Published:Updated:

`திஷா' சட்டத்தைச் செயல்படுத்த இரண்டு சிறப்புப் பெண் அதிகாரிகள் நியமனம்! - ஆந்திர அரசு உத்தரவு

ஐ.ஏ.எஸ் அதிகாரியான கிருத்திகா சுக்லா மற்றும் காவல்துறை உயர் அதிகாரியான தீபிகா இருவரையும் இதற்காக நியமித்துள்ளது.

இரண்டு பெண் சிறப்பு அதிகாரிகள்
இரண்டு பெண் சிறப்பு அதிகாரிகள்

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் விரைந்து தண்டனை வாங்கித்தரும்`திஷா' சட்டடத்தைச் செயல்படுத்த இரண்டு சிறப்புப் பெண் அதிகாரிகளை ஆந்திர அரசு நியமித்துள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே கடந்த நவம்பர் மாதம் 27-ம் தேதி கால்நடை பெண் மருத்துவரை நான்கு பேர் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து, எரித்துக் கொடூரமாக கொலை செய்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கால்நடை மருத்துவருக்காக நீதி கோரி பெண்கள் உட்பட பலரும் கொதித்தெழுந்தனர். அவருக்குச் சமூக வலைதளங்களில் `திஷா' என்று பெயர் உருவாக்கி, #justicefordisha என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்தனர்.

கொலை நடந்த இடம்ஃ
கொலை நடந்த இடம்ஃ

இந்த நிலையில் திஷா கொலை வழக்கில் தொடர்புடைய முகமது ஆரிஃப், சிவா, நவீன், சென்ன கேசவலு ஆகிய நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அந்த நான்கு பேரிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் திட்டமிட்டு திஷாவைக் கடத்திக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த நான்கு பேரையும், சம்பவம் நடந்த இடத்துக்கு அழைத்துச் சென்று, நடித்துக் காட்டும்படி போலீஸார் கூறினர். அப்போது, அந்த நால்வரில் ஆரிஃப் என்பவர் போலீஸாரைத் தாக்கிவிட்டு தப்ப முயன்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, போலீஸார் பாதுகாப்பு நடவடிக்கைக் கருதி அந்த நான்கு பேர் மீதும் என்கவுன்டர் நடத்தினர். அந்த என்கவுன்டரில் அந்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

`ஒரே ஸ்டைல்; 9 சம்பவங்கள்; சீரியல் கில்லர்ஸ்'- திஷா கொலையாளிகள் குறித்து தெலங்கானா போலீஸ் அதிர்ச்சி

இந்தச் சம்பவத்தைப் பலரும் வரவேற்ற நிலையில், ஒருபுறம் `சட்டப்படி இந்த நால்வருக்கும் தண்டனை வாங்கிக் கொடுத்திருக்க வேண்டும்' என்று குரல்கள் ஒலித்தன. இந்தச் சம்பவத்தையடுத்து, ஆந்திரா சட்டசபையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்கும் திஷா சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்தச் சட்டம் குற்றம் செய்தவர்களை 21 நாள்களில் தண்டிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. குறிப்பாக, மரண தண்டனை உட்பட கடுமையான தண்டனைகளைக் கொடுக்கும் பிரிவுகளை உள்ளடக்கியதாக அந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கிருத்திகா சுக்லா
கிருத்திகா சுக்லா
NDTV
தீபிகா
தீபிகா
NDTV

இந்தச் சட்டத்தை விரைந்து செயல்படுத்த, ஆந்திர மாநில அரசு அதற்கான சிறப்பு அதிகாரிகளை நியமித்துள்ளது. ஐ.ஏ.எஸ் அதிகாரியான கிருத்திகா சுக்லா மற்றும் காவல் துறை உயர் அதிகாரியான தீபிகா இருவரையும் இதற்காக நியமித்துள்ளது. இதில் ஐ.ஏ.எஸ் அதிகாரியான கிருத்திகா சுக்லா, பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை இயக்குநராகவும், கூடுதல் காவல் ஆய்வாளராக தீபிகாவும் தற்போது பணியாற்றி வருகின்றனர். இந்த இருவரும் தற்போது `திஷா' சட்டத்தைச் செயல்படுத்தும் சிறப்பு அதிகாரிகளாக கூடுதல் பொறுப்பைக் கவனிப்பார்கள் என்று ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.