10 ஆண்டுக்குக் காவல் நிலையம் வரமுடியாது! - போலீஸாருக்கு செக் வைக்கும் பீகார் முதல்வர் | Bihar CM gave directions to police about illegal alcohol

வெளியிடப்பட்ட நேரம்: 14:32 (13/06/2019)

கடைசி தொடர்பு:14:32 (13/06/2019)

10 ஆண்டுக்குக் காவல் நிலையம் வரமுடியாது! - போலீஸாருக்கு செக் வைக்கும் பீகார் முதல்வர்

பீகார் மாநிலத்தில் 2015-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின் போது ஐக்கிய ஜனதாதளக் கூட்டணி வெற்றி பெற்றால் அங்கு மது விலக்கு அமல்படுத்தப்படும் என நிதிஷ் குமார் கூறினார். தொடர்ந்து அவர்கள் வெற்றி பெற்ற பிறகு ஏப்ரல் 1, 2016-ம் ஆண்டு முதல் அங்கு மது விலக்கு அமல்படுத்தப்பட்டது.

நிதிஷ் குமார்

கடந்த மூன்று வருடங்களாக மது இல்லாத மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது பீகார். மது விலக்கால் அந்த மாநிலத்தில் அத்தியாவசிய பொருள்களின் விற்பனை அதிகரித்து வருவதாக ஓர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆடைகள், உணவுப் பொருள்கள் வாங்க முடிந்ததாக அம்மாநிலப் பெண்கள் தெரிவித்திருந்தனர். மேலும் 66 சதவிகிதம் குற்றச் சம்பவங்களும், 28 சதவிகிதம் கொலைச் சம்பவங்களும் குறைந்துள்ளதாகவும் 19 சதவிகிதம் மக்கள் புதிதாக சொத்து வாங்கியதாகவும் கூறப்பட்டது.

மது

இருந்தும் அம்மாநிலத்தின் பல இடங்களில் சட்ட விரோதமாக மது கடத்தல் மற்றும் மது விற்பனை நடந்து வந்ததாகத் தொடர் புகார்கள் கூறப்பட்டு வந்தன. இந்நிலையில் சட்டவிரோத மது விற்பனையைக் கட்டுப்படுத்த பீகார் மாநில போலீஸாருக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார் முதல்வர் நிதிஷ் குமார். அதில், `பீகார் மாநிலத்தில் சட்டவிரோதமாக மது கடத்தப்படுவது தெரிய வந்தால் அந்தப் பகுதிக்கு உரிய காவல்நிலையத்தில் இருக்கும் காவலர்களுக்கு அடுத்து வரும் பத்து ஆண்டுகளுக்குக் காவல் நிலைய பணி வழங்கப்பட மாட்டாது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.