`துப்பாக்கியுடன் செல்ஃபி; மயானத்தில் தற்கொலை!' - காதல் தோல்வியால் இளம் ஜோடி எடுத்த விபரீத முடிவு | Rajasthan couple commits suicide with pistols

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (14/06/2019)

கடைசி தொடர்பு:17:00 (14/06/2019)

`துப்பாக்கியுடன் செல்ஃபி; மயானத்தில் தற்கொலை!' - காதல் தோல்வியால் இளம் ஜோடி எடுத்த விபரீத முடிவு

ராஜஸ்தான் மாநிலம் பர்மர் நகரைச் சேர்ந்தவர்கள் அஞ்சு சுதார், சங்கர் சௌத்ரி. இருவருக்கும் 21 வயது ஆகிறது. அஞ்சு சுதார் என்ற பெண்ணுக்கு ஒரு மாதத்துக்கு முன்னதான் வேறு ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் இந்த இருவரும் நேற்று அதே பகுதியில் உள்ள ஒரு மயானத்துக்குச் சென்று நாட்டுத் துப்பாக்கியால் ஒருவருக்கு ஒருவர் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

தர்கொலை செய்துக்கொண்ட ஜோடி

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் இருவரின் உடலையும் கைபற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர். இறந்தவர்கள் இருவரும் முன்னர் காதலர்களாக இருந்து அது தோல்வியடைந்ததால் தற்போது தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகமடைந்துள்ளனர். இருவரின் உடல்கள் கிடைத்த இடத்தில் மது பாட்டில்கள், கிகரெட் துண்டுகளும் கிடந்துள்ளன. அதனால் அவர்கள் குடிபோதையில் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. 

தற்கொலைக்கு முன் எடுத்த புகைப்படம்

இது பற்றி பேசிய எஸ்.பி ராஷி துர்கா, ``இறந்த ஜோடி தங்களின் உயிரை மாய்த்துக்கொள்ள நாட்டுத் துப்பாக்கியைப் பயன்படுத்தியுள்ளனர். அவர்களுக்கு எப்படி துப்பாக்கி கிடைத்தது என்பது பற்றி இருவரின் உறவினர்கள், நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இறந்தவர்களின் உடற்கூறாய்வு அறிக்கை வந்தபிறகுதான் அவர்கள் எப்படி தற்கொலை செய்துகொண்டார்கள் என்ற முழு விவரம் தெரியவரும்” எனப் பேசியுள்ளார். 

தற்கொலை செய்துகொள்வதற்கு முன் இந்த இவரும் துப்பாக்கியுடன் புகைப்படம் எடுத்து அதை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். மேலும் இருவரின் கையிலும் மோதிரம் இருப்பது போன்றும், தங்கள் பெயர்களை எழுதியுள்ளது போன்ற புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளனர். இறப்பதற்கு முன் இவர்கள் வெளியிட்ட வீடியோ மற்றும் புகைப்படம் சமூகவலைதளத்தை ஆக்கிரமித்துள்ளது.