`48 மணி நேரத்தில் 36; இரண்டு வாரத்தில் 54 குழந்தைகள் பலி' - பீகாரை மிரட்டும் மூளைக் காய்ச்சல்! | 54 children below the age of 10 have died in Bihar’s Muzaffarpur

வெளியிடப்பட்ட நேரம்: 09:07 (14/06/2019)

கடைசி தொடர்பு:12:03 (16/06/2019)

`48 மணி நேரத்தில் 36; இரண்டு வாரத்தில் 54 குழந்தைகள் பலி' - பீகாரை மிரட்டும் மூளைக் காய்ச்சல்!

பீகார் மாநிலம் முசாஃபர்பூர் மாவட்டத்தில் குழந்தைகளின் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருப்பது கவலை அளிக்கும் விஷயமாக மாறி வருகிறது.

மூளைக் காய்ச்சல்

பீகார் மாநிலம் முசாஃபர்பூர்  மாவட்டத்தில் திடீரென நிறைய குழந்தைகள் உடல் நலக்குறைவு காரணமாகத் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவமனை கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட 133 குழந்தைகள் மூளைக் காய்ச்சல் போன்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனப் பின்னர் நடந்த சோதனையில் தெரியவந்துள்ளது. அவர்களில் 48 மணி நேரத்தில் மட்டும் சுமார் 36 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சிகர தகவலும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது குழந்தைகள் உயிரிழப்பு எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. 

இதில் ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவமனை கல்லூரியில் மட்டும் இதுவரை 46 குழந்தைகளும், கெஜ்ரிவால் மருத்துவமனையில் 8 குழந்தைகளும் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குழந்தைகள் அனைவரும் கைபோகிலைசிமியா (hypoglycemia) என்ற, ரத்தத்தில் குளுகோஸ் குறைந்துள்ள நோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதைப் பீகார் அரசும் உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கிடையே மேலும் 173 குழந்தைகள் மருத்துவமனையில் இதே அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தனி வார்டில் வைத்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது மத்திய அரசு ஒரு மருத்துவக் குழுவை முசாஃபர்பூருக்கு அனுப்பி வைத்துள்ளது.

குழந்தைகள்

கிராமப்புற குழந்தைகள்!

உயிரிழந்த அனைத்துக் குழந்தைகளுக்கும் பொதுவாக இருப்பது மூன்று விஷயங்கள் தான். ஒன்று குழந்தைகளின் குடும்பங்கள் வறுமையான நிலையில் உள்ளது. மற்றொன்று கிராமப்புறத்தில் இருப்பவர்கள். இன்னொன்று அனைவருக்கும் ஒரே விதமான நோய் தாக்கியுள்ளது. இந்த மாதம் மட்டும் முசாஃபர்பூர் பகுதியில் 40 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக வெப்பம் நிலவி வருகிறது. ஏற்கெனவே ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் இந்த வெப்பத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் உயிரிழக்கும் நிலைக்குச் செல்கின்றனர். ``இந்தப் பிரச்னை முசாஃபர்பூருக்கு புதியது ஒன்றும் கிடையாது. இது பல வருடங்களாக நடைபெற்றுக்கொண்டுதான் உள்ளது. முசாஃபர்பூர் மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் கோடைக்காலங்களில் அந்த நோய் அதிகம் தாக்கப்படுவது வழக்கமாக உள்ளது. 

குழந்தைகள்

இறந்தவர்களில் 10 வயதுக்குக் குறைவான குழந்தைகளே அதிகம். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மூளைக் காய்ச்சலால் அதிக குழந்தைகள் இறந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு இல்லாததும் பெரும் காரணமாக இருக்கிறது. இந்தப் பிரச்னை எழும்போதெல்லாம் அரசாங்கம் மருத்துவ சூழ்நிலைகளை ஆராயும். ஆனால், நிலைமையை உணர்ந்து அதற்கேற்றாற்போல் தகுந்த நடவடிக்கையை எடுக்கத் தவறுகிறது. கோடைக்காலங்களில் இந்த மாதிரியான இறப்பு அதிகமாக இருக்கிறது. மழைக்காலம் ஆரம்பிக்கும்போது இந்த இறப்பு வெகுவாக குறைகிறது. இதை உணர்ந்து அரசு செயல்பட வேண்டும்"  என இந்திய மருத்துவ சங்க மருத்துவர் அஜய் குமார் வேதனை தெரிவித்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க