Published:Updated:

`பேச்சை மீறிச் சென்றான், இறுதியில்...! - அஸ்ஸாம் துப்பாக்கிச் சூட்டில் மகனை இழந்த தாய் கதறல்

அஸ்ஸாம் போராட்டம்
அஸ்ஸாம் போராட்டம் ( AP )

அஸ்ஸாம் போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்தில் நீண்ட காலங்களாகவே பெரும் பிரச்னையாக உள்ள ஒரு விஷயம் குடியுரிமைப் பதிவேடு. இதில் திருத்தம் செய்யப்பட்டு நாடாளுமன்றத்திலும் நிறைவேறி தற்போது சட்டமாக்குவதற்குக் குடியரசுத் தலைவரும் அனுமதியளித்துவிட்டார். முதலில் மக்கள் போராட்டமாகத் தொடங்கிய இந்தக் குடியுரிமைச் சட்ட எதிர்ப்பு, இன்று மாணவர்கள் போராட்டமாக மாறியுள்ளது.

அஸ்ஸாம் போராட்டம்
அஸ்ஸாம் போராட்டம்
AP

அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு நடந்த போராட்டத்தில் திடீர் கலவரம் வெடித்தது. இதனால் அங்கு போராட்டக்கார்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் வெடித்தது. பின்னர் போராட்டக்காரர்கள் மீது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் தீபஞ்சல் தாஸ் மற்றும் சாம் ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அதே துப்பாக்கிச் சூடு தாக்குதலில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் இருவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கௌஹாத்தி ஹோட்டலில் பணிபுரியும் தீபஞ்சல் தாஸ் இறந்த நாள் பற்றி அவரது தாய், ஊடகத்தினரிடம் தெரிவித்துள்ளார். “ கடந்த 12-ம் தேதி பிற்பகல் 1:30 மணி இருக்கும் எனக்கு போன் செய்த தாஸ் ‘நான் போராட்டத்தில் கலந்துகொள்ளச் செல்கிறேன் அம்மா’ எனத் தெரிவித்தான். ‘அங்கு போகாதே போராட்டத்தில் பல பிரச்னைகள் நடப்பதாக நான் கேள்விப்பட்டேன் நேராக வீட்டுக்கு வா’ என்று கூறினேன். என் பேச்சைக் கேட்காத அவன் போராட்டத்தில் கலந்துகொண்டான்.

அஸ்ஸாம் போராட்டம்
அஸ்ஸாம் போராட்டம்
AP

அஸ்ஸாம் மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினராக தாஸ் இருந்தான். அவர்கள் மூலமே அந்தப் போராட்டத்திலும் அவன் கலந்துகொள்ளச் சென்றான். பிறகு மாலை 5 மணிக்கு மீண்டும் போன் வந்தது. எதிர் திசையில் நான் இதுவரை கேட்காத குரல் ஒன்று, துப்பாக்கிச் சூட்டில் தீபஞ்சல் இறந்துவிட்டதாகக் கூறியது. அதைக் கேட்டதும் நான் உடைந்துவிட்டேன். பேச்சை மீறிச் சென்றான் இறுதியில் பெட்டியில்தான் வீடு திரும்பினான்” எனக் கண்ணீருடன் கூறியுள்ளார்.

`குடியுரிமை பற்றிக்கூடத் தெரியாது; ஆனால்?’ - அஸ்ஸாம் துப்பாக்கிச்சூடு கோரத்தை விவரிக்கும் நண்பர்

அதே கலவரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்த சாம் பற்றிப் பேசிய அவரது நண்பர், ``நான், சாம் எனப் பலரும் அன்று நடந்த கலவரத்தில் கலந்துகொண்டோம். பிற்பகல், வீடு திரும்பிக்கொண்டிருக்கும்போது நாங்கள் வந்த சாலையில் பதற்றம் நிலவியது. அங்கு என்ன நடக்கிறது என்பதை நாங்கள் அறிந்துகொள்ளும் முன் சாம்மின் முகத்தைத் துப்பாக்கிக் குண்டு துளைத்தது. அவன் தன்னிலை மறந்து கீழே விழுந்தான். அவனது முகம் முழுவதும் ரத்த வெள்ளமாகியது. பின்னர் ஆம்புலன்ஸ் வருவதற்குள் சாம் இறந்துவிட்டான்” எனத் தெரிவித்துள்ளார்.

அஸ்ஸாம் போராட்டம்
அஸ்ஸாம் போராட்டம்
AP

இவர்கள் இருவரும் இறந்த பிறகு மறுநாளே அதே அஸ்ஸாமின் கௌஹாத்தியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்று திரண்டு மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ‘மக்களின் உரிமைக்காக தங்கள் உயிர் நீத்தவர்களை எப்போதும் நாங்கள் மறக்கமாட்டோம்’ என்ற கோஷங்களுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்களைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக அஸ்ஸாம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், மாநிலத்தின் பல பகுதிகளில் இணையத் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாம் நிலைமை தற்போது கட்டுக்குள் உள்ளதாகவும் காவலர்களுக்கு ஒத்துழைத்து அளித்த மக்களுக்கு நன்றி என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு