`டிராக்டரில் வந்த 200 பேர்; ஸ்தம்பிக்கும் மருத்துவமனைகள்' - மேற்குவங்கத்தில் என்ன நடக்கிறது? #doctorsstrike | Junior doctors in state-run hospitals go on strike after alleged attack on colleague

வெளியிடப்பட்ட நேரம்: 12:33 (14/06/2019)

கடைசி தொடர்பு:12:33 (14/06/2019)

`டிராக்டரில் வந்த 200 பேர்; ஸ்தம்பிக்கும் மருத்துவமனைகள்' - மேற்குவங்கத்தில் என்ன நடக்கிறது? #doctorsstrike

மேற்குவங்க மாநிலத்தில் ஜூன் 9-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை, 75 வயதான முகமது ஷாஹித் என்ற முதியவர் இதய நோயால் பாதிக்கப்பட்டு கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் முதியவருக்கு சிகிச்சைக் கொடுக்கத் தொடங்கியுள்ளனர் அங்கிருந்த மருத்துவர்கள். 

உயிரிழந்த முதியவர்

பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் முதியவர் முகமது, மறுநாள் திங்கள் கிழமை இரவு உயிரிழந்துவிட்டார். முதியவர் அனுமதிக்கப்பட்டவுடன் அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறிவந்த அவரின் உறவினர்கள், முகமது இறந்ததும் மருத்துவமனை வளாகத்திலும், வெளிப்புறத்திலும் போராட்டம் நடத்தியுள்ளனர். 

தாக்கப்பட்ட பயிற்சி மருத்துவர்

இதைத்தொடர்ந்து அடுத்த சில மணி நேரங்களில் இரண்டு பெரிய டிராக்டரில் 200 பேர் மருத்துவமனைக்கு வந்து இறங்கினர். அவர்கள் அனைவரும் முதியவரின் உறவினர்கள் மற்றும் ஊர்க்காரர்கள் எனக் கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் மருத்துவமனைக்குள் புகுந்து அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் பிற பணியாளர்களைச் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் பரிபஹா முகர்ஜி என்ற பயிற்சி மருத்துவருக்கு மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் இருவர் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளனர்.

தாக்கப்பட்ட மருத்துவரின் மண்டை ஓடு

சம்பவம் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்த காவல்துறையினர் அங்கிருந்தவர்களை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்துள்ளனர். இதையடுத்து, காயமடைந்த பயிற்சி மருத்துவருக்கு நடந்த சிகிச்சையில் அவரது மண்டை ஓடு உடைந்துள்ளதாக மருத்துவர்கள் அறிவித்தனர். காயமடைந்த மருத்துவரின் புகைப்படமும் அவருக்கு எடுக்கப்பட்ட ஸ்கேன் புகைப்படமும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. 

பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்

இதைத்தொடர்ந்து,  நேற்று முன் தினம் என்.ஆர்.எஸ் மருத்துவமனையில் பணிபுரியும் சக பயிற்சி மருத்துவர்கள் காயமடைந்த மருத்துவருக்கு நீதி கேட்டுப் போராட்டம் நடத்தத் தொடங்கினர்.  ``எங்களுக்கு நீதி வேண்டும் எனப் போராட்டம் நடத்தினால், காவல்துறை எங்கள் மீதே தடியடி நடத்துகிறது. நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தில் மேலும் சில பயிற்சி மருத்துவர்கள் காயமடைந்துள்ளனர். எங்கள் கோரிக்கையை ஏற்க மறுத்து அமைதி காக்கிறது காவல்துறை” என மருத்துவர் சயன் சந்த்ரா தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க முதல்வர்

இரண்டாவது நாளும் பயிற்சி மருத்துவர்கள் தாக்கப்பட்டதால் இந்தப் பிரச்னை பூதாகரமானது. என்.ஆர்.எஸ் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களுக்கு ஆதரவாக மேற்குவங்கத்தில் உள்ள பிற மருத்துவர்களும் போராட்டத்தில் குதித்தனர். இந்த விஷயம் அம்மாநில அரசின் காதுகளுக்குச் செல்ல, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி,  `உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். மருத்துவர்கள் அனைவரும் மீண்டும் வேலைக்குத் திரும்ப வேண்டும். மிகவும் ஏழ்மையான மக்கள்தான் உங்கள் மருத்துவமனைக்கு வருகிறார்கள் அவர்களுக்கு முறையான சிகிச்சை வழங்குங்கள்’ என உத்தரவிட்டார். இதைக் கண்டுகொள்ளாத மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டத்திலும், வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டு வந்தனர். 

சக மருத்துவர்கள் போராட்டம்

இதில் கடுப்பான மம்தா, `போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு இன்னும் நான்கு மணி நேரம் கால அவகாசம் அளிக்கிறேன் அதற்குள் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு தங்கள் பணிக்குத் திரும்ப வேண்டும். இல்லையேல் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரும்’ என நேற்று அறிக்கை வெளியிட்டார். முதலில் மேற்குவங்கத்தில் மட்டும் நடந்த மருத்துவர்கள் போராட்டம், மம்தாவின் அறிக்கைக்குப் பின் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள், ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் ஆகியோரும் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். பல அரசு மருத்துவர்களும் காயமடைந்த பயிற்சி மருத்துவருக்கு நீதி கேட்டுப் போராட்டத்தில் இறங்கியுள்ளதால் மேற்குவங்கம் உட்பட வட இந்தியா முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது.

போராட்டம்

அடிபட்ட மருத்துவருக்குத் தலையில் கட்டுப் போடப்பட்டுள்ளதைப்போல, அனைத்து மருத்துவர்களும் தங்கள் தலையில் கட்டுப் போட்டுக்கொண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். பிற மாநிலங்களில் உள்ள மருத்துவர்களும் தங்கள் தலையில் கட்டு போட்டுக்கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருகின்றனர். இந்திய மருத்துவர்கள் சங்கம் இன்றைய தினத்தை கறுப்பு நாளாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு நேரடியாகத் தலையிட்டு இதற்குத் தீர்வு அளிக்க வேண்டும் எனப் பல கோரிக்கை வைத்து வருகின்றனர் மருத்துவர்கள்.