூர்வமாக உறுதி செய்துள்ளது.

அருணாசலப் பிரதேசத்தின் டாடோ நகரின் தென்கிழக்கே 16 கி.மீ. தொலைவில் இப்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விமானத்தில் பயணித்த 13 பேரின் நிலை என்னவானது என்பது தெரியவில்லை. அடர்ந்த வனப்பகுதி என்பதால், மீட்புப் பணி அவ்வளவு சுலபமாக இருக்காது என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே வட இந்திய ஊடகம் ஒன்று, AN 32 விமானத்தை வேற்றுக்கிரகவாசிகள் கடத்திச் சென்றுவிட்டதாக அதிரடி செய்தி ஒன்றை வெளியிட்டது. AN 32 பயணித்த போது, மேலே வந்த வேற்றுக்கிரவாசிகளின் விண்கலம், நமது விமானத்தை அப்படியே தூக்கிக்கொண்டு சென்றுவிட்டதாகச் செய்தி வெளியிட்டனர்.

 

சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை உருவாக்கிய இச்செய்தி, தவறானது என்பது இந்திய விமானப்படையின் அறிவிப்பால் தற்போது உறுதியாகியுள்ளது. செய்தி வெளியிட்ட அந்நிறுவனத்தை ‘நெட்டிசன்’கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.