``சோழ மண்டலக் கடல் என்பதே சரி!” - வங்காள விரிகுடா குறித்த ஆய்வு சொல்வதென்ன? | Historical researchers said that by calling Bay of Bengal as Bay of Cholas is suitable one.

வெளியிடப்பட்ட நேரம்: 16:06 (13/06/2019)

கடைசி தொடர்பு:16:06 (13/06/2019)

``சோழ மண்டலக் கடல் என்பதே சரி!” - வங்காள விரிகுடா குறித்த ஆய்வு சொல்வதென்ன?

``இந்தியாவிற்கு வருகை தந்த அனைத்து ஐரோப்பியர்களாலும் சோழமண்டலக் கடல் என்றே நமது கடல் அழைக்கப்பட்டது. சோழர்களின் பெருமையும் அவர்களது கடல் ஆளுமையும் உலகம் அறிந்த ஒன்று!”

``சோழ மண்டலக் கடல் என்பதே சரி!” - வங்காள விரிகுடா குறித்த ஆய்வு சொல்வதென்ன?

வங்காள விரிகுடாவை 'சோழமண்டலக் கடல்' என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும் என்று கூறுகின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.

மாணவர்கள்

கடலின் இயற்கை மற்றும் மரபினைப் பாதுகாப்பது குறித்த கருத்தரங்கம் புதுச்சேரி கடல்சார் சூழலியல் அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. கடல்சார் வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் முனைவர் ஜெயசீலா ஸ்டீபன் தலைமையில், சிகாகோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் ஓசெர் மற்றும் மேனன் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். அந்த நிகழ்வில் புதுச்சேரியைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். அருங்காட்சிய நிறுவனரும், ஆய்வாளருமான அறிவன் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலின் விவரங்கள் அப்படியே தொகுக்கப்பட்டிருக்கின்றன.

ஆய்வாளர்கள்

பூமிப் பரப்பில் 70% கடலால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது என்கிறது அறிவியல். உலக அளவில் அதே விகிதத்தில் மக்கள் கடற்கரை ஓரங்களில் வசிப்பதாக ஆய்வுகள் கூறும் நிலையில், மனித இனம் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்குமான ஆக்சிஜன் தேவைகளில் 70% கடல்வாழ் தாவாரங்கள்தான் பூர்த்தி செய்கிறது.

1856-ல் வெளியிடப்பட்ட ஆங்கிலேயே வரைபடம்:

ஆங்கிலேய வரைபடம்

சுமார் 170 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் கடல்கள் தோன்றியிருக்கலாம் என்று கூறும் இன்றைய அறிவியல், அன்றைய காலகட்டத்தில் நில அமைப்பு துண்டிடப்படாததாகவும் பெருங்கடலாகவும் இருந்திருக்கிறது 361,740,000 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட உலகக் கடல் அட்லான்டிக், பசிபிக், இந்தியன், ஆர்டிக் என 4 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் 166,240,000 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட பசிபிக் பெருங்கடல் மட்டும் உலக நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதியினை நீரால் சூழ்ந்திருக்கிறது. அதை ஒரே நேர்க்கோட்டில் நீட்டிப் பார்த்தோமென்றால் சுமார் 17,700 கிலோமீட்டர் அதாவது உலக நிலப்பரப்பில் பாதி அளவைத் தொடும். அதேபோல உலகின் மூன்றாவது பெரிய கடலாகவும், வெப்பமண்டலக் கடலாகவும் விளங்குவது 73,430,000 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட இந்தியப் பெருங்கடல்தான்.

1761-ல் வெளியிடப்பட்ட ஆங்கிலேய வரைபடம்:

1761 வரைபடம்

மேலும் உலகக் கடல்களின் தனிச்சிறப்புடைய இயற்கைத் தகவமைப்பினை தன்னகத்தேக் கொண்டிருக்கிறது. சிறிய கடல்களின் பெயர்களை ஒருங்கிணைத்தே பெருங்கடல் எனக் குறிப்பிட்டு வருகிறோம். அதன்படி அரபி மற்றும் வங்காள விரிகுடாக் கடல்கள் இந்தியப் பெருங்கடலில்தான் அடக்கம். இந்தியப் பெருங்கடல் என்பது குமரிக்கடலைத்தான் குறித்தது.  

1790 பிரெஞ்சு வரைபடம்:

பிரெஞ்சு வரைபடம்

``வடக்கில் இமயமலை பாப்பா - தெற்கில்

வாழும் குமரி முனை பாப்பா,

கிடக்கும் பெரிய கடல் கண்டாய்இதன்

கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா                          

என்று இந்திய எல்லைகளை வரையறை செய்கின்றார் பாரதியார். தமிழ் மக்கள் கடல்களைப் பற்றிய ஆழமான அறிவுடையவர்களாகத் திகழ்ந்திருக்கிறார்கள் என்பதற்குச் சங்க இலக்கியப் பாடல்களே சாட்சி. கடல் என்ற சொல்லாட்சி அவற்றில் பரவிக் கிடக்கிறது. கடலைக் குறிக்கும் ஆழி என்ற சொல் சங்க இலக்கியத்தில் 43 இடங்களில் வருகின்றது. கடல் சார்ந்த நிலம் நெய்தல் என்றும் அங்கு வாழ்ந்த மக்கள் குறித்தும் ஏராளமான செய்திகள் தமிழில் விரவிக்கிடக்கின்றன. இந்தியக் கடலைக் கட்டியாண்ட பெருமை முடியுடை மூவேந்தர்களையே சாரும். இந்தியாவிற்கு வருகை தந்த அனைத்து ஐரோப்பியர்களாலும் சோழமண்டலக் கடல் என்றே நமது கடல் அழைக்கப்பட்டது. சோழர்களின் பெருமையும், அவர்களது கடல் ஆளுமையும் உலகம் அறிந்த ஒன்று. சோழர்களின் கடல் ஆளுமைப் பெருமையை எண்ணி வியந்துதான் தற்போதைய இந்திய அரசு 2015-ல் இராசேந்திர சோழனுக்கு அஞ்சல் தலையை வெளியிட்டது.

ராஜேந்திர சோழன்

சுமார் 2,172,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டதாகச் சொல்லப்படும் வங்காள விரிகுடா தனக்குள் சோழமண்டலக் கடலையும் அடக்கிக் கொள்கின்றது. மற்றபடி சோழமண்டலக் கடலுக்கும் வங்காள விரிகுடாவுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் வங்க மொழி என்ற சொல்லை `இடியமா பெங்கல்லா’ என்று போர்த்துக்கீசியர்கள் அழைத்தனர். முகமதிய ஆட்சியின்போதுதான் இந்தச் சொல் முதன்முதலில் வருகிறது. 16-ம் நூற்றாண்டில் வங்க மொழியை கெளட மொழி என்றே அழைத்தனர். வங்காள மொழி பேசுவதன் அடிப்படையிலேயே வங்காளதேசம் என்று அழைக்கப்பட்டது. பாகிஸ்தானிடமிருந்து பிரிந்து தனி நாடாக உருவாகியிருக்கும் வங்கதேசம்தான் முந்தைய இந்தியாவில் கிழக்கு வங்கமாக இருந்தது.

வங்காள விரிகுடாக் கடல்

வங்கதேசப் பகுதியில் தொடங்கி இந்தியாவின் மேற்கு வங்கம் வரை பரந்திருக்கும் குடாப் பகுதியே விரிகுடா எனப்படுகிறது. இந்தப் பகுதியில்தான் கங்கை, பிரம்மபுத்திரா, ஐராவதி, மகாநதி போன்ற பெரிய ஆறுகள் கலக்கின்றன. இதை வங்காள விரிகுடா என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். அளவில் சிறியதான குடா வளைகுடா (Gulf) என்றும், பெரிய அளவிலான பகுதி விரிகுடா (Bay) என்றும் பெயர் பெற்றதோடு அப்படியே அழைக்கப்பட்டது. பரப்பளவில் சிறியதான மன்னார் வளைகுடாவையும், பெரியதான வங்காள விரிகுடாவையும் இதற்கு உதாரணமாகக் கூறலாம். நமது சோழமண்டலத்தை ஐரோப்பியர்கள் கோரமண்டல் (Coromandel) என்றே அழைத்தார்கள்.

ஆய்வாளர் அறிவன்

29 கடல்களையும் 4 பெருங்கடல்களையும் கொண்ட இப்புவிப் பரப்பில் சோழமண்டலக் கடலுக்கென்று மிகப்பெரிய வரலாறு உண்டு. அந்த வரலாற்றைப் போலவே இந்தியாவின் மேற்கிலும், மலையாளக் கரை அல்லது மலைவாரக் கடல் என்ற சொற்கள் எப்படி அரபிக் கடலாக ஆகும் என்ற கேள்வியினை அரசுகள் எண்ணிப்பார்க்க வேண்டும். கோதாவரி ஆறு கலக்குமிடம் தொடங்கி இலங்கையின் மன்னார் வரையுள்ள கடல் பரப்பு சோழமண்டலக் கடலுக்கான பெயருக்குரியது. அதனால் மத்திய மாநில அரசுகள் மரபு அடிப்படையில் சோழமண்டலக் கடல் என்று பெயர் மாற்றம் செய்திட வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை வைத்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்