`அலுவலகங்களுக்கு வாருங்கள்; வீட்டில் இருந்து பணி செய்யக் கூடாது’- அமைச்சர்களுக்கு மோடி அட்வைஸ் | ministers should come to office on a regular basis - modi advise ministers

வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (13/06/2019)

கடைசி தொடர்பு:09:30 (13/06/2019)

`அலுவலகங்களுக்கு வாருங்கள்; வீட்டில் இருந்து பணி செய்யக் கூடாது’- அமைச்சர்களுக்கு மோடி அட்வைஸ்

அலுவலகங்களுக்கு சரியான நேரத்துக்கு வாருங்கள். வீட்டில் இருந்து பணி செய்வதைத் தவிர்க்குமாறு அமைச்சர்களைப் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

மோடி

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்று வரலாறு படைத்தது. நரேந்திர மோடி இரண்டாவது முறையாகப் பிரதமராக பதவியேற்றுள்ளார். இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையின் முதல் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய மோடி,  ``அமைச்சர்கள் அனைவரும் அலுவலகங்களுக்குச் சரியான நேரத்தில் வர வேண்டும். வீட்டில் இருந்து பணி செய்வதைத் தவிர்த்துவிடுங்கள். மற்றவர்களுக்கு உதாரணமாக இருங்கள். புதிய பணிகள் குறித்து துறை ரீதியிலான அதிகாரிகளுடன் விவாதிக்க வேண்டும். அப்போதுதான் ஆக்கபூர்வமான பணிகள் நடைபெறும். கோப்புகளைத் தேங்க விடாதீர்கள். விரைவாக அதை முடித்துவிடுங்கள். மாநிலங்களில் இருந்து வரும் இணை அமைச்சர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். முக்கியமான ஆவணங்களை அமைச்சர்கள் அவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். அமைச்சர்கள் அனைவரும் தங்களது தொகுதி மக்களைச் சந்திப்பதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். இதில் அமைச்சர்கள், எம்.பி-க்கள் என எந்தப்பாகுபாடும் கிடையாது'' என்றார். 

இந்தக் கூட்டத்தில் பா.ஜ.க-வின் ஐந்தாண்டுத் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும். முதல் 100 நாள்களில் எடுக்கப்படவேண்டிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் குறித்த ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 வழங்கும் திட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு தொடங்கியது. நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றால் இந்தத் திட்டமானது அனைத்து விவசாயிகளுக்கும் நீடிக்கப்படும் என மோடி அறிவித்தார். இந்த முதல் கூட்டத்தில் பிரதமரின் கிஷான் திட்டத்தின் மூலம் அனைத்து விவசாயிகளுக்கும்  ரூ.6000 கிடைக்கும் திட்டத்தை நீடிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.