லாலு மீதான மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் 30ல் தீர்ப்பு!

ராஞ்சி: பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் மீதான மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சி.பி.ஐ. நீதிமன்றம் வரும் 30ஆம் தேதி தீர்ப்பளிக்கிறது.

ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவ், கடந்த 1990 ஆம் ஆண்டு பீகார் முதல்வராக இருந்தபோது, ரூ.950 கோடியிலான மாட்டுத்தீவன ஊழல் அம்பலத்துக்கு வந்தது.

இந்த வழக்கில் லாலுபிரசாத் யாதவ், முன்னாள் முதல்வர் ஜகனாத் மிஸ்ரா, முன்னாள் அமைச்சர் வித்யாசாகர் நிசார், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் என மொத்தம் 45 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

பிரிக்கப்படாத பீகார் மாநிலத்தில் இருந்த, தற்போது ஜார்கண்ட் மாநில தலைநகராக உள்ள ராஞ்சியில் 7 சி.பி.ஐ. தனி நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. அந்த அந்த நீதிமன்றகள், இதுவரை 44 வழக்குகளில் தீர்ப்பு அளித்து விட்டன. இன்னும் 9 வழக்குகளில் தீர்ப்பு அளிக்க வேண்டி உள்ளது.

அவற்றில் லாலுபிரசாத் யாதவ் உள்பட 45 பேர் மீதான ஊழல் வழக்கும் அடங்கும். போலி ரசீதுகளை சமர்ப்பித்து, அரசு கருவூலத்தில் இருந்து ரூ.37 கோடியே 70 லட்சம் பெற்றதாக 45 பேர் மீதும் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ. தனிநீதிமன்றத்தில் நேற்று இருதரப்பு வாதங்கள் முடிவடைந்தன. இதையடுத்து, வழக்கின் தீர்ப்பை வரும் 30ஆம் தேதிக்கு நீதிபதி பிரவாஸ் குமார் சிங் ஒத்திவைத்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!