32 ஆண்டுகளில் இல்லாத அளவில் ஆந்திராவில் வெள்ளம்: 100 கிராமங்கள் மூழ்கியது

ஹைதராபாத்: ஆந்திராவின் கோதாவரி ஆற்றில் கடந்த 32 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் நூற்றுக்கணக்கான கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

வாரங்கல், கம்மம், கரீம்நகர், கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

கோதாவரி ஆற்றில் மட்டும் நீர்வரத்து 17 லட்சம் கன அடியாக உள்ளது. இதற்கு முன் 1981ஆம் ஆண்டு 36 லட்சம் கன அடியாக இருந்தே மிக அதிகமான நீர்வரத்தாக கருதப்படுகிறது.

இதற்கிடையே மாநிலத்தின் வெள்ள நிலைமை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி, போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

மேலும் மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க 100 முகாம்களை அமைத்துள்ள ஆந்திரா அரசு, சாலை துண்டிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொட்டலம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமப் புற மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுசெல்லும் பணியில் ராணுவத்தினர் தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!