`வசிப்பது பிளாட்ஃபாரத்தில், காப்பாற்றியது 100 பேரை!'- யார் இந்த ஆச்சர்ய சிவா? | Hyderabad man who Has Saved 100 more Suicide Victims

வெளியிடப்பட்ட நேரம்: 13:13 (13/06/2019)

கடைசி தொடர்பு:13:13 (13/06/2019)

`வசிப்பது பிளாட்ஃபாரத்தில், காப்பாற்றியது 100 பேரை!'- யார் இந்த ஆச்சர்ய சிவா?

சிவா

``என் தம்பியோட மரணம்தான் என்னை இந்தத் தொழிலுக்கு இழுத்துக்கிட்டு வந்தது. எனக்கு ஏற்பட்ட வலி வேற யாருக்கும் ஏற்படக் கூடாதென்று நான் எடுத்த முடிவு என்னை இதில் ஈடுபட வைக்கிறது'' என்கிறார் சிவா. யார் இந்த சிவா. என்ன செய்கிறார் இவர்.

ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் சிவா. குடும்ப உறவுகள் இன்றி ஹைதராபாத் தெருக்களில் அநாதையாக சுற்றித்திரிந்துகொண்டிருந்தவர். பழம் விற்கும் பெண் ஒருவர் இவரை அரவணைத்து மகன்போல் வளர்த்து வந்துள்ளார். தற்போது 30 வயதாகும் சிவா குளங்கள், ஏரிகள், கடல் போன்ற இடங்களில் மூழ்க இருந்த 100-க்கும் அதிகமானவர்களைக் காப்பாற்றியுள்ளார். அதேபோல் நீரில் மூழ்கி உயிரிழந்த 1000-க்கும் மேற்பட்டவர்களின் உடல்களையும் மீட்டுக்கொடுத்துள்ளார்.

ஹூசைன் சாகர் ஏரி

ஹைதராபாத்தில் உள்ள ஹூசைன் சாகர் ஏரி சுற்றுலாவுக்குப் பெயர் போனது. ஏரியின் நடுவே அமைந்திருக்கும் புத்தர் சிலையைக் காண்பதற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகைபுரிவார்கள். இப்படி வருபவர்களில் யாரேனும் ஏரியில் தவறி விழுந்துவிட்டாலோ அல்லது தற்கொலைக்கு முயன்றாலோ காவல்துறை முதலில் அழைப்பது சிவாவைத்தான். சிவா அந்த ஏரிக்கு அருகே உள்ள சாலையோரத்தில்தான் வசித்து வருகிறார். பலரின் உயிரைக் காப்பாற்றியவர் ஏழ்மையில் தவித்து வருகிறார். விநாயகர் சதுர்த்தியின்போது கரைக்கப்படும் சிலைகளில் இருக்கும் இரும்புக் கம்பிகளை எடுத்து தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார். 

இவர் சிறுவனாக இருக்கும்போதே அவரது குடும்பத்தினர் விடுதியில் சேர்த்துவிட்டார்கள். ஒருநாள் பள்ளி முடிந்து விடுதிக்குப் போகும்போது அந்தப் பகுதியில் சிலர் மதச்சடங்குகள் செய்துகொண்டிருந்தனர். அது பயத்தை ஏற்படுத்த அங்கிருந்து ஓடியுள்ளார். துரதிர்ஷ்டவசமாக நீண்ட தூரம் ஓடிவிட்டார். அங்குதான் அவர் வாழ்க்கை பாதை மாறியது. விடுதிக்குத் திரும்பிச் செல்ல முடியவில்லை. சாப்பிடுவதற்கும் வாழ்க்கையை நகர்த்துவதற்கும் பிச்சை எடுப்பதைத் தவிர வேறுவழி தெரியவில்லை. சாலையில் சுற்றித்திருந்த சிவாவை பழவியாபாரம் செய்யும்  மல்லேஸ்வரம்மா என்பவர் தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார். சிவாவையும் தன் பிள்ளையைப்போல வளர்த்து வந்துள்ளார், எந்தப் பாகுபாடும் இன்றி. ஏரியில் ஒருவர் தவறி விழுந்துவிட மல்லேஸ்வரம்மாவின் மகன் அவரைக் காப்பாற்ற இறங்கியுள்ளார். பரிதாபமாக நீரில் மூழ்கி அவரும் உயிரிழந்துவிட்டார். இந்தச் சம்பவத்தால் மல்லேஸ்வரம்மா இடிந்துபோய்விட்டார். சகோதரன் மரணம் வளர்ப்புத் தாயின் தவிப்பு சிவாவின் மனதை ஏதோ செய்துள்ளது. தனக்கு ஏற்பட்ட அந்த மனவேதனை யாருக்கும் ஏற்படக் கூடாது என்பதற்காகச் சிவா இந்தப் பணியைச் செய்துவருகிறார். காவல்துறைக்கு இவரது பணி பெரிதும் உதவியாக இருக்கிறது.

உடல்களை மீட்கும் சிவா

15 வருடமாக இந்தப்பணியைச் செய்துவருகிறார். இதில் பல்வேறு ஆபத்துகளும் இருக்கிறது. இதன் காரணமாக இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீரில் மூழ்கியவரை மீட்கும்போது ஏரியில் இருந்த கம்பி குத்தியதில் இவரது தோள்பட்டை மற்றும் மார்பில் குத்தி காயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சிகிச்சை எடுத்துவந்துள்ளார். மற்றொரு முறை ஏரியில் இருந்த நச்சு நீர் காரணமாக நுரையீரல் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த இரண்டு சம்பவங்களுக்குப் பிறகு சிவாவுக்கு வாழ்க்கை குறித்த பயம் வந்துள்ளது. இவருக்குத் திருமணம் ஆகி மூன்று குழந்தைகள் உள்ளனர். சிவாவின் குழந்தைகள் படிப்புக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக மாவட்ட ஆட்சியரும், காவல்துறையினரும் உறுதியளித்துள்ளனர். தற்போது அவர் அந்த ஏரிப்பகுதிக்கு அருகில் உள்ள சாலையோரத்தில் வசித்து வருகிறார். அரசாங்கத்தால் வழங்கப்படும் குடியிருப்பில் வீடு ஒதுக்கித் தருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.