Published:Updated:

`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. ?, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை!’ - கொரோனா அப்டேட்ஸ் #NowAtVikatan

கொரோனா
கொரோனா

20.3.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

20 Mar 2020 11 AM

தமிழக அரசு ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இந்தநிலையில், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மற்றும் உயரதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இதில், தமிழகம் முழுவதும் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள் காணொலிக் காட்சி மூலம் கலந்துகொண்டனர். அவர்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டது. அதேபோல், சட்டப்பேரவைக்கு வந்த உறுப்பினர்களுக்கு இன்ஃப்ராரெட் தெர்மா மீட்டர் மூலம் உடல்வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர். மேலும், சானிடைசர் மூலம் கைகளைச் சுத்தம் செய்தபிறகு உள்ளே செல்லுமாறும் எம்.எல்.ஏ-க்கள் அறிவுறுத்தப்பட்டனர். சட்டப்பேரவைக்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. சோதனைக்குப் பின்னர் அங்கிருந்த செவிலியரிடம் தனது உடல்வெப்பநிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார்.

20 Mar 2020 11 AM

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 206 ஆக உயர்வு!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 206 ஆக உயர்ந்திருக்கிறது.

கொரோனா
கொரோனா

இதுதொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் 14,376 மாதிரிகள் சோதிக்கப்பட்டதில் 206 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் புதிதாக 4 பேருக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

`கொரோனா விழிப்புணர்வு' - நம் உறவுகளுக்குப் பகிர ஓர் எளிய வழிகாட்டி! #FightAgainstCoronavirus
20 Mar 2020 11 AM

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்கள் செல்லும் வழிகள் அடைக்கப்பட்டு, பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த சில பக்தர்களும் கோயில் வாசலில் நின்று வழிபட்டுச் சென்றனர்.

படங்கள் - என்.ஜி.மணிகண்டன்

20 Mar 2020 11 AM

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 5ஆக உயர்வு!

கொரோனா சோதனை
கொரோனா சோதனை

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்ந்திருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சிகிச்சைபெற்று வந்த இத்தாலியைச் சேர்ந்த 69 வயது சுற்றுலாப் பயணி உயிரிழந்தார். ராஜஸ்தான் மாநிலத்தில் இதுவே முதல் உயிரிழப்பாகும். இதன்மூலம் கொரோனாவால் இந்தியாவைச் சேர்ந்த 4 பேரும் வெளிநாட்டுப் பயணி ஒருவரும் இந்தியாவில் உயிரிழந்தனர்.

20 Mar 2020 12 PM

முதல்வர் பதவியை ராஜினாமா செய்த கமல்நாத்!

மத்தியப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. இந்த வெற்றியில் காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்யா சிந்தியாவின் பங்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்பட்டது. காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, சிந்தியா கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகினார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்களும் தொடர்ந்து ராஜினாமா செய்தனர். இதனால், ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் நிலை ஏற்பட்டது. ஆனால், சட்டசபை வரும் 26-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

கமல்நாத்
கமல்நாத்
ANI

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரி பா.ஜ.க-வின் சிவராஜ்சிங் சௌகான் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். இதையடுத்து, மார்ச் 20-ம் தேதி மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், முதல்வர் கமல்நாத் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

20 Mar 2020 5 PM

கொரோனா அப்டேட்ஸ்!

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மக்கள் வீடுகளில் தங்களை தனிமைபடுத்த வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக நேற்று இரவு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பேசுகையில் வரும் 22 -ம் தேதி மக்களை தங்களை வீடுகளில் தனிமைபடுத்திக்கொள்ள வேண்டும் என்றார். இதைப் பலரும் வரவேற்றுள்ளனர். எனினும் தொடர்ச்சியாக மக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. பிரதமரின் வேண்டுகோளை ஏற்று சென்னை மெட்ரோ நிறுவனம் வரும் 22 -ம் தேதி தனது சேவையை நிறுத்த முடிவு செய்துள்ளது.

20 Mar 2020 7 PM

தடை...தடை...தடை...!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக பிரதமர் மோடி அழைப்பு விடுத்த சுய ஊரடங்கு காரணமாக, `நாளை நள்ளிரவு 12 மணி முதல் ஞாயிறு இரவு 10 மணி வரை பயணிகள் ரயில் இயங்காது என்றும் மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஞாயிறன்று அதிகாலை 4 மணி முதல் நிறுத்தப்படும் ’ என்றும் பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

அதே போன்று நாளை முதல் மார்ச் 31 -ம் தேதி வரையில் தமிழகத்துக்கு பிற மாநில வாகனங்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் அத்தியாவசிய பொருள்களான பால், கேஸ் லாரிகள் முதலியவனை வந்து செல்ல அனுமதி உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது!

அடுத்த கட்டுரைக்கு