Published:Updated:

`காரில் அழைத்துச் சென்றார்; மிரட்டினார்!’- புத்தாண்டு தினத்தில் குஜராத் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

குஜராத்தில் இளம் பெண் ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும் தாக்குதல்களும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. டெல்லியில் நிர்பயா, கத்துவா சிறுமி, உன்னாவ் பெண், ஹைதராபாத் கால்நடை மருத்துவர் என பாலியல் வன்கொடுமையால் உயிரிழக்கும் பெண்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

வன்கொடுமை
வன்கொடுமை

இப்படியான ஒரு சம்பவம் குஜராத்திலும் நடந்துள்ளது. 2020-ம் ஆண்டை வரவேற்க உலகம் முழுவதும் உள்ள மக்கள் காத்திருந்த வேளையில்தான் குஜராத் இளம்பெண் ஒருவருக்குத் துயரமான சம்பவம் நேர்ந்துள்ளது.

குஜராத் மாநிலம் ஆரவல்லி மாவட்டம் சரியா என்ற கிராமத்தைச் சேர்ந்த 19 வயதுப் பெண் கடந்த டிசம்பர் மாதம் 31-ம் தேதி தன் சகோதரியுடன் மொடாசா நகருக்குச் சென்றுள்ளார்.

நீண்ட நேரமாகியும் அந்தப் பெண் வீடு திரும்பவில்லை. அவரின் குடும்பத்தினர் கிராமம் முழுவதும் தேடி அலைந்துள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காததால் இறுதியாக ஜனவரி 1-ம் தேதி தங்கள் பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் பெண்ணுடன் சென்ற அவரின் சகோதரியிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதில், தாங்கள் சென்று கொண்டிருக்கும்போது பிமல் பர்வாட் என்ற நபர், தன் சகோதரியை காரில் அழைத்துச் சென்றதாகவும் அதைப் பற்றி வெளியில் யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என மிரட்டியதாகவும் அவர் கூறியுள்ளார்.

இறந்த பெண்
இறந்த பெண்

இதை அறிந்த காவலர்கள், இந்த விவகாரம் குறித்து விசாரிப்பதாகக் கூறி வழக்கு பதிவு செய்யாமல் பெண்ணின் பெற்றோரை அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து ஜனவரி 3-ம் தேதி அந்தப் பெண்ணின் பெற்றோரை அழைத்த இன்ஸ்பெக்டர் ரபாரி, `காரில் வந்த நபருக்கும் உங்கள் பெண்ணுக்கும் தொடர்பு உள்ளது. இருவரும் திருமணம் செய்துகொள்ள எங்காவது சென்றிருப்பார்கள். விரைவில் உங்கள் பெண் வீட்டுக்கு வந்துவிடுவார்’ எனக் கூறி அப்போதும் வழக்கு பதிவு செய்யாமல் இருந்துள்ளார்.

நண்பர்களால் பாலியல் வன்கொடுமை; மோசமடைந்த சிறுமியின் உடல்நிலை! - பெற்றோரை கண்கலங்க வைத்த 45 வது நாள்

இந்நிலையில், ஜனவரி 5-ம் தேதி `சரியா கிராமத்தில் உள்ள ஒரு ஆலமரத்தில் இளம்பெண்ணின் சடலம் தூக்கில் தொங்குகிறது’ என்ற தகவல் போலீஸாருக்கு கிடைக்கிறது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அகமதாபாத் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து காணாமல்போன பெண்ணின் தாத்தா மூலம் இறந்த பெண்ணின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பவர், காணாமல்போன அதே பெண்தான். அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் எனப் பிரேதப் பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.

குஜராத் போலீஸ்
குஜராத் போலீஸ்

பின்னர் 7-ம் தேதி இறந்த பெண்ணின் தாத்தா, பிமல் பர்வாட் என்பவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அவரிடம் நடந்த விசாரணையில், இளம்பெண் கடத்தப்பட்ட கார் தன்னுடையதுதான் என்றும், ஆனால் அதைத் தன் நண்பர்களான தர்ஷன் பர்வாட், சதீஷ் பர்வாட் மற்றும் ஜிகார் ஆகிய மூவரும்தான் எடுத்துச் சென்றனர் எனக் கூறியுள்ளார். இதனால் கொதிப்படைந்த பெண்ணின் உறவினர்கள், `பெண்ணின் நிலைக்குக் காரணமானவர்களைக் கைது செய்யும் வரை அவரது உடலை வாங்கப்போவதில்லை' என்றுகூறி தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.

இது பற்றிப் பேசியுள்ள மருத்துவமனையின் கண்காணிப்பாளர் குன்வந்த் ரத்தோட், ``போராட்டக்காரர்கள் என்னைச் சந்தித்து இறந்த பெண்ணின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை வெளியிடும்படி சத்தம் போடுகின்றனர். மக்களின் உணர்ச்சிகளைக் காவல் அதிகாரிகளிடம் நாங்கள் கொண்டு சென்றுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

இளம் பெண் இறந்த சம்பவம் சரியா கிராம மக்களுக்குத் தெரியவர, 100-க்கும் அதிகமான மக்கள் ஒன்று திரண்டு அகமதாபாத் மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தியுள்ளனர்.

போராட்டம்
போராட்டம்

``எங்களுக்கு இரண்டு கோரிக்கைகள் உள்ளன. ஒன்று பெண்ணின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை வெளியிட்டு அவரின் நிலைக்குக் காரணமானவர்கள் கைது செய்யப்பட வேண்டும். மற்றொன்று நிறைய புகார் அளித்தும் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர் ரபாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது நிறைவேற்றப்பட்டால் மட்டுமே பெண்ணின் உடலைப் பெற்றுக்கொள்வோம்” என்று போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் பற்றிப் பேசியுள்ள குஜராத் துணை டி.ஜி.பி ஓஜ்ஹா, ``ஆரவல்லி பகுதி காவல்துறை கண்காணிப்பாளரிடம் இந்த விவகாரம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். இதில் காவல்துறையினர் கவனக்குறைவாகச் செயல்பட்டுள்ளனரா என்ற விசாரணையும் தொடங்கியுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

`குஜராத் பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும்' என்ற ஹாஸ்டேக்குகள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

அடுத்த கட்டுரைக்கு