Published:Updated:

மியான்மாரில் 2 தமிழர்கள் சுட்டுக் கொலை: மணிப்பூரின் மோரே பகுதியும் தமிழர்களும்... ஒரு பார்வை!

மியான்மாரில் கொலை செய்யப்பட்ட இரு தமிழர்கள்.

``உலகில் எந்த நாட்டு மக்களுக்குத் துயர் நிகழ்ந்தாலும் தமிழர் மண் அழுதிருக்கிறது; ஆயினும் தமிழர்கள் எந்த நாட்டிற்குச் சென்றாலும் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் இன்றளவும் தொடர்கின்றன என்பது மிகுந்த வேதனைக்குரியது” - சீமான்

மியான்மாரில் 2 தமிழர்கள் சுட்டுக் கொலை: மணிப்பூரின் மோரே பகுதியும் தமிழர்களும்... ஒரு பார்வை!

``உலகில் எந்த நாட்டு மக்களுக்குத் துயர் நிகழ்ந்தாலும் தமிழர் மண் அழுதிருக்கிறது; ஆயினும் தமிழர்கள் எந்த நாட்டிற்குச் சென்றாலும் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் இன்றளவும் தொடர்கின்றன என்பது மிகுந்த வேதனைக்குரியது” - சீமான்

Published:Updated:
மியான்மாரில் கொலை செய்யப்பட்ட இரு தமிழர்கள்.

மணிப்பூரின் மோரே நகரைச் சேர்ந்தவர்கள் பி.மோகன், எம்.ஐயனார். இவர்கள் இருவரும் ஜூலை 5-ஆம் தேதி காலை மியான்மாரின் தமு பகுதியில் உள்ள அவர்களின் தமிழ் நண்பரைச் சந்திக்கச் சென்றுள்ளனர். பிறகு, தமு நகரின் வார்டு எண். 10 (தமு சா ப்வா என்றும் அழைக்கப்படுகிறது, பள்ளிக்கு அருகில்) அன்று மதியம் 1 மணியளவில் அவர்கள் இருவரின் உடல்களும் துப்பாக்கிக் குண்டடிபட்ட காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவர்களை மோரே வியாபாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். எல்லையின் இருபுறமும் பேஸ்புக்கில் பரப்பப்பட்ட புகைப்படங்களிலிருந்து, இருவரும் மிக அருகிலிருந்து தலையில் சுடப்பட்டதாகத் தெரிகிறது. ஒருவருக்கு நெற்றியில் துப்பாக்கிக் குண்டடிபட்ட காயம் இருந்தது; மற்றவருக்குத் தலையின் பக்கவாட்டில் உள்ளது. மோகனுக்கு இந்த ஆண்டு ஜூன் 9-ஆம் தேதி தான் திருமணம் நடந்தது. ஐயனாருக்கு திருமணமாகி ஒரு வயது ஆண் குழந்தை உள்ளது.

“இருவரையும் ஏன், யார் கொன்றார்கள் என்பது பற்றிய விவரங்கள் எங்களிடம் இல்லை. ஆனால் உடல்களை மீட்க உயர்மட்டத்தில் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது” என்று மோரே காவல்துறையின் பொறுப்பாளர் ஆனந்த் கூறியுள்ளார்.

இந்த இரு தமிழர்களும் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து 110 கிமீ தொலைவில் உள்ள மோரே மக்கள் நேற்று முன் தினமும், நேற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மோரே நகரம் மெய்டீஸ், குக்கிகள், தமிழர்கள், பஞ்சாபிகள் மற்றும் பிறர் கலந்து வாழும் இடமாகும். இங்கு கணிசமான அளவில் தமிழ் மக்கள் வசித்து வருகிறார்கள்.

FMR
FMR

தமிழ்ச் சங்கச் செயலாளர் கேபிஎம் மணியம், இருவரையும் ராணுவ ஆட்சிக்கு ஆதரவான போராளிகளான பியூ ஷா ஹ்டீ சுட்டுக் கொன்றதாகக் குற்றம் சாட்டியுள்ளார். தமுகவுக்கு காலையில் புறப்பட்ட இருவரும் இரண்டு மணி நேரம் மொபைல் இன்டர்நெட் வரம்பிற்கு வெளியே இருந்ததாகவும், மோரேயில் ஆட்டோ டிரைவர்களான அவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

இன்னொரு மோரோ தமிழ் சங்கத்தினர், ‘எதிர்பாராத விதமாக இருவரும் மியான்மார் எல்லைக்குள் நுழைந்ததால், அவர்களை உளவாளிகள் என கருதி அந்நாட்டு ராணுவத்தினர் சுட்டுக் கொன்று இருக்கலாம்’ எனத் தெரிவித்துள்ளனர்.

இந்தியா-மியான்மார் எல்லையில் ஒரு இயக்கம் உள்ளது (FMR). இது எல்லையில் வசிக்கும் மக்கள் விசா கட்டுப்பாடுகள் இல்லாமல் எல்லையின் இருபுறமும் 16 கி.மீ பயணிக்க அனுமதிக்கிறது. ஆனால் 2020-ஆம் ஆண்டு கொரோனா பரவல் தொடங்கியதிலிருந்து, மியான்மாரில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, மக்கள் மற்றும் பொருட்களின் எல்லை தாண்டிய செயல்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது.

இதனையடுத்து மோரே நகரத்தின் சமூகத் தலைவர்கள் மாவட்ட அதிகாரிகள் மூலம் முதலமைச்சரிடம் ‘உடல்களை உடனடியாக மீட்டெடுக்க வேண்டும், உயிரிழந்த குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்’என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மோரேவில் வசிக்கும் அனைத்து இனக்குழுக்களின் தலைவர்களும் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில் இவ்விவகாரம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

``இந்திய – மியான்மார் எல்லையில் உள்ள மணிப்பூரின் மோரே எனும் பகுதியில் வசித்து வந்த தமிழ்நாட்டின் ஆட்டோ ஓட்டுநரான பி.மோகன், வியாபாரியான எம்.ஐயனார் ஆகியோர் தங்கள் நண்பரைப் பார்ப்பதற்காக தமு நகரை அடைந்தபோது, என்.எம்.ஆர். என்ற பகுதியில் பர்மிய தீவிரவாத அமைப்பினரால் வழிமறிக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டனர். இதனைக் கண்டித்து அந்தப் பகுதியில் கடைகளும், வணிக நிறுவனங்களும், உணவகங்களும் மூடப்பட்டன. எந்தவித வாகனங்களும் அங்கு அனுமதிக்கப்படவில்லை. சட்டம் ஒழுங்கு குலைந்து கிடக்கிறது. படுகொலை செய்யப்பட்டவர்களின் சடலங்களை காவல்துறை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறது. மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் இந்தப் படுகொலையை வன்மையாகக் கண்டிப்பதுடன், கொலைகாரர்களைக் கூண்டில் ஏற்றி தண்டிக்க வேண்டும் என்றும், படுகொலைக்கு ஆளான இரண்டு தமிழர்களின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நட்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று வைகோ தன் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

வைகோ
வைகோ

“இந்தியா - மியான்மார் எல்லையில் அமைந்துள்ள மணிப்பூர் மாநிலம் தெங்னௌபல் மாவட்டத்தில் வசித்து வந்த மோகன், ஐயனார் என்ற இரண்டு தமிழ் இளைஞர்கள் தங்கள் நண்பர்களைக் காண்பதற்காக, மியான்மார் நாட்டு எல்லையிலுள்ள தமு என்ற இடத்திற்குச் சென்றபோது, அந்நாட்டு இராணுவத்தின் ஆதரவுப்பெற்ற ஆயுதக் குழுவினால் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது” என்று அறிக்கை வெளியிட்டுள்ள சீமான், “உலகில் எந்த நாட்டு மக்களுக்குத் துயர் நிகழ்ந்தாலும் தமிழர் மண் அழுதிருக்கிறது; ஆயினும் தமிழர்கள் எந்த நாட்டிற்குச் சென்றாலும் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் இன்றளவும் தொடர்கின்றன என்பது மிகுந்த வேதனைக்குரியது” என்று தன் ஆதங்கத்தை அதில் பதிவு செய்துள்ளார்.

சீமான்
சீமான்

மேலும், ``அநியாயமாகக் கொல்லப்பட்ட இரண்டு தமிழர்களின் மரணத்திற்குக் காரணமானவர்கள் யார் என்பதைக் கண்டறிவதில் மியான்மார் அரசு தொடர் அலட்சியம் செய்வது, அந்நாட்டு அரசே கொலைக் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயல்கிறதோ என்ற ஐயத்தையும், தமிழர்கள் என்பதனாலேயே சுட்டுக்கொல்லப்பட்டனரா என்ற ஐயத்தையும் ஒருசேர எழுப்புகிறது. மியான்மார் நாட்டுத் தூதரை அழைத்துக் கண்டிக்காமலும், அந்நாட்டு அரசிடம் உரிய விளக்கம் கேட்காமலும் இந்திய ஒன்றிய அரசு அமைதி காப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. ஒருவேளை பாகிஸ்தான் நாட்டில் வடமாநில இளைஞர்கள் கொல்லப்பட்டிருந்தால் மோடி அரசு இப்படி வாய்மூடி அமைதி காத்திருக்குமா? என்ற கேள்வி ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் எழுகிறது” என்கிற கேள்வியினை முன் வைக்கும் அந்த அறிக்கை,

“இந்திய ஒன்றியத்தை ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு இனியும் மெத்தனப்போக்கோடு அலட்சியமாக இருக்காமல், தமிழர்களும் இந்த நாட்டின் அரசியலமைப்பை ஏற்று வாழும் குடிமக்கள்தான் என்பதைக் கவனத்தில் கொண்டு, உடனடியாக மியான்மார் நாட்டில் அநியாயமாகச் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு தமிழர்களின் படுகொலைக்கு உரிய நீதியைப் பெற்றுத்தர வெளியுறவுத்துறையின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்’ என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மோரே கிராமத்தில் தமிழர்கள் வாழத் தொடங்கியதன் வரலாற்றைப் புரட்டிப் பார்ப்போம்...

யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற கணியன் பூங்குன்றனாரின் வார்த்தைக்கு ஏற்ப உலகம் எங்கும் வாழும் இனம் தமிழினம். கடல் கடந்து வாணிபம் செய்த தமிழர்கள், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து தொடங்கிப் பல நாடுகளில் கால் பதித்தார்கள் என்பது வரலாறு. தமிழர்கள் கால் பதித்து, வேர் விட்ட நாடுகள் பல இருந்தாலும், அதில் முக்கியமானது தற்போது மியான்மார் என்றிழைக்கப்படும் பர்மா. பர்மாவுக்கு 1760-களில் பிழைப்புத் தேடி சென்றார்கள் தமிழர்கள். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பிழைப்புக்காகப் பர்மா சென்றவர்களில் ராமநாதபுரம், மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி, சேலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம். குறிப்பாக, காரைக்குடியைச் சேர்ந்த வியாபாரிகள் பலர் பாத்திரங்கள், ஜவுளிகளைப் பர்மாவில் விற்பனை செய்து, தேக்கு மரங்களை இந்தியாவுக்குக் கொண்டு வந்தனர். அவ்வாறு கொண்டு வரப்பட்ட பர்மா தேக்குகளால் கட்டப்பட்டு, இன்றும் காரைக்குடி மற்றும் சுற்றுவட்டாரங்களில் கம்பீரமாய் காட்சியளிக்கின்றன பல வீடுகள்.

மியான்மர்
மியான்மர்

பிழைக்க இடம் தேடிச் சென்ற பர்மாவில் விவசாயம் மற்றும் வியாபாரத்தில் கொடி கட்டிப் பறந்தார்கள் தமிழர்கள். அத்துடன், பர்மாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்திலும் தங்களை இணைந்து கொண்டனர் பர்மா வாழ் தமிழர்கள். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இல்லாத சிக்கல்கள், 1948 ஜனவரி 4-ஆம் தேதி பர்மா விடுதலை பெற்ற பிறகு உருவானது தமிழர்களுக்கு. இனவெறி தாக்குதல் நடத்தி, தமிழர்களின் சொத்துகளை சூரையாடினார்கள் பர்மிய இளைஞர்கள். அதன் உச்சமாக, ராணுவப் புரட்சியால் 1962-ல் ஆட்சிக்கு வந்த நிவின், சிறுபான்மையின மக்களின் சொத்துகளை நாட்டுடைமையாக்கினார்.

உழைத்து உருவாக்கிய கடைகள், வணிக நிறுவனங்களை, ராணுவ ஆட்சிக்குத் தாரைவார்த்துவிட்டுத் தவித்தார்கள் தமிழர்கள். அச்சுறுத்தல், கெடுபிடிகள் சுழன்றாடிய சூழலில், மூதாதையர்களின் தேசமாகத் தமிழ்நாட்டிற்கே திரும்ப நினைத்தார்கள் லட்சக்கணக்கான தமிழர்கள். அவர்கள், பர்மாவில் இருந்து பாதுகாப்பாக நாடு திரும்ப இலவசமாகக் கப்பலை அனுப்பிவைத்தார் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு. இந்தியா திரும்பிய பர்மிய தமிழர்களுக்கு, மறுவாழ்வு முகாம்களை அமைத்துக் கொடுத்தாலும், அது பலன் கொடுக்கவில்லை பலருக்கு. பர்மாவில் பல ஆண்டுகள் வாழ்ந்து பழகிய தமிழர்களுக்கு ஒப்புக் கொள்ளவில்லை தமிழ்நாட்டின் உணவு முறைகளும், வாழ்க்கை முறையும். வாழ்வாதாரத்திற்கும் வழியில்லாத சூழலில், மீண்டும் பர்மாவிற்கே செல்ல முடிவெடுத்தார்கள் பல நூறு குடும்பத்தினர். அதில் 12 குடும்பத்தினர் வந்த இடம், மணிப்பூர் மாநிலத்தின் எல்லை கிராமமான மோரே. இரவோடு இரவாகப் பர்மா எல்லைக்குள் நுழைந்த தமிழர்கள் அனைவரையும் இழுத்துச் சென்று கைது செய்தது பர்மா ராணுவம்.

இருவர் கொலை சம்பந்தமாக போராட்டம் நடந்த இடம்.
இருவர் கொலை சம்பந்தமாக போராட்டம் நடந்த இடம்.

ஒரு மாத சித்திரவதைக்குப் பிறகு, இந்தியாவிற்கே நாடு கடத்தப்பட்டார்கள் அந்த 12 குடும்பத்தினரும். அவ்வாறு திருப்பி அனுப்பப்பட்ட இடமும் மணிப்பூர் எல்லையான மோரே தான். பர்மாவின் உணவு முறைகள், வாழ்க்கை முறைகளோடு ஒத்துப் போன மோரேவிலேயே வசிக்கத் தொடங்கினார்கள் 12 தமிழ்க் குடும்பத்தினர். பர்மா எல்லைக்கு அருகே நிம்மதியாக அவர்கள் வாழ்ந்ததை அறிந்து அங்கு படையெடுத்தார்கள், தமிழ்நாட்டில் வாழ்ந்த மற்ற பர்மிய தமிழர்கள். ஒரு சில தமிழ் குடும்பங்கள் பர்மாவுக்குள் ரகசியமாகச் சென்று வாழத் தொடங்கி, தாங்கள் வந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டார்கள். மற்றவர்கள் வழக்கம்போல கடும் உழைப்பு மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு, மோரேவிலும் தங்களை நிலைநாட்டிக் கொண்டார்கள். சுமார் ஏழரை சதுர கிலோ மீட்டர் அளவு கொண்ட மோரே நகரின் தற்போதைய மக்கள் தொகை 40 ஆயிரம். மோரேவின் பூர்வ குடிகளான குக்கிகளுடன், நேபாளிகள், பஞ்சாபிகள் என பலர் வசித்தாலும், அதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தமிழர்களே. ஆலமரம் தொடங்கி, அண்மையில் கட்டி எழுப்பப்பட்ட அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் வரை, தமிழர்களின் வழிபாடு மோரேவிலும் தொடர்கிறது. தைத்திங்கள் நாளில் பொங்கல் விழாவை சிறப்பாகக் கொண்டாடும் மோரே தமிழர்கள், பர்மாவில் வசிக்கும் தங்களது சொந்தங்களையும் அவ்வப்போது சந்திப்பது வழக்கமான ஒன்று.