Published:Updated:

`எங்கள் சமுதாயம் உங்களை மொத்தமாகப் புறக்கணித்துவிடும்!’ -மடாதிபதியின் மிரட்டலால் மிரண்ட எடியூரப்பா

எடியூரப்பா
எடியூரப்பா

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை மேடையிலேயே மிரட்டும் தொனியில் பேசிய மடாதிபதியின் வீடியோ, வைரலாகிவருகிறது.

கர்நாடக மாநிலம் தாவனகெரே நகரில் பஞ்சம்சாலி சமுதாயத்தினரின் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் அம்மாநில முதல்வர் எடியூரப்பா, உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை உட்பட, பா.ஜ.க-வின் நிர்வாகிகள் மற்றும் பஞ்சம்சாலி சமூகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

மேடையில் எடியூரப்பா
மேடையில் எடியூரப்பா

அப்போது, முதல்வர் எடியூரப்பாவை நோக்கி மேடையில் பேசிய பஞ்சம்சாலி சமூகத்தின் மடாதிபதி வச்சானந்தா, “எங்கள் சமூகத்தைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் உங்களுக்குத் துணையாக இருக்கிறார்கள். அதிலும் எம்.எல்.ஏ முருகேஷ் நிரானி, ஒரு தூண் போல இருக்கிறார். அவருக்கு கர்நாடக அமைச்சரவையில் பதவி வழங்காவிட்டால், மொத்த பஞ்சம்சாலி சமுதாயமும் உங்களைப் புறக்கணித்துவிடும்” என்று கூறினார். மேடையில் அமர்ந்தபடி ஆயிரக்கணக்கானவர்கள் கேட்கும் வகையில் மைக்கிலேயே இவ்வாறு பேசினார் மடாதிபதி.

இதைக் கேட்டு கொதித்த எடியூரப்பா, உடனடியாகத் தன் இருக்கையிலிருந்து எழுந்து, ‘இதுபோன்று பேச வேண்டாம், இதைக் கேட்பதற்காக நான் இங்கு வரவில்லை. உங்கள் பேச்சை ஏற்க முடியாது’ எனக் கூறி கோபத்தை வெளிப்படுத்தினார்.

அப்போதும் மிரட்டும் தொனியில் அவரை இருக்கையில் அமரும்படி கூறி, ‘ நான் நியாயத்தை மட்டுமே பேசுகிறேன்’ என்றார் மடாதிபதி வச்சானந்தா. கோபத்தின் உச்சத்திலிருந்த எடியூரப்பாவை அருகிலிருந்தவர்கள் சமாதானப்படுத்தி அமரவைத்தனர்.

மடாதிபதி, எடியூரப்பா
மடாதிபதி, எடியூரப்பா

பின்னர், மேடையில் பேசிய கர்நாடக முதல்வர் எடியூரப்பா, “நான் முதல்வர் பதவியில் அமர வேண்டும் என்பதற்காக 17 எம்.எல்.ஏ-க்களும் சில அமைச்சர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அவர்களுக்கு என்னால் துரோகம் செய்ய முடியாது. அவர்கள் இல்லை என்றால் இன்று நான் முதல்வராக இருக்க முடியாது.

`அமித் ஷாவால்தான் எல்லாம் நடந்தது’- பா.ஜ.க ரகசியத்தைப் போட்டு உடைத்த எடியூரப்பா?

நீங்கள் என்னிடம் கோரிக்கை வைக்கலாம், அறிவுரை கூறலாம், நேரடியாகப் பேசலாம். ஆனால், இப்படித்தான் இருக்க வேண்டும் என எதுவும் சொல்லக்கூடாது. நீங்கள் சொல்வதைவைத்து ஆட்சி நடத்த முடியாது. மீதமுள்ள மூன்று ஆண்டுக்கால ஆட்சியை வெற்றிகரமாக நான் நிறைவுசெய்ய எனக்குத் துணை நில்லுங்கள். இல்லையேல், என் பதவியை ராஜினாமா செய்யவும் நான் தயாராக உள்ளேன். நான் பதவிக்கு அடிமையானவன் கிடையாது” என ஆவேசமாகப் பேசிவிட்டுப் புறப்பட்டார்.

எடியூரப்பா
எடியூரப்பா

மடாதிபதி வச்சானந்தா, கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை மிரட்டும் வகையில் பேசிய வீடியோ, இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ முருகேஷ் நிலானி, “ எடியூரப்பா எங்களுக்குத் தந்தை போன்றவர். அவர் செய்வது அனைத்தும் சரியாகவே இருக்கும். அவரது விருப்பம்தான் எங்களது விருப்பமும். மீதமுள்ள மூன்று ஆண்டுகளை நாங்கள் வெற்றிகரமாக நடத்துவோம்” என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரம், கர்நாடக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்துப் பேசியுள்ள கர்நாடக மாநிலத்தின் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் வி.எஸ். உக்ரப்பா, “ எடியூரப்பா புலி இல்லை எலி. மோடியின் ஆதரவாளர்களைக்கூட இவரால் ஈர்க்க முடியாது. இடைத்தேர்தலில் தான் வெற்றிபெற்ற 24 மணி நேரத்தில் தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சரவையில் இடமளிப்பதாகக் கூறினார். ஆனால், இதுவரை செய்யவில்லை. இயலாமை மற்றும் அரசியல் விரக்தியால் அவர் ராஜினாமா செய்தால்கூட பெரிய ஆச்சர்யம் இல்லை” என்று விமர்சித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு