‘என் தலைவர்தான் என் கடவுள்!’ - ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்பில் சுவாரஸ்யம் | Andra MLA take oath in the name of YS Jagan Mohan Reddy

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (14/06/2019)

கடைசி தொடர்பு:19:00 (14/06/2019)

‘என் தலைவர்தான் என் கடவுள்!’ - ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்பில் சுவாரஸ்யம்

ஆந்திராவின் முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி கடந்த மாதம் 30-ம் தேதி பதவியேற்றார். அவர் பதவியேற்ற பிறகு ஜெகன் செய்யும் ஒவ்வொரு செயலாலும் ஆந்திர மக்கள் மனதை மட்டுமல்லாது பிற மாநில மக்களையும் கவர்ந்துவருகிறார்.

ஜெகன்மோகன் ரெட்டி

அம்மாநிலத்தில் ஐந்து துணை முதல்வர்களை நியமித்து இந்திய அரசியலில் புதிய மாற்றத்தை உருவாக்கினார். அதிலும் அவர்கள் அனைவரும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் சிறப்பாகப் பேசப்பட்டது. அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட துணை முதல்வர்கள் மற்றும் பிற அமைச்சர்கள் கடந்த 5-ம் தேதி பதவியேற்றுக்கொண்டனர்.

ஜெகன்மோகன் ரெட்டி

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அம்மாநிலத்தில் புதிய அரசின் முதல் சட்டமன்ற கூட்டம் நடைபெற்றது. அதில் ஜெகன்மோகன் ரெட்டி, அமைச்சர்கள் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் என அனைவரும் எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்குத் தற்காலிக சபாநாயகர் சம்பங்கி அப்பாலா பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

ஆந்திரா சட்டமன்ற கூட்டம்

பொதுவாக அனைவரும் பதவியேற்கும்போது, தங்கள் பெயரை கூறிவிட்டு, அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் உண்மையான நம்பிக்கையும் பற்றும் கொண்டிருப்பேன் என்றும் என் கடமையை நேர்மையாக நிறைவேற்றுவேன் என்றும் கடவுள் மீது ஆணையாக உறுதிமொழி ஏற்கிறேன்” என்று கூறுவார்கள்.

ஆந்திராவில் எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்ற ஜெகன்மோகன் ரெட்டி உட்பட அனைவரும்  ‘கடவுள் மீது ஆணையாக உறுதி ஏற்கிறேன்’ எனக் கூறிதான் பதவியேற்றனர். ஆனால் ஸ்ரீதர் ரெட்டி என்ற எம்.எல்.ஏ ஜெகன்மோகன் ரெட்டி மீது உள்ள மிகுந்த பாசத்தினாலும் ஈர்ப்பினாலும் “ஜெகன்மோகன் ரெட்டி மீது ஆணையாக உறுதி ஏற்கிறேன்” எனக் கூறி பதவியேற்றுள்ளார். இது அங்கு கூடியிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

எம்.எல்.ஏ ஸ்ரீதர் ரெட்டி

தொடர்ந்து ஸ்ரீதர் ரெட்டியின் பிரமாணத்தை ஏற்க சபாநாயகர் மறுத்துவிட்டார். பின்னர் ஸ்ரீதர், “நான் ஏன் ஜெகன் ரெட்டி பெயரில் பதவியேற்கக் கூடாது. இதற்கு முன்னதாக தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த ஒருவர் என்.டி.ஆர் பெயரில் உறுதி ஏற்றார். என் தலைவரை கடவுளாகக் கூறுவதில் என்ன தவறு உள்ளது? எனக் கேள்வி எழுப்பினார். இருந்தும் அவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் கடவுள் மீது ஆணை எனக் கூறி பதவியேற்றார். ஸ்ரீதர் ரெட்டி நெல்லூர் தொகுதியில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்.