செப் 25-ம் தேதி என்ன நடந்தது, யார் காரை ஓட்டியது? - மர்ம முடிச்சுகளால் சூழப்பட்டுள்ள பாலபாஸ்கர் மரணம்! | mystery remains in balabhaskars death

வெளியிடப்பட்ட நேரம்: 13:46 (12/06/2019)

கடைசி தொடர்பு:13:46 (12/06/2019)

செப் 25-ம் தேதி என்ன நடந்தது, யார் காரை ஓட்டியது? - மர்ம முடிச்சுகளால் சூழப்பட்டுள்ள பாலபாஸ்கர் மரணம்!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல வயலினிஸ்ட்டும் இசையமைப்பாளருமான பாலபாஸ்கர் மரணத்தில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது. 

பாலபாஸ்கர்

பாலபாஸ்கர் கார் விபத்தானபோது வெளியான செய்திகளில் அவர்தான் கார் ஓட்டினார் என்றும் அவரின் டிரைவர் அர்ஜுன் காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தார் எனவும் கூறப்பட்டது. ஆனால், தற்போது பாலபாஸ்கரின் மனைவி மற்றும் காவலர்கள், டிரைவர்தான் காரை ஓட்டினார் என்றும் பாலபாஸ்கர் காரின் பின் இருக்கையில்தான் இருந்தார் என்றும் கூறியுள்ளனர். இது தொடர்பான முழுமையான தகவல் தெரியாமல் கேரள காவலர்கள் திண்டாடி வருகின்றனர்.

பாலபாஸ்கர் குடும்பம்

விபத்து

செப்டம்பர் 25, 2018-ம் ஆண்டு அதிகாலை கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள பல்லிபுரம் பகுதியில் பாலபாஸ்கரின் கார் சறுக்கி விபத்துக்குள்ளானது. பாலபாஸ்கர் குடும்பத்தினர் குருவாயூர் கோயிலுக்குச் சென்று திரும்பும்போது விபத்தில் சிக்கினர். இதன் பின்னர் பாலபாஸ்கர் அவரின் மனைவி லக்‌ஷ்மி, குழந்தை தேஜஸ்வினி மற்றும் கார் டிரைவர் அர்ஜுன் ஆகியோர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே குழந்தை உயிரிழந்தது.

பாலபாஸ்கர்

பாலபாஸ்கர் மரணம்

பாலபாஸ்கர், திருவனந்தபுரத்தில் உள்ள அனந்தபுரி மருத்துவமனையில் சுமார் ஒரு வாரம் ஐ.சி.யூ-வில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஒரு வாரத்துக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கார் விபத்தினால் அவரின் கழுத்து எழும்பு முறிந்து வயிற்று பகுதியில் பலத்த அடிபட்டதில் அவர் உயிரிழந்தார் எனக் கூறப்பட்டது. பின்னர் அவரது வீட்டில் நடந்த இறுதிச் சடங்கில் கேரள திரையுலகினர், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். தான் வாசித்த வயலினுடன் புதைக்கப்பட்டார் பாலபாஸ்கர். 

லக்‌ஷ்மி

முதல் சந்தேகம்

பாலபாஸ்கர் இறந்த பிறகு நவம்பர் மாதம்தான் அவரின் மனைவி லக்‌ஷ்மியும் டிரைவர் அர்ஜுனும் உடல்நலம் தேறினர். அதன் பின்னர் அவர்கள் இருவரிடமும் விபத்துக் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதில் லக்‌ஷ்மி கூறிய பதிலும், அர்ஜுன் கூறிய பதிலும் முற்றிலும் முரணாக இருந்துள்ளது. விபத்து ஏற்படும்போது அர்ஜுன்தான் வண்டியை ஓட்டினார் என லக்‌ஷ்மியும், விபத்து ஏற்படுவதற்குக் கொஞ்ச தூரம் முன்பிலிருந்து பாலபாஸ்கர்தான் காரை ஓட்டிவந்தார் என அர்ஜுனும் கூறியதால் பரபரப்பு தொடங்கியது. இதையடுத்து, விபத்தை நேரில் பார்த்தவர்களிடம் நடந்த விசாரணையிலும் இதே குழப்பம் நீடித்தது. பலரும் பலவித கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

உன்னி

பாலபாஸ்கர் தந்தை கருத்து

லக்‌ஷ்மி மற்றும் அர்ஜுனின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து பாலபாஸ்கரின் தந்தை உன்னி கேரள தலைமைக் காவல் அதிகாரியைச் சந்தித்து தன் மகன் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும் அதை குற்றவியல் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். விபத்து தொடர்பாக உன்னி, ``குருவாயூர் கோயிலுக்குச் சென்ற பாலபாஸ்கர் இரவு முழுவதும் தங்க அங்கேயே ஒரு ஹோட்டல் ரூம் புக் செய்துள்ளனர். ஆனால், அவர்கள் அங்கு தங்காமல் ஏன் அவ்வளவு சீக்கிரமாக திருவனந்தபுரம் திரும்ப வேண்டும். பாலக்காடு, பூந்தோட்டத்தில் உள்ள ஒரு ஆசிரமத்துக்கு பாலபாஸ்கர் நிறைய பணம் கொடுத்துள்ளார். இதுவரை பணம் திரும்பி வரவில்லை’ என்றும் கூறினார். 

தங்கக் கடத்தல் 

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விமான நிலையத்தில் யாரோ இருவர் தங்கம் கடத்தி வருவதாக வருவாய் புலனாய்வுத் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதன்படி கடந்த மாதம் 29-ம் தேதி விமானநிலையத்தைச் சுற்றி வளைத்த அதிகாரிகள், ஐ.டி ஊழியர்கள் இருவரைக் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் கைது செய்யப்பட்டவர் ப்ரகாஷன் தம்பி மற்றும் விஷ்ணு என்பது தெரியவந்துள்ளது. இவர்களுடன் சேர்த்து இன்னும் ஆறு பேரும் கைது செய்யப்பட்டனர். 

பிரகாஷன் தம்பியிடம் நடந்த விசாரணையில் அவர் தன் முந்தைய தொழில் பற்றித் தெரிவித்துள்ளார். அப்போது கேரள விபத்தில் இறந்த, வயலின் கலைஞர் பாலபாஸ்கரை தனக்கு நன்றாகத் தெரியும் என்றும் தான் அவரிடம் மேலாளராக பணியாற்றியுள்ளேன் எனவும் கூறியுள்ளார். இதன் பின்னர்தான் பாலபாஸ்கர் மரணத்தில் உச்சக்கட்ட சந்தேகம் வலுத்தது.

தங்க கடத்தல்

பின்னர், ‘ பாலபாஸ்கருக்கு மேனஜர்கள் யாரும் இல்லை என்றும் கைது செய்யப்பட்டவர்கள் பாலாவின் இசை நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்பாளர்கள். கடத்தலுக்கும் பாலாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஒரு இறந்த கலைஞரை தேவையில்லாமல் இந்த வழக்கில் இழுப்பது மிகவும் வருத்தமாக உள்ளது’ என லக்‌ஷ்மி தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

``பாலபாஸ்கர் விபத்தில் உயிரிழந்தார் என்றுதான் அனைவரும் நம்பிக்கொண்டு இருக்கிறோம். ஆனால், தற்போது அவனுடன் பணிபுரிந்தவர்கள் தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதைப் பார்த்தால் என் மகன் கொலை செய்யப்பட்டானா எனச் சந்தேகம் எழுகிறது. சந்தேகம் வெறும் கைதோடு நிற்கவில்லை. கார் விபத்துக்குள்ளாவதற்கு முன்னதாக பாலபாஸ்கர் இறுதியாக ப்ரகாஷனுடன்தான் போனில் பேசியுள்ளார். விபத்துக்குப் பிறகு சம்பவ இடத்தை முதலில் அடைந்தது ப்ரகாஷன் தம்பியும் விஷ்ணுவும்தான். பாஸ்கர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கும் ப்ரகாஷன் தம்பிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பாஸ்கர் இறந்த பிறகு அவர்கள் எங்கள் வீட்டில் யாரையும் வந்து சந்திக்கவில்லை” எனக் கூறினார்.

பாலபாஸ்கர் குடும்பம்

சோபி ஜார்ஜ் வாக்குமூலம்

இந்த விவகாரத்துக்கு இடையில் பாலபாஸ்கருடன் பணிபுரிந்த ஒலிப்பதிவு கலைஞர் சோபி ஜார்ஜ் தன் வாக்குமூலத்தை போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். அதில் பாலபாஸ்கர் கார் விபத்துக்குள்ளானதும் எனக்கு போன் வந்தது. அதைக் கேட்ட அடுத்த 10-வது நிமிடத்தில் நான் சம்பவ இடத்தை அடைந்தேன். நான் அங்கு செல்லும் முன்பே அங்கு இருவர் இருந்தனர். அதில் ஒருவர் என்னைப் பார்த்ததும் அங்கிருந்து ஓடிவிட்டார். மற்றொருவர் அருகில் நிறுத்தப்பட்டிருந்த தன் இருச்சக்கர வாகனத்தைத் தள்ளிக்கொண்டு சென்றார். அவர் பிரகாஷன் தம்பியாக இருக்கலாம் எனக் கூறிவிட்டு பின்னர் அதை மறுத்துள்ளார்.

பாலபாஸ்கர் மரணத்தில் இப்படித் தொடர் சிக்கல்கள் நிலவி வருவதால் காவலர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். முதலில் யார் காரை ஓட்டிவந்தது என்பதை உறுதிப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள அவர்கள் தடயவியல் சோதனைக்காகக் காத்திருக்கிறார்கள். மேலும், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதும் டிரைவர் அர்ஜுன் கிழக்கு இந்தியா பகுதிக்குச் சென்றுவிட்டார் எனவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.