தமிழக அமைச்சர்களின் டெல்லி விசிட்... நடந்ததும்... நடக்காததும்! | Tamilnadu ministers visit to Delhi

வெளியிடப்பட்ட நேரம்: 14:05 (13/06/2019)

கடைசி தொடர்பு:14:05 (13/06/2019)

தமிழக அமைச்சர்களின் டெல்லி விசிட்... நடந்ததும்... நடக்காததும்!

தேர்தல் முடியும்வரை தமிழ்நாட்டுப் பக்கமே அவரை அனுப்ப வேண்டாம் என்று அ.தி.மு.க-வின் முக்கிய அமைச்சர்கள் சிலர் பிரதமர் மோடியிடம் பிரஷர் கொடுத்ததே இதற்குக் காரணமென்று அப்போது தகவல் பரவியது.

தமிழக அமைச்சர்களின் டெல்லி விசிட்... நடந்ததும்... நடக்காததும்!

மிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்தது. பி.ஜே.பி-யும் இதில் பலத்த அடி வாங்கியது. அதிலிருந்தே அ.தி.மு.க - பி.ஜே.பி இரு கட்சிகளுக்கும் இடையிலான உரசல் தொடங்கிவிட்டது. பி.ஜே.பி-யால் கூட்டணி வைத்ததால்தான் தோற்றோம் என்று கட்சிக் கூட்டங்களில் பகிரங்கமாகப் பல அமைச்சர்களும் பேசும் அளவுக்கு மோதல் முற்றிவிட்டது. ஆனாலும், மத்தியில் பி.ஜே.பி வலுவாக ஆட்சிப் பீடத்தில் அமர்ந்துவிட்டதால், அந்தக் கட்சியை முற்றிலும் பகைத்துக்கொள்ள முடியாத நெருக்கடியில் அ.தி.மு.க தலைமை இருக்கிறது. 

இது ஒருபுறமிருக்க... மற்றொரு புறத்தில், தமிழகத்தில் அ.தி.மு.க-வுடன் கூட்டணியில் தொடர்வதை பி.ஜே.பி தலைமையும் விரும்பவில்லை என்ற தகவல் பரவியுள்ளது. அ.தி.மு.க அமைச்சர்களின் ஊழலுக்கும் சொத்துக்குவிப்புக்கும் துணை போனதால்தான் பி.ஜே.பி-க்குப் படுதோல்வி கிடைத்ததாக பி.ஜே.பி நிர்வாகிகளும் பேசத் தொடங்கிவிட்டனர். இதன் எதிரொலியாக இரு கட்சிகளுக்கும் இடையிலான கூட்டணி எந்த நேரத்திலும் முறியும்; தமிழகத்தில் சொத்துக்குவிப்பில் டாப்பில் உள்ள சில அமைச்சர்களின்மீது கடுமையான நடவடிக்கைகள் பாயும் என்று கடந்த சில நாள்களாகத் தகவல்கள் றெக்கை கட்டிப் பறந்துகொண்டிருந்தன.
இந்தச் சூழ்நிலையில்தான், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வலது இடது கரங்களாகச் செயல்படும் அமைச்சர்கள் தங்கமணியும் வேலுமணியும் டெல்லிக்கு விசிட் அடித்து மத்திய அமைச்சர்கள் பலரையும் சந்தித்துள்ளனர். இந்தச் சந்திப்பின்போது தமிழகத்துக்கான பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களையும் அவர்கள் அளித்துள்ளனர். ஆனால், அந்தக் கோரிக்கைகளைவிட, அரசியல்ரீதியான சில விஷயங்களைப் பேசுவதற்காகவே அவர்கள் அங்கு சென்றனர் என்பதே அரசியல் வட்டாரங்களில் பேச்சாக இருக்கிறது. 

ஓ.பி.எஸ்., எடப்பாடி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் டெல்லிக்குச் செல்வதற்கு முன்பாக இவர்களிருவரும் பைலட் விசிட்டாகச் சென்று வந்திருப்பது குறித்து பல்வேறு தகவல்களும் உலா வருகின்றன. இதுகுறித்து டெல்லியிலுள்ள அரசியல் வட்டாரங்களில் பேசியபோது கிடைத்த தகவல்கள் இவைதான்...

‘‘டெல்லிக்கு வந்திருந்த தமிழக அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி இருவரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திப்பதற்காக அப்பாயின்மென்ட் வாங்க முயன்றனர். ஆனால், கிடைக்கவில்லை. கடைசியில், அமைச்சர் தங்கமணிக்கு நெருக்கமான மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலைப் பிடித்து அவர் மூலமாக அமித் ஷாவைச் சந்தித்துவிட்டனர். சீட் நுனியில் அவர்கள் இருவரும் அமர்ந்து பேசியது கால்மணி நேரம் மட்டுமே. 

அதன்பின் மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் தோமரை, தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியும் மத்திய மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.கே.சிங்கை தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியும் சந்தித்தனர். ஆனால், இவர்களிருவரும் அடுத்ததாகச் சந்திக்க முயன்றது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை. ஆனால், அவரை இறுதிவரை சந்திக்கவே முடியவில்லை. பட்ஜெட் தயாரிப்பைக் காரணம் காட்டி அவர் சந்திக்க மறுத்துவிட்டார். சில நிமிடங்கள் சந்தித்தால்போதும் என்றெல்லாம் இரட்டையர் பல்வேறு சேனல்களில் முயன்றும் முடியவில்லை. இதனால் இருவரும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  

கிலியில் அ.தி.மு.க அமைச்சர்கள்! 

நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக ஆனதிலிருந்தே அ.தி.மு.க அமைச்சர்கள் சிலருக்கு பெரும் கிலியாகிவிட்டது. குறிப்பாக, வருமானவரித்துறை ரெய்டில் சிக்கியவர்களும் தாறுமாறாகச் சொத்துகளைக் குவித்துள்ள சில அமைச்சர்களும் அச்சத்தில் தவிக்கிறார்கள். இவர்களின் பயத்துக்கு இன்னொரு காரணமும் உண்டு. 

நிர்மலா சீத்தாராமன்

தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நிர்மலா சீதாராமன், ஆந்திராவின் மருமகளானபோதும் அவர் ராஜ்யசபா உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது கர்நாடகா மாநிலத்திலிருந்து. முதல்முதலாக ராணுவத்துறைக்கு பெண் அமைச்சராக நியமிக்கப்பட்டு, அதில் நல்ல பெயரும் பெற்றார். அப்போதே பி.ஜே.பி-யின் தமிழக முதல்வர் வேட்பாளராகவும் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டார். ஆனால், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது அவர் தமிழகத்தின் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை. தேர்தல் முடியும்வரை தமிழ்நாட்டுப் பக்கமே அவரை அனுப்ப வேண்டாம் என்று அ.தி.மு.க-வின் முக்கிய அமைச்சர்கள் சிலர் பிரதமர் மோடியிடம் பிரஷர் கொடுத்ததே இதற்குக் காரணமென்று அப்போது தகவல் பரவியது.

நன்றி சொல்வதற்காக டெல்லிக்குப் போன துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்திக்க மறுத்து நிர்மலா திருப்பி அனுப்பியதுதான் இவர்களுக்கிடையிலான மோதலின் முதல்கட்டம். அதன் பிறகு நிர்மலா, தமிழகம் வரும்போதெல்லாம் தமிழக அமைச்சர்கள் தன்னை நேரில் பார்த்து மத்திய அரசின் திட்டங்களின் செயலாக்கம் பற்றிச் சொல்ல வேண்டுமென்று எதிர்பார்த்தார். ஆனால், இவரது அணுகுமுறை பிடிக்காததால் யாரும் இவரைச் சந்திக்கவில்லை. துறையின் முக்கிய அதிகாரிகளை அனுப்பி அவருக்குப் பதில் தரச் சொன்னார்கள். மோதல் முற்றியது அங்கேதான். தன்னைச் சந்திக்கவரும் தமிழக அரசு அதிகாரிகளிடம், ‘ஏன் அமைச்சர்கள் வருவதில்லை’ என்று கேட்டுக்கொண்டேயிருந்தார் நிர்மலா. இதில் கடுப்பாகித்தான் அவரைத் தேர்தல் நேரத்தில் இங்கே வர வேண்டாமென்று பிரதமர் மூலமாகவே முட்டுக்கட்டை போட்டார்கள், அ.தி.மு.க அமைச்சர்கள். அது தெரிந்து கோபத்தின் உச்சியில் இருந்தார் நிர்மலா. இப்போது எடப்பாடியின் தூதுவர்களாக வந்த அமைச்சர்களை அவர் சந்திக்க மறுத்ததற்குக் காரணம் இதுதான்’’ என்றனர் டெல்லி வட்டாரத்தினர்.

நிர்மலா சீதாராமன் தரப்பில் விசாரித்தபோது, ‘‘தமிழக அமைச்சர்களின் சொத்துக்குவிப்பு விவகாரங்கள், சகலவிதமான முறைகேடுகள் அனைத்தும் எங்கள் மேடத்துக்குத் தெரியும். வருமானவரித்துறை, அமலாக்கப் பிரிவு இரண்டு துறைகளும் நிர்மலாவின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. துறைகளின் அந்த நடவடிக்கையில் சிக்கியவர்களையும், தீவிரமான கண்காணிப்பில் இருப்பவர்களையும் இப்போது நேரில் சந்திப்பது நல்லதல்ல என்று நிதித்துறையின் உயர் அதிகாரிகள் அவருக்கு ஆலோசனை கூறியிருக்கலாம். அதன் அடிப்படையில்கூட அவர் சில சந்திப்புகளைத் தவிர்த்திருக்கலாம்’’ என்றார்கள்.

சில அமைச்சர்கள்... சில அதிகாரிகள்! 

இந்தச் சந்திப்புகள், மறைமுக மோதல்களுக்கிடையில் சத்தமில்லாமல் மிகமுக்கியமான ஓர் அதிகாரி சென்னையில் முக்கிய இடத்தில் அமர்த்தப்பட்டிருப்பதையும் முடிச்சுப்போட்டும் சில விஷயங்களைக் கணிக்கிறார்கள், வருமானவரித்துறை அதிகாரிகள். 

அமைச்சர் தங்கமணி

இதுபற்றி நம்மிடம் பேசிய அத்துறை அதிகாரிகள் சிலர், ‘‘கடந்த மே 29-ம் தேதியன்று சென்னை வருமானவரித்துறை (இன்வஸ்டிகேஷன்) பிரிவின் டைரக்டர் ஜெனரலாக டி.சி.பட்வாரி பொறுப்பேற்றிருக்கிறார். இனி, இவர்தான் தமிழகத்தில் துறைரீதியான சோதனைகளைத் திட்டமிடுவார். தமிழகம், புதுச்சேரி, கேரளா (பொறுப்பு) ஆகிய மூன்று மாநிலங்களிலும் இவரின் தலைமையின் கீழ்தான் துறை இயங்கும். ஒடிசாவைச் சேர்ந்த இவர், ரொம்பவும் கண்டிப்பானவர். சட்டத்தை ஏமாற்றி சொத்துக்குவிப்போரை ஸ்கெட்ச் போட்டுத் தூக்குவதில் கில்லாடி. ஐ.டி அதிகாரிகளுக்கான டார்கெட்டை ஆண்டுதோறும் உயர்த்திக்கொண்டே இருப்பார். 
தமிழகத்தின் வருமானவரித் துறையின் முதன்மை இயக்குநராக இருந்த சுசி பி.வர்கீஸ் ஓய்வுபெற்றுவிட்டார். அவர் இருந்தபோதுதான் தமிழகத்தின் முக்கிய வி.வி.ஐ.பி-க்கள் பலரும் ரெய்டில் சிக்கினார்கள். அவர் ஓய்வுபெற்றபின் இன்சார்ஜ் ஆகப் பொறுப்பேற்ற ஆல்பர்ட் ஜோதிமணியும் அதிரடிகளைத் தொடர்ந்தார். கேரளாவில் பிரபலமான ஜாய் ஆலுக்காய் குரூப், முத்தூட் குரூப் ஆகிய நிறுவனங்கள் மீதான ரெய்டுகளை முன்னின்று நடத்தியவர். அவர்தான் இப்போதும் முதன்மை இயக்குநராக இருக்கிறார். பட்வாரி, ஆல்பர்ட் ஜோதிமணி, துறையின் சிறப்பு பப்ளிக் பிராசிக்கியூட்டராக இருக்கும் ஷீலா ஆகிய மூவரைப்பற்றியும் நிர்மலா சீதாராமனுக்கு நன்கு தெரியும். அதனால், இந்தக் கூட்டணியின் அதகளம் இனிமேல்தான் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கிறோம்’’ என்றார்கள். 

தமிழக அமைச்சர்கள் சிலருக்கு கூடிய விரைவிலேயே வருமானவரித் துறையின் சார்பில் சிறப்புப் பரிவட்டங்கள் கட்டப்படும் என்று பலரும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்... குறிப்பாகத் தமிழக மக்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்