`மலைவாழ் மக்கள் கொடுத்த அந்த க்ளூ' - 8 நாள்களுக்குப் பிறகு AN 32 விமானம் கிடைத்த பின்னணி! | AN-32 aircraft has been found in the same line of sight as described by a villager

வெளியிடப்பட்ட நேரம்: 08:29 (12/06/2019)

கடைசி தொடர்பு:08:29 (12/06/2019)

`மலைவாழ் மக்கள் கொடுத்த அந்த க்ளூ' - 8 நாள்களுக்குப் பிறகு AN 32 விமானம் கிடைத்த பின்னணி!

8 நாள்களுக்குப் பிறகு AN 32 விமானம் கிடைத்துள்ளது என விமானப்படை அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது.

AN 32 விமானம்

அஸ்ஸாம் மாநிலம் ஜோர்காட் நகரிலிருந்து, அருணாசலப் பிரதேசத்தின் மெசூகா உயர்மட்ட விமான தளத்துக்கு கடந்த ஜூன் 3-ம் தேதிப் பயணித்த AN 32 ரக விமானம் மாயமானது. இவ்விமானத்தில் விமானப்படையைச் சேர்ந்த எட்டுப் பேரும் ஐந்து பயணிகளும் பயணித்துள்ளனர். பயணத்தைத் தொடங்கிய 33 நிமிடங்களில் விமானம் மாயமானதால் அதைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. AN 32 விமானம் பயணித்த பாதை மலை சூழ்ந்த அடர்ந்த வனப்பகுதி என்பதால், இந்திய செயற்கைக்கோள்களால்கூட ஒருகட்டத்துக்கு மேல் ஊடுருவித் தேடுதல் பணியைச் செய்ய முடியவில்லை. சுகாய் 30 ரக போர் விமானங்களும் தேடுதல் வேட்டையில் களமிறக்கப்பட்டன. விமானத்தைப் பற்றித் தகவல் தருவோருக்கு ஐந்து லட்ச ரூபாய் சன்மானம் தரப்படும் என இந்திய அரசு அறிவித்தது. 

இந்நிலையில் எட்டு நாள்களுக்குப் பிறகு, இந்திய விமானப்படையின் எம்.ஐ.17 ரக ஹெலிகாப்டர் ஒன்று, AN 32 விமானத்தின் உடைந்த பாகங்களைக் கண்டுபிடித்துள்ளது. இதை இந்தியவிமானப்படையும் அதிகாரபூர்வமாக உறுதி செய்துள்ளது. அருணாசலப் பிரதேசத்தின் டாடோ நகரின் தென்கிழக்கே 16 கி.மீ தொலைவில் இப்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விமானத்தில் பயணித்த 13 பேரின் நிலை என்னவானது என்பது தெரியவில்லை. அடர்ந்த வனப்பகுதி என்பதால், மீட்புப் பணி அவ்வளவு சுலபமாக இருக்காது என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உடைந்த பாகங்கள்

கிராம மக்களின் க்ளூ!

அருணாசலப் பிரதேச கிராம மக்கள் அளித்த க்ளூ விமானத்தைக் கண்டுபிடிக்க உதவியது என சியாங் மாவட்ட போலீஸ் அதிகாரி கூறுகையில், ``பாயம் என்ற கிராமத்தைச் சேர்ந்த தாசம் என்பவர் அளித்த தகவல் மிக உதவியதாக இருந்தது. அன்றைய தினம் விமானம் தாழ்வாகப் பறந்ததை அவர் பார்த்துள்ளார். இவர் மட்டுமல்ல விமானம் தொலைந்த மறுநாளே டம்பின் பஸ்டி கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேர் மலைப்பகுதியில் புகை வருவதைக் கண்டுள்ளனர். 

அவர்கள் கொடுத்த இந்தத் தகவலின் அடிப்படையில்தான் முதல்கட்ட தேடுதலே தொடங்கியது. ஆனால், அவர்கள் சொன்ன தூரம் சரியாக இல்லாததால் அங்கு செல்ல காலதாமதம் ஏற்பட்டது. இருப்பினும் தொடர்ந்து அவர்கள் அளித்த க்ளூ மற்றும் உதவியால்தான் விமானத்தைக் கண்டுபிடிக்க முடிந்தது" என்றார். விமானத்தின் பாகங்களை மீட்கும் பணி பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தொடங்கியுள்ளது. விமானத்தில் இருந்தவர்கள் நிலை என்ன என்பது தெரியாததால் கூடுதல் பதற்றம் தொற்றியுள்ளது.

இந்திரா காந்தி காலம்!

AN 32 விமானம் பழையதாகிவிட்டது இதனால்தான் அடிக்கடி இதுபோன்ற விபத்துகளில் சிக்கிக்கொள்கிறது என்பது குற்றச்சாட்டாகக் கூறப்பட்டு வருகிறது. AN 32 ரக விமானம் ஒரு ரஷ்ய தயாரிப்பு. இந்திரா காந்தி காலத்தில் ராணுவ வீரர்கள், போர்க் கருவிகளை ஏற்றிச் செல்ல இந்திய விமானப்படைக்காக ரஷ்யாவிடமிருந்து இந்த ரக விமானங்கள் வாங்கப்பட்டது. இதனால் இவ்விமானங்கள், மிகப் பழைமையாகிவிட்டது என்றும், அவற்றை எடுத்துவிட்டு புதிய ரக விமானங்களைக் கொண்டுவர வேண்டுமென்றும் ஒவ்வொரு முறையும் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க