Published:Updated:

அரசு பஸ்ஸில் பயணிக்க பயம்; உயிரைப் பறிக்கும் விபத்துகள்! - ஊழியர்கள் போராட்டத்தால் திணறும் தெலங்கானா

தெலங்கானா மாநிலத்தில் நடைபெறும் போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் அம்மாநில மக்கள் கடும் சிரமம் அடைந்துள்ளனர்.

தெலங்கானா வேலை நிறுத்தம்
தெலங்கானா வேலை நிறுத்தம்

தெலங்கானாவைச் சேர்ந்த போக்குவரத்து ஊழியர்கள் கடந்த 5-ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தெலங்கானா சாலை போக்குவரத்துக் கழகத்தை (TSRTC) முழுமையாக அரசுடன் இணைப்பது, பல்வேறு காலி பணியிடங்களுக்குப் போதுமான ஆட்களை நியமிப்பது, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்குப் பணி பாதுகாப்பு வழங்குவது, 2017 ஊதிய சீரமைப்புப் பரிந்துரைகளை அமல் படுத்துவது மற்றும் டீசல் மீதான வரியை அகற்றுவது போன்றவை தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

தெலங்கானா வேலை நிறுத்தம்
தெலங்கானா வேலை நிறுத்தம்

விஜயதசமி விடுமுறை நாள்களில் இவர்கள் போராட்டம் தொடங்கியதால் அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், இதைக் கடுமையாகக் கண்டித்தார். “விடுமுறை நாள்களில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது குற்றம். அனைவரும் விரைவில் பணிக்குத் திரும்ப வேண்டும். அப்படித் திரும்பாதவர்கள் வேலை இழந்ததாக அறிவிக்கப்படுவார்கள்” என எச்சரித்தார்.

ஆனால், இதைக் காதில் வாங்காத ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் கோபத்தின் உச்சத்துக்குச் சென்ற முதல்வர், தெலங்கானாவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட 48,000 ஊழியர்களும் வேலை இழந்ததாக அறிவித்தார். இதனால் தற்போது ஊழியர்கள் போராட்டம் அதிக வீரியம் அடைந்துள்ளது.

போக்குவரத்து ஊழியர்
போக்குவரத்து ஊழியர்

தொடர் போராட்டம் வேலை இழப்பு, மன அழுத்தம் போன்ற காரணங்களால் இதுவரை மூன்று போக்குவரத்து ஊழியர்கள் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். அதில் தீக்குளித்த ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் பேருந்துகளை இயக்க தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள ஓட்டுநர்களால் அதிக விபத்துகள் நடப்பதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அனைவரும் பணி இழந்ததால் அந்த இடத்தை நிரப்புவதற்காகத் தற்காலிக ஓட்டுநர்களைக் கொண்டு 50% போக்குவரத்தைச் சரிசெய்துள்ளது தெலங்கானா அரசு. லாரி ஓட்டுநர்கள், பிற வாகன ஓட்டுநர்கள் போன்ற பலரையும் அவசரமாக வேலைக்கு எடுத்து, அவர்கள் விபத்து ஏற்படுத்துவதால் சர்ச்சையில் சிக்கியுள்ளது தெலங்கானா அரசு.

தெலங்கானா வேலை நிறுத்தம்
தெலங்கானா வேலை நிறுத்தம்

நிஸாமாபாத், எல்லம்மகுட்டா (Yellammagutta) பகுதியைச் சேர்ந்த அபீபா பேகம் என்ற பெண், சாலையைக் கடக்கும்போது அந்த வழியாக வந்த ஆர்.டி.சி பேருந்து மோதி உயிரிழந்துள்ளார். பேருந்தை இயக்கிய தற்காலிக ஓட்டுநரைப் பிடித்த பொதுமக்கள் அவரைக் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்தத் தற்காலிக ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. “ஓட்டுநர் மிகவும் வேகமாகப் பேருந்தை இயக்கி, வளைவில் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்படுத்தியுள்ளார்” எனப் பாதிக்கப்பட்ட பெண்ணின் மகள் குற்றம்சாட்டியுள்ளார்.

`மனம் மாறாத ராவ்; சாவைத் தேடும் அரசு ஊழியர்கள்!’ - பதற்றத்தில் தெலங்கானா

இதே போன்று மெட்சல் மாவட்டத்தில் உள்ள செங்கிசேர்லா பகுதியில் ஓய்வு பெற்ற விமானப் படை அதிகாரி ஒருவர் தன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருக்கும்போது பின்னால் வந்த ஆர்.டி.சி பேருந்து மோதி உயிரிழந்துள்ளார். ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தின் மோதியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தெலங்கானா வேலை நிறுத்தம்
தெலங்கானா வேலை நிறுத்தம்

“இப்போதெல்லாம் அரசுப் பேருந்துகளில் பணிக்கவே மிகவும் பயமாக உள்ளது. என் குடும்பத்தினரும் பொதுமக்களும் இதைத்தான் சொல்கிறார்கள். தற்காலிக ஓட்டுநர்களால் நாங்கள் அவதிப்படுகிறோம். இந்த பிரச்னையை நீங்கள்தான் சரிசெய்ய வேண்டும்” எனத் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் செயல் தலைவர் கே.டி.ஆரை டேக் செய்து தெலங்கானா இளைஞர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

வேலைநிறுத்தம் செய்த போக்குவரத்து ஊழியர்கள்! - கூண்டோடு டிஸ்மிஸ் செய்த தெலங்கானா முதல்வர்

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஊழியர்களை பணியைவிட்டு நீக்கியதற்கு மாநில அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்வது தொடர்பாக நேற்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், முக்கிய அதிகாரிகள், ஆர்.டி.சி அலுவலர்கள் போன்ற பலரையும் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்

பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாதவாறு அரசு விரைந்து செயல்பட்டு இந்த பிரச்னையைத் தீர்க்க வேண்டும் எனத் தெலங்கானா அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார் அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன். ஊழியர்களின் வேலை நிறுத்தம், பணி பறிப்பு, தற்கொலை, விபத்து போன்ற தொடர் பிரச்னைகளால் தவித்துவருகிறது தெலங்கானா அரசு.