நீட் தேர்வு கடந்து வந்த பாதை! #VikatanInfographics #LetsLearn | The Journey of NEET Exam, A detailed discussion

வெளியிடப்பட்ட நேரம்: 20:07 (12/06/2019)

கடைசி தொடர்பு:20:07 (12/06/2019)

நீட் தேர்வு கடந்து வந்த பாதை! #VikatanInfographics #LetsLearn

நீட் தேர்வு தமிழகத்தில் எப்போதுமே விவாதத்துக்குரிய விஷயம்தான். நீட் தேர்வு எப்படி, எப்போது வந்தது என்பது தொடங்கி இந்தியாவில் மற்றும் தமிழகத்தில் மொத்தம் எத்தனை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பார்க்கலாம்.

நீட் தேர்வு கடந்து வந்த பாதை! #VikatanInfographics #LetsLearn

ந்தியா முழுவதும் நடைபெற்ற 50-க்கும் மேற்பட்ட மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வுகளை ஒழுங்கு படுத்தும் வகையில், இந்திய மருத்துவ கவுன்சில் கடந்த 2012-ம் ஆண்டு நீட் தேர்வை அறிவித்தது. அதைத் தொடர்ந்து 2013-ம் ஆண்டு மே மாதம் 5-ம் தேதி நடத்தப்பட்டது. நீட் தேர்வுக்கு எதிராகத் தொடரப்பட்ட 115 வழக்குகளில், 2013-ம் ஆண்டு ஜூலை 18-ம் நாள் உச்சநீதிமன்றம் நீட் தேர்வுக்குத் தடை விதித்தது. மேல் முறையீட்டில், மீண்டும் 2016-ம் ஆண்டு ஏப்ரல்-11 அன்று உச்சநீதிமன்றம் நீட் தேர்வு மீதான தடையை விலக்கியது. இதன் காரணமாக அந்த வருடம் மே மாதம் நடந்த AIPMT தேர்வு, முதற்கட்ட நீட் தேர்வாக அறிவிக்கப்பட்டது. அதன் பின், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், தனியார் கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவ இடங்களில் 15 சதவிகித இடங்கள் 2016-2017 ஆண்டின் நீட் தேர்வுகள் மூலம் நிரப்பப்படும் என்று, 2016-ம் ஆண்டு மே 24-ம் தேதி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதைத் தொடர்ந்து நிரந்தரமாக நீட் தேர்வு நடத்தப்படுவதற்கான சட்டம் கடந்த 19, ஜூலை 2016-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அந்த ஆண்டு இரண்டாம் கட்டமாக நீட் தேர்வு நடத்தப்பட்டது. 

2016-ம் ஆண்டு அவசரச் சட்டத்தின் அடிப்படையில் தமிழகம் உட்பட நீட் தேர்வில் விருப்பமில்லை என்று சொல்லும் மாநிலங்கள் தங்களின் விருப்ப முறையில் அரசு ஒதுக்கீட்டு இடங்களை நிரப்பிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. தமிழகத்தில் நிரந்தர நீட் விலக்கு கோரப்பட்ட நிலையில் 2017-18-ம் ஆண்டு முதல் நீட் தேர்வு நடத்தப்பட்ட வருகிறது. 

2018 மற்றும் 2019-ம் ஆண்டில் இந்தியா மற்றும் தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களின் விவரங்கள் மற்றும் தகுதிபெற்றவர்களின் விவரங்களைப் பின்வரும் இன்ஃபோவில் காணலாம்:

நீட் தேர்வு எழுதியவர்களின் விவரங்கள்

2018-ம் ஆண்டில், தமிழ்நாட்டு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் 9,154 பேர் தேர்வு எழுதினார். அதில்  தகுதிபெற்றவர்கள் 1,337 பேர். அதைத் தொடர்ந்து இந்தாண்டு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் 17,630 பேர் தேர்வு எழுதினார். அதில்  தகுதிபெற்றவர்கள் 2,557 பேர். 

இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அதில் உள்ள இடங்கள் குறித்த விவரங்களைப் பின்வரும் இன்ஃபோவில் காணலாம்: 

இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் விவரம்

இந்தியாவில் உள்ள மொத்த மருத்துவக் கல்லூரிகள் 482. இதில் அரசு கல்லூரிகள் - 216, தனியார் கல்லூரிகள் - 247, மத்திய பல்கலைக்கழகங்கள் - 2. இரண்டும் உத்தர பிரதேசத்தில்தான் உள்ளன. AIIMS - 9 (ஆந்திரப்பிரதேசம், பீகார், சட்டீஸ்கர், டெல்லி, மத்தியப்பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், உத்தரகாண்ட்) மற்றும் JIPMER -2 (புதுச்சேரி) ஆகிய கல்லூரிகள் உள்ளன. இவற்றில், 30,455 அரசுக் கல்லூரிகளும், 36,165 தனியார் கல்லூரிகளிலும் இடங்கள் உள்ளன. AIIMS மற்றும் JIPMER-ல் 1,407 இடங்கள் உள்ளன. மத்திய பல்கலைக்கழகத்தில் 151 இடங்கள் உள்ளன.  

இதுதவிர இந்தியா முழுவதும், BDS படிப்புகளுக்கான 309 கல்லூரிகள் உள்ளன. இதில், 2,930 அரசுக் கல்லூரிகளிலும் 24,130 தனியார் கல்லூரிகளிலும் இடங்கள் இருக்கின்றன. உத்தர பிரதேசத்தில் அமைந்துள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் 88 இடங்கள் உள்ளன.  

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அதில் உள்ள இடங்கள் குறித்த விவரங்களை பின்வரும் இன்ஃபோவில் காணலாம்:

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் விவரம்

தமிழகத்தைப் பொறுத்தவரை 25 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. ஒரு அரசு  BDS கல்லூரி உள்ளது. 24 தனியார் மருத்துவக் கல்லூரிகளும், 28 தனியார்  BDS கல்லூரி உள்ளன. அரசு கல்லூரிகளில் 3,250  M.B;B.S இடங்களும், 100  B.D.S இடங்களும் உள்ளன. அதேபோல், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 3,600 M.B;B.S இடங்களும், 2,760  B.D.S இடங்களும் உள்ளன.

இந்தியாவில் இந்தாண்டு நீட் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 14,10,755. இதில் தகுதிபெற்றவர்களின் எண்ணிக்கை 7,97,042. ஏறத்தாழ 50 சதவிகித அளவில்தான் தேர்ச்சி அடைந்துள்ளனர். தகுதி பெற்ற அனைவருக்குமே இடம் கிடைத்துவிடப் போவதில்லை. காரணம் இருக்கும் மொத்த இடமே 66,771 தான். தகுதி பெற்ற ஏழு லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு இடம் கிடைக்கப் போவதில்லை என்பதே உண்மை. தமிழகத்தைப் பொறுத்தவரையும் இதே நிலைமைதான். தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 1,23,078, இதில் தகுதிபெற்றவர்களின் எண்ணிக்கை 59,785. ஆனால், தமிழகத்தில் அரசுக் கல்லூரிகளில் இருக்கும் இடங்களின் எண்ணிக்கை வெறும் 3,250 மட்டுமே. இதுபோக, தனியார் கல்லூரிகளில் உள்ள இடங்களின் எண்ணிக்கை 3,600. நீட் தேர்வில் தகுதி பெற்ற 59,785 நபர்களின் 52,935 நபர்களுக்குத் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கப் போவதில்லை என்பதே நிதர்சனம். 


டிரெண்டிங் @ விகடன்