Published:Updated:

`குடியுரிமை பற்றிக்கூடத் தெரியாது; ஆனால்?’ - அஸ்ஸாம் துப்பாக்கிச்சூடு கோரத்தை விவரிக்கும் நண்பர்

அஸ்ஸாம் போராட்டம்
அஸ்ஸாம் போராட்டம் ( AP )

அஸ்ஸாமில் நடந்த குடியுரிமைச் சட்டத் திருத்தம் தொடர்பான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

அஸ்ஸாம் மாநிலத்தில் நீண்ட காலங்களாகவே பெரும் பிரச்னையாக உள்ள ஒரு விஷயம் குடியுரிமை பதிவேடு. இதில் திருத்தம் செய்யப்பட்டு நாடாளுமன்றத்திலும் நிறைவேறி தற்போது சட்டமாக்குவதற்குக் குடியரசுத் தலைவரும் அனுமதியளித்துவிட்டார். குடியுரிமை மசோதா தாக்கலின்போது அதை எதிர்த்து அனைத்து எதிர்க்கட்சியினரும் நாடாளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டனர். அதேபோல் இதே குடியுரிமையை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பெரும் போராட்டங்கள் நடந்து வருகின்றன ஆனால், இதே போராட்டம் அஸ்ஸாமில் உச்சத்தை எட்டியுள்ளது.

அஸ்ஸாம் போராட்டம்
அஸ்ஸாம் போராட்டம்
AP

குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் முன்பு கடந்த செவ்வாய்க்கிழமை மாலை முதல் அஸ்ஸாம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டது. மறுநாள் டிசம்பர் 11-ம் தேதி குடியுரிமை மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்னர் அம்மாநிலத்தின் பல பகுதிகளில் போராட்டங்கள் தொடங்கின. இரு அவைகளிலும் மசோதா தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அதைத் திரும்பப் பெறக் கோரி மாநிலம் முழுவதும் பெரும் போராட்டம் வெடித்தது. கடந்த வியாழக்கிழமை நடந்த போராட்டத்தில் போலீஸார் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

அன்று நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலை நேரில் பார்த்த ஆசிஃப் அலோம், அது பற்றி Scroll.in ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ளார். அதில், ``போராட்டம் நடந்துகொண்டிருக்கும்போது ஐந்து போலீஸ் வாகனங்கள் அந்தப் பகுதிக்கு வரிசையாக வந்து அணிவகுத்தன. அதில் கடைசி வாகனத்திலிருந்து ஹெல்மெட் அணிந்தபடி சில வீரர்கள் இறங்கி தங்கள் நிலையில் நின்றார்கள். பின்னர், எந்த அறிவிப்பும் கொடுக்காமல் கண் இமைக்கும் நொடியில் துப்பாக்கிச்சூடு நடத்தத் தொடங்கிவிட்டனர். அவர்கள் ரப்பர் அல்லது கண்ணீர் புகைக் குண்டு போன்ற எதையும் வீசவில்லை; மாறாக உண்மையான துப்பாக்கிக் குண்டுகளை வைத்தே தாக்குதல் நடத்தினர்” என்று தெரிவித்துள்ளார்.

அஸ்ஸாம் போராட்டம்
அஸ்ஸாம் போராட்டம்
AP

போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 26 பேர் குண்டடிபட்டு கவுஹாத்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீபஞ்சல் தாஸ் மற்றும் சாம் ஆகிய இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் இறந்துள்ளனர். மாணவர் சாம் பற்றிப் பேசிய அவரின் நண்பர், ``வியாழக்கிழமை கவுஹாத்தி, லதாசில் மைதானத்தில் நடந்துகொண்டிருந்த போராட்டத்தில் கலந்துகொள்ள நாங்கள் சென்றோம். பிற்பகல் 3 மணிக்கு தன் வீட்டுக்குச் சென்று கொண்டிருக்கும்போது வழியில் பாதுகாப்புப் படையினருக்கும் போலீஸாருக்கும் இடையே கலவரம் நடந்துகொண்டிருந்தது.

`அமைதியைத்தான் நாங்களும் விரும்புகிறோம்!' - போராட்டம் குறித்து அஸ்ஸாம் காவல்துறையினர்

அப்போதுதான் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தத் தொடங்கினர். நாங்கள் அனைவரும் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக ஓடினோம். சாமும் அப்படித்தான் ஓடினான், ஒருகட்டத்தில் போலீஸார் சுட்டதில் ஒருவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். ஆனால், கடைசியில்தான் தெரிந்தது அது சாம் என்று. அவனது வாயைத் துப்பாக்கிக் குண்டு துளைத்துள்ளது. சாம் எப்போதும் சிரித்தவாறே பிறருக்கு உதவி செய்வதில் அதிக கவனம் செலுத்துவான். போராட்டத்தில் கலந்துகொண்டதும் பிறருக்கு உதவி செய்யத்தான். அவனுக்கு குடியுரிமைச் சட்டம் என்றால் என்ன என்று முழுமையாகத் தெரியுமா என்றுகூடத் தெரியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

அஸ்ஸாம் போராட்டம்
அஸ்ஸாம் போராட்டம்
AP

``சாம்முக்கு இசை என்றால் மிகவும் பிடிக்கும். இந்த நகரத்தின் பல பகுதிகளுக்குச் சென்று தபேலா வாசிக்க வேண்டும் என்று அவனுக்கு நிறைய ஆசை. அவன் போராட்டத்தில் கலந்துகொண்டதுக்கு இசையும் ஒரு காரணம். அங்கு வந்திருந்த மியூஸிக் குருப்பை பார்க்கவும்தான் அவன் சென்றிருந்தான். இப்படி நடக்கும் என நாங்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை” என சாம்மின் பள்ளி நண்பர்கள் பகிர்ந்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு