திக்... திக்... தெலங்கானா; 10 நாள்களில் 546 பேர் மாயம்?! - சர்ச்சையும் காவல்துறையின் விளக்கமும் | high number missing persons cases telangana

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (13/06/2019)

கடைசி தொடர்பு:18:40 (13/06/2019)

திக்... திக்... தெலங்கானா; 10 நாள்களில் 546 பேர் மாயம்?! - சர்ச்சையும் காவல்துறையின் விளக்கமும்

 

தெலங்கானா

தெலங்கானாவில், கடந்த 10 நாள்களில் 500-க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அம்மாலத்தில் வெளியான `ஈ நாடு’ பத்திரிகை இதை அம்பலப்படுத்தியுள்ளது.  `2 வயது குழந்தை முதல் 80 வயதான முதியவர்கள் வரை பெரும்பாலும் ஹைதராபாத்திலிருந்து மாயமாகியுள்ளனர். அதுவும் ஜூன் 1-லிருந்து ஜூன் 10-ம் தேதிக்குள் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தெலங்கானா காவல்துறை, `தெளிவற்ற அணுகு முறையில்’ இந்த வழக்குகளைக் கையாள்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பெரும்பாலான வழக்குகள், இரண்டு நாள்களில் தீர்வுகள் இல்லாமல் காவல்துறையால் முடித்துவைக்கப்படுகின்றன. இந்தச் சம்பவங்கள், அம்மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.  சமூக வலைதளங்களில் இது தொடர்பான பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. மாநில காவல்துறை மீதான நம்பிக்கை சீர்குலைந்துவிட்டது என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஒரு கணக்கின்படி, ஒவ்வொரு நாளிலும் 54 பேர் மாயமாகியுள்ளனர். கடந்த 2016-ம் ஆண்டு, தெலங்கானாவில் மொத்தம் 16,134 பேர் காணமல் போயுள்ளனர். மாநிலம் முழுவதும் பீதியைக் கிளப்பியுள்ள இந்தச் சம்பவம் தொடர்பாக, பெண்கள் பாதுகாப்புப் பிரிவு ஐஜி ஸ்வாதி லக்ரா, ``கோடைகாலத்தில் ஏராளமான மாயமான வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

காவல்துறை

அதில் பெரும்பாலும், தேர்வுக்குப் பயந்து குழந்தைகள் வீட்டை விட்டு வெளியேறுதல், பள்ளிகள் திறப்புக்குப் பயந்து வீட்டை விட்டு வெளியேறுதல் உள்ளிட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால், இதில் முக்கியமான ஒன்று என்னவென்றால், பதற்றம் குறைந்தவுடன், அந்தக் குழந்தைகள் மீண்டும் வீடு திரும்பியுள்ளனர்” என்றார். மேலும், இது தொடர்பாக காவல்துறை உயர்அதிகாரிகள், ``உள்ளூர் காவல்துறை நான்கு மாதங்களில் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், சி.ஐ.டி-யில் தனிப்பிரிவை உருவாக்கித் தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும். `ஆபரேஷ் முஸ்கான்’ `ஆபரேஷன் ஸ்மைல்’ என்ற பெயரில் விசாரணை நடைபெற்றுவருகிறது. நாங்கள் பயன்படுத்தும் முக அடையாள முறை (facial recognition system) குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க எங்களுக்கு உதவியாக உள்ளது” என்றார்.