‘என்னால் அவருக்கு நன்றி கூட சொல்ல முடியவில்லை’ - கேரளத் தந்தையை நெகிழவைத்த பஸ் கண்டக்டர்! | kerala father kurian facebook post about pazhoor motors bus conductor

வெளியிடப்பட்ட நேரம்: 17:13 (14/06/2019)

கடைசி தொடர்பு:19:28 (15/06/2019)

‘என்னால் அவருக்கு நன்றி கூட சொல்ல முடியவில்லை’ - கேரளத் தந்தையை நெகிழவைத்த பஸ் கண்டக்டர்!

கேரள பஸ் கண்டக்டர் ஒருவருக்கு நேற்று முழுவதும் வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

குரியன்

கேரள மாநிலம் ஹரிபாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் பேருந்து தாமதம் குறித்து கேள்வி எழுப்பியதால், இளைஞர்கள் இருவர் பஸ் ஊழியர்களால் நடு இரவில் அடித்துத் துன்புறுத்தப்பட்டு கீழே இறக்கிவிடப்பட்ட சம்பவம் நடந்தது. இந்த சர்ச்சை இன்னும் ஓயாமல் உள்ளது. இந்த நிலையில் இந்தச் சம்பவத்துக்கு நேர்மாறாக ஒரு சம்பவமும் அதே கேரளாவில் நிகழ்ந்துள்ளது. பத்தனம்திட்டா அருகில் உள்ள கோழஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ். பஸ் கண்டக்டரான இவருக்கு நேற்று முழுவதும் வலைதளங்களில் பாராட்டுகள் குவியத் தொடங்கின. இவருக்கு வாழ்த்துக் குவிய காரணம் குரியன் என்பவரின் ஃபேஸ்புக் பதிவுதான். குரியனும் இதே பகுதியைச் சேர்ந்தவர்தான். குரியனின் மகள் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இதற்கிடையே, இரண்டு நாள்களுக்கு முன்பு இவரது மகள் பள்ளிக்கூடம் முடிந்தபின்பு, கோழஞ்சேரியிலிருந்து செங்கனூர் செல்லும் பேருந்தில் ஏறி ஆரன்முலா ஸ்டாப்பில் இறங்க வேண்டியவர், தவறி பத்தினம்திட்டா செல்லும் பேருந்தில் ஏறியுள்ளார்.

பேருந்து

எலந்தூர் அருகே வரும் போது கண்டக்டர் சந்தோஷ் சிறுமியிடம் `எங்கே போக வேண்டும்' எனக் கேட்கும் போது ``ஆரன்முலாவுக்கு செல்ல வேண்டும்'' எனக் கூறியுள்ளார். ஆனால் அந்த பஸ் மாற்று வழியில் பத்தினம்திட்டா செல்ல வேண்டியது. சிறுமி அப்படிக் கூறவும், எலந்தூரிலேயே சிறுமியுடன் இறங்கியுள்ளார் சந்தோஷ். சிறுமியிடம் விவரங்களை வாங்கி அவரது தந்தை குரியனுக்கு போன் செய்து நடந்தவற்றைத் தெரிவித்துள்ளார். அதன்பின் குரியன் வந்ததும் சிறுமியை அவரிடம் ஒப்படைத்த பிறகுதான் அங்கிருந்து சென்றுள்ளார் சந்தோஷ். இதை குரியன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட சந்தோஷுக்குப் பாராட்டுகள் குவிய ஆரம்பித்தன. அதில், ``சாதாரணமாக இப்படி யாரவது தவறி ஏறிவிட்டால் அவர்களை வழியில் இறக்கிவிட்டுச் செல்வதைதான் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் சந்தோஷ் என் மகளை எங்கும் இறக்கிவிடாமல் எனக்கு போன் செய்து நான் வரும் வரை காத்திருந்தார் அந்த நல்ல மனுஷன்.

கண்டக்டர் சந்தோஷ்

மற்றவர்களைப் போல அல்லாமல் எனது மகளை நான் வரும்வரை கவனமாகப் பார்த்துக்கொண்டார். அந்தச் சமயத்தில் அவரிடம் ஒரு நன்றிகூட சொல்ல முடியவில்லை. எனினும் சில மணி நேரங்கள் கழித்து சந்தோஷுக்கு போன் செய்து எனது நன்றியைச் சொன்னேன். அதற்கு அவர், ``எனக்கும் ஒரு மகள் இருக்கிறாள். அவளைப் போலத்தான் உங்கள் மகளையும் நினைத்தேன். அவ்வளவுதான்" என்று பெருந்தன்மையுடன் கூறினார். இன்றைய தினம் நான் வாழ்க்கையில் மறக்க முடியாது. ஒரு நல்ல மனிதனை என் வாழ்வில் சந்தித்துள்ளேன்" எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். இவர் பதிவிட்ட சில மணித்துளிகளில் வலைதளங்களில் வைரலாகப் பரவ ஆரம்பித்தது. கண்டக்டர் சந்தோஷின் மனிதாபிமானத்தை நெட்டிசன்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க