`மிரட்டிட்டு இருந்தாங்க; இப்போ இப்படி பண்ணிட்டாங்க' - உ.பி பார் கவுன்சில் தலைவர் கொல்லப்பட்ட பின்னணி! | UP Bar Council Chief Murder

வெளியிடப்பட்ட நேரம்: 14:35 (14/06/2019)

கடைசி தொடர்பு:14:39 (14/06/2019)

`மிரட்டிட்டு இருந்தாங்க; இப்போ இப்படி பண்ணிட்டாங்க' - உ.பி பார் கவுன்சில் தலைவர் கொல்லப்பட்ட பின்னணி!

உத்தரப்பிரதேச மாநில பார் கவுன்சில் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று தர்வேஷ் சிங் என்ற பெண் தலைவராக சில தினங்களுக்கு முன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் உ.பி பார் கவுன்சிலின் முதல் பெண் தலைவர். இந்த நிலையில், நேற்று ஆக்ராவில் உள்ள நீதிமன்றத்தில் தர்வேஷ் சிங்குக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

பார் கவுன்சில் தலைவர்

அந்தப் பாராட்டு விழாவில் தன் குடும்பத்துடன் கலந்துகொண்டார் தர்வேஷ். விழா முடிந்ததும் நேற்று பிற்பகல் 2:30 மணியளவில் தன் குடும்பத்தினர், சக வழக்கறிஞர்களுடன் அங்குள்ள ஒரு வழக்கறிஞர் அறையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மனிஷ் சர்மா என்ற முன்னாள் வழக்கறிஞர் தர்வேஷை நோக்கி சரமாரியாக மூன்று, நான்கு முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். தொடர்ந்து மனிஷ் சர்மாவும் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரின் உடலில் ஒரு குண்டு பாய்ந்த நிலையில் அருகில் இருந்த காவலர்கள் மனிஷை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தர்வேஷ் சிங்

இந்தத் துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தர்வேஷ் அடுத்த சில நிமிடங்களிலேயே உயிரிழந்தார். இந்த விவகாரம் உத்தரப்பிரதேச வழக்கறிஞர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்குப் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆக்ரா நீதிமன்றம்

இதற்கிடையில், தர்வேஷ் கொலை செய்யப்பட்டது தொடர்பாக சன்னி என்ற அவரின் உறவினர் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில், `` என் அத்தை தர்வேஷ் சிங், சமீபத்தில் நடந்த பார் கவுன்சில் தேர்தலில் வெற்றி பெற்றார். அதற்காக ஆக்ராவில் நடந்த பாராட்டு விழாவின்போது முன்னாள் வழக்கறிஞர் மனிஷ் சர்மா என்பவரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இதற்கு முன்னர் மனிஷ் சர்மாவின் மனைவி வந்தனா சர்மா என் அத்தையைக் கொன்று விடுவேன் என்றும் அவர் மனிஷ் சர்மாவுக்கு வழங்கிய கார், நகை, பணம் போன்றவற்றை திருப்பிக் கேட்கக் கூடாது என்றும் மிரட்டியுள்ளார். இதனால் கோபமடைந்த அவர்கள் குலேசா வினீத் என்ற மற்றொரு வழக்கறிஞருடன் இணைந்து என் அத்தையைக் கொலை செய்துவிட்டனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அஜய் ஆனந்த்

``உத்தரப்பிரதேசத்தில் சட்டம் - ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. நீதிமன்றத்துக்குள்ளும் கொலைகள் நடக்கின்றன. நீதித் துறையில் உள்ளவர்களுக்கே இங்கு பாதுகாப்பு இல்லை” என உ.பி எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனிடையே பேசிய உத்தரப்பிரதேச கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அஜய் ஆனந்த், `` தர்வேஷ் சிங் தலையில் குண்டு பாய்ந்ததால் அவர் உயிரிழந்துவிட்டார். அவர் உடல் பிரேதப் பரிசோதனைக்காகப் புஷ்பாஞ்சலி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. கொலை செய்த மனிஷ் சர்மாவும் தற்போது கவலைக்கிடமாக உள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த வழக்கறிஞர் தர்மேஷ் சிங்கின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் இன்று அவரது சொந்த கிராமத்தில் நடக்கிறது. அதில் பல அரசியல் தலைவர்களும் ஊர் மக்களும் கலந்துகொண்டுள்ளனர். மனிஷ் சர்மா எதற்காக வழக்கறிஞரைக் கொலை செய்தார் என்ற முழுமையான தகவல் இதுவரை வெளிவரவில்லை தொடர்ந்து விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.