`இந்தியாவுக்கென தனி ஸ்பேஸ் ஸ்டேஷன்!'- அடுத்த கட்டத்துக்குத் தயாராகும் இஸ்ரோ | India is planning to launch its own space station, said ISRO chief K Sivan

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (13/06/2019)

கடைசி தொடர்பு:19:00 (13/06/2019)

`இந்தியாவுக்கென தனி ஸ்பேஸ் ஸ்டேஷன்!'- அடுத்த கட்டத்துக்குத் தயாராகும் இஸ்ரோ

இந்தியாவுக்கென தனி விண்வெளி நிலையம் அமைக்கத் திட்டமிட்டுவருவதாக, இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ

நிலவில் பல்வேறு நாடுகள் ஆய்வு மேற்கொண்டுவரும் நிலையில், இந்தியா, கடந்த 2008-ம் ஆண்டு சந்திராயன்-1 விண்கலத்தைச் செலுத்தி ஆய்வு மேற்கொண்டுவருகிறது. நிலவின் மேல்பகுதியில் உள்ள தாதுக்கள்குறித்து ஆய்வு மேற்கொண்ட சந்திராயன்-1, நிலவில் நீர்த்துளிகள் இருப்பதை முதல் முதலாகக் கண்டுபிடித்தது. இந்த ஆய்வை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் இஸ்ரோ, அதற்காக சந்திராயன்-2 விண்கலத்தை வடிவமைத்துள்ளது. இதுதொடர்பாக இன்று, இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். 

சிவன்

அப்போது, ``சந்திராயன்-2 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து அடுத்த மாதம் 15-ம் தேதி அதிகாலை விண்ணில் செலுத்தப்படும். இந்த விண்கலம், நிலவில் செப்டம்பர் 6 அல்லது 7-ம் தேதி தரையிறங்கும். சந்திராயன்-1 விண்கலத்தைவிட சந்திராயன்-2 விண்கலம் மிகவும் சிக்கலானது. நிலவில் ஏற்படும் அதிர்வுகள், நிலவில் உள்ள தாதுப்பொருள்கள், நீரின் இருப்பு ஆகியவைகுறித்து ஆய்வுசெய்யவும் இந்த விண்கலம் பயன்படும். இதற்காக, விண்கலத்தில் 13 கருவிகள் சேர்க்கப்பட்டுள்ளன. உலக நாடுகளுக்கு சவால் விடுக்கும் வகையில் சந்திராயன் பல சாதனைகளைச் செய்யும் என நம்புகிறோம்" என்று கூறியுள்ளார். 

ஸ்பேஸ் ஸ்டேஷன்

இந்தியாவுக்கென தனி ஸ்பேஸ் ஸ்டேஷன்!

சர்வதேச விண்வெளி மையத்தில், இந்தியாவுக்கென தனி ஸ்பேஸ் ஸ்டேஷன் அமைக்கத் திட்டமிட்டுவருகிறோம். இத்திட்டத்தை இந்தியா தனது சொந்த முயற்சியில் அமைக்கும். இதற்காக எந்தவொரு நாட்டின் உதவியையும் நாடவில்லை. ககன்யான் திட்டத்தின் நீட்சியாக, சர்வதேச விண்வெளி மையத்தில் சுமார் 20 டன் எடையில், இந்திய ஸ்பேஸ் ஸ்டேஷன் அமைக்கப்படும். 2030-க்குள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ககன்யான் திட்டம் முடிந்த பின்னர், விண்வெளி மையம்குறித்த முழு விவரங்கள் தெரிவிக்கப்படும்" என்று கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க