`48 மணி நேரத்தில் 36 குழந்தைகள் பலி; 133 பேர் அட்மிட்!'- பீகாரை அச்சுறுத்தும் மூளைக் காய்ச்சல் | 36 children have died in Bihar in the last 48 hours

வெளியிடப்பட்ட நேரம்: 12:51 (12/06/2019)

கடைசி தொடர்பு:11:49 (16/06/2019)

`48 மணி நேரத்தில் 36 குழந்தைகள் பலி; 133 பேர் அட்மிட்!'- பீகாரை அச்சுறுத்தும் மூளைக் காய்ச்சல்

பீகார் மாநிலம் முசாஃபர்பூர் மாவட்டத்தில் திடீரென நிறைய குழந்தைகள் உடல் நலக்குறைவு காரணமாகத் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவமனை கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட 133 குழந்தைகள் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனப் பின்னர் நடந்த சோதனையில் தெரியவந்துள்ளது. 

குழந்தைகள்

அவர்களில் கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் சுமார் 36 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சிகர தகவலும் கூறப்பட்டுள்ளது. முதலில் கிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 14 குழந்தைகள் இறந்ததாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது அது 36 ஆக உயர்ந்துள்ளது. குழந்தைகள் அனைவரும் கைபோகிலைசிமியா (hypoglycemia) என்ற, ரத்தத்தில் குளுகோஸ் குறைந்துள்ள நோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

பீகார்

இதுபற்றி பேசிய மருத்துவர் சஹி, ``குழந்தைகள் எதற்காக இறந்தார்கள் என்பது பற்றி முறையான ஆராய்ச்சி நடத்த வேண்டும். நாங்கள் கண்டுபிடித்தவரை இறந்த குழந்தைகள் அனைவரும் 90 சதவிகிதம் ரத்தத்தில் குளுகோஸ் குறைந்துள்ளது. இதனால் மற்ற அனைத்து குழந்தைகளும் தனி வார்ட்டில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே கிராமப்புறத்தைச் சேர்ந்த குழந்தைகள்” எனக் கூறியுள்ளார். 

முசாஃபர்பூர் மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் கோடைக்காலங்களில் அந்த நோய் அதிகம் தாக்கப்படுவது வழக்கமாக உள்ளது. அதிலும் 15 வயதுக்குக் குறைவான குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மூளைக் காய்ச்சலால் அதிக குழந்தைகள் இறந்துள்ளனர். இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு இல்லாததும் பெரும் காரணமாகக் கூறப்படுகிறது.