‘என் வாயில் சிறுநீர் கழித்தார்கள்’ - உ.பி. காவலர்களால் பத்திரிகையாளருக்கு நேர்ந்த கொடுமை | journalist was beaten up by GRP personnel in Shamli

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (12/06/2019)

கடைசி தொடர்பு:16:00 (12/06/2019)

‘என் வாயில் சிறுநீர் கழித்தார்கள்’ - உ.பி. காவலர்களால் பத்திரிகையாளருக்கு நேர்ந்த கொடுமை

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்துக்கு அருகில் உள்ளது திமன்புரா. அங்கு சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டதாக ஆங்கில செய்தி நிறுவனத்துக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அந்த நிறுவனத்தைச் சேர்ந்த அமித் வர்மா என்ற உள்ளூர் பத்திரிகையாளர் செய்திசேகரிப்பதற்காகச் சென்றுள்ளார்.

பத்திரிகையாளர்

அவரைக் கண்ட ரயில்வே போலீஸார், சம்பவ இடத்துக்கு அருகில் வரக்கூடாது எனத் தடுத்துள்ளனர். இதையடுத்து, ரயில் தடம் புரண்டதை வீடியோ எடுக்கக் கூடாது என்றும் கூறியுள்ளனர். இதனால் ஏற்பட்ட மோதல் முற்றவே, ரயில்வே போலீஸார் அமித்தை அடித்து உதைத்துள்ளனர். அவரைக் கைதுசெய்து, அருகில் உள்ள காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று சிறையில் அடைத்துள்ளனர். பின்னர், அங்கிருந்த மற்ற ரயில்வே போலீஸாரும் பத்திரிகையாளரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். 

பத்திரிகையாளர்

அமித் இரவு முழுவதும் சிறையிலேயே அடைக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவல் அறிந்த சக பத்திரிகையாளர்கள் காவல் நிலையத்தின் முன்பு போராட்டம் நடத்தியதை அடுத்து, அவர் விடுவிக்கப்பட்டார். பத்திரிகையாளரைச் சிலர் அடிக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

பத்திரிகையாளர்

இதுபற்றிப் பேசியுள்ள அமித் வர்மா, “ நான் செய்தி சேகரிக்கத்தான் அங்கு சென்றேன். அவர்கள், காவலர் உடையில் இல்லாமல் இருந்ததால் நான் விவரம் கேட்டேன். அதில் கடுப்பான அவர்கள், என் கேமராவைத் தட்டிவிட்டனர். அதை எடுக்க நான் குனிந்தபோது என்னைச் சரமாரியாகத் தாக்கினர். பின்னர், என் கைகளைப் பூட்டிவிட்டு வாயில் சிறுநீர் கழித்தனர். தொடர்ந்து சிறையில்வைத்து அடித்தனர்” என்று தெரிவித்துள்ளார். 

இந்த விவகாரம் தொடர்பாக ராகேஷ் குமார், சஞ்சய் ஆகிய ரயில்வே போலீஸார் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இது பற்றி விரிவான விசாரணை நடத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.