Published:Updated:

`ஊரடங்கால் ரயில் ஓடாது என நினைத்தார்கள்..' - அவுரங்காபாத் ரயில் விபத்து கொடூரத்தை விளக்கும் போலீஸ்

ரயில் விபத்து
ரயில் விபத்து ( Twitter )

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பும்போது அவர்கள் மீது ரயில் மோதி 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

‘கொரோனா’ - இந்தப் பெயர் உலகத்தில் ஒலிக்கத் தொடங்கிய நாள் முதல் இந்த நிமிஷம் வரை, நேரடியாகவும் மறைமுகமாகவும் கொரோனாவால் பல லட்சக்கணக்காக மக்கள் பாதிக்கப்படுவதும் உயிரிழப்புகளும் நடந்து வருகின்றன. வறுமை, பசி, பயம், விபத்து என அனைத்து உயிரிழப்புகளுக்குப் பின்னாலும் கொரோனாவின் பெயர் ஒட்டிக்கொண்டுள்ளது.

நேற்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஊரடங்குக்குப் பிறகு திறக்கப்பட்ட தொழிற்சாலை முறையாகப் பராமரிக்கப்படாமல் இயக்கப்பட்டதால் வாயு கசிந்து 10-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

ரயில் விபத்து
ரயில் விபத்து
ANI

இந்தச் சம்பவம் நடந்து முழுதாக 24 மணிநேரம் கூட முடியாத நிலையில் இன்று அதிகாலை மகாராஷ்டிராவில் நடந்த மற்றுமொரு கோரச் சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்தான் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது தாங்கள் இருக்கும் இடத்தில் வேலை, உணவு போன்ற எதுவும் இல்லாமல் போக்குவரத்து தடையால் தங்கள் சொந்த ஊர்களுக்கும் திரும்ப முடியாமல் தவித்து வந்தனர்.

`இயக்கப்படாமல் இருந்த டேங்குகள்; கொடிய ஸ்டைரீன் வாயு!' - விசாகப்பட்டினத்தை உலுக்கிய கொடூர சம்பவம்

அவர்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பல மைல்கள் நடந்தே தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். தேசிய அளவில் மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த நேரத்தில் தொழிலாளர்களின் இடப்பெயர்வைப் போக்க, அரசே போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது. இருந்தும் பலர் நடந்து சென்றுகொண்டுதான் இருக்கின்றனர். அப்படி மகாராஷ்டிராவின் ஜால்னா நகரிலிருந்து அவுரங்காபாத் சென்றுகொண்டிருக்கும்போது இரவு அசதியால் ரயில் தண்டவாளத்தில் சிலர் படுத்து உறங்கியுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ரயில் படுத்திருந்தவர்கள் மீது மோதியுள்ளது. இதனால் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரயில் விபத்து
ரயில் விபத்து
Twitter

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் இறந்தவர்களின் உடலை அப்புறப்படுத்தி, காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அவுரங்காபாத் காவல்துறை அதிகாரி மோக்‌ஷதா பாட்டில், “இது ஒரு துரதிஷ்டமான நிகழ்வு. இறந்தவர்களின் உடன் வந்த 4 பேர் தண்டவாளத்துக்கு அருகில் இருந்துள்ளனர். அதனால் அவர்கள் உயிர் தப்பியுள்ளனர். நாங்கள் அவர்களிடம் பேச முயன்றோம் இன்னும் அந்த நால்வரும் பீதியிலிருந்து வெளியில் வரவில்லை.

பின்னர், இது தொடர்பாக ரயில்வே நிர்வாகத்திடம் பேசினோம். சம்பவம் நடந்த போது சிலர் தண்டவாளத்தில் இருப்பது அருகில் வந்தவுடன்தான் ரயில் ஓட்டுநருக்குத் தெரிந்ததாகவும் அவர் உடனடியாக ரயிலை நிறுத்த முற்படுவதற்குள் ரயில் அவர்கள் மீது மோதிவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். பந்த்பூர்- கார்மட் ரயில் நிலையத்துக்கு நடுவில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்” என்று கூறியுள்ளார்.

ரயில் விபத்து
ரயில் விபத்து
ANI

ரயில் விபத்து தொடர்பாக உயிர்பிழைத்தவர்கள் கூறிய தகவலை, ஜால்னா மாவட்ட நிர்வாகம் அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதில், ‘ உயிரிழந்த அனைவரும் மத்தியப் பிரதேசத்தின் உமேரியா, ஷாதோல் பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மகாராஷ்டிராவில் தினக்கூலிகளாக வேலை செய்து வந்துள்ளனர். ஊரடங்கால் வேலையிழந்து தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல, ஜால்னாவில் இருந்து பந்த்பூர் வரை சாலை மார்க்கமாக நடந்து வந்துள்ளனர். அங்கிருந்து ரயில் தண்டவாளத்தில் நடந்தால் எளிதில் அவுரங்காபாத்தை அடைந்துவிடலாம் என்பதற்காக அந்த வழியாக வந்துள்ளனர்.

`களைப்பால் தண்டவாளத்தில் தூக்கம்’ -14 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரைப் பறித்த காலி சரக்கு ரயில்

ஊரடங்கு நேரத்தில் எந்த ரயிலும் இயக்கப்படாது என்பதால் இரவு தண்டவாளத்திலேயே படுத்து உறங்கியுள்ளனர். 14 பேர் தண்டவாளத்திலும் இருவர் அதற்கு அருகிலும் 4 பேர் தண்டவாளத்தை விட்டு சற்று தள்ளியும் உறங்கியுள்ளனர். இவர்களில் தண்டவாளத்தில் படுத்திருந்த 14 பேர் சம்பவ இடத்திலும், அருகிலிருந்த இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றியும் உயிரிழந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 16- ஆக அதிகரித்துள்ளது. மீதமுள்ளவர்களுக்கு மனநல சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் தொடர்ந்து 2 நாள்களாக நடக்கும் பெரும் விபத்துச் சம்பவங்களால் மொத்த தேசமும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு