Published:Updated:

அளவுக்கு அதிகமான பயணிகள்; தடுமாறிய ஓட்டுநர்; பற்றி எரிந்த பேருந்து! - உ.பியை அதிரவைத்த இரவு விபத்து

உத்தரப்பிரதேச கன்னோஜ் மாவட்டத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் சிக்கி 20-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

பேருந்து விபத்து
பேருந்து விபத்து

உத்தரப்பிரதேச மாநிலம் ஃபரூக்காபாத்திலிருந்து ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூருக்கு 46 பயணிகளை ஏற்றியபடி ஒரு சொகுசு பேருந்து நேற்று இரவு புறப்பட்டுள்ளது. பேருந்து இரவு 9:30 மணிக்கு கன்னோஜ் மாவட்டத்தின் சிலோய் கிராமம் வழியாகப் பயணித்துக்கொண்டிருக்கும்போது, எதிர்பாராதவிதமாக எதிரே வந்த லாரி மீது மோதியுள்ளது. மோதிய அடுத்த நிமிடத்தில் பேருந்தும் லாரியும் தீப்பிடித்து எரிந்துள்ளன.

பேருந்து விபத்து
பேருந்து விபத்து

இதனால் பேருந்திலிருந்த பயணிகள் சிலர் நெருப்பில் சிக்கியுள்ளனர். மேலும் சிலர் பேருந்திலிருந்து குதித்துத் தப்பியுள்ளனர். தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக 4 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து 40 நிமிடங்கள் போராடி இரண்டு வாகனங்களில் பற்றியெரிந்த தீயை அணைத்தனர்.

பேருந்தில் பயணம் செய்தவர்களில் 21 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் 20 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அம்மாவட்ட அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஆனால், உயிரிழந்தவர்களின் முழு விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

காயமடைந்தவர்கள்
காயமடைந்தவர்கள்

விபத்து பற்றிப் பேசியுள்ள கான்பூர் பகுதி இன்ஸ்பெக்டர் ஜெனரல் மோஹித் அகர்வால், ``விபத்திலிருந்து மீட்கப்பட்ட 21 பேரும் அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டனர். இரண்டு வாகனங்களில் எரிந்துகொண்டிருந்த தீயும் அணைக்கப்பட்டுவிட்டது. பேருந்தினுள் சிக்கியுள்ளவர்கள் உயிருடன் இருப்பது கடினம்” எனக் கூறியுள்ளார்.

``பேருந்தினுள் சில பயணிகள் சிக்கியுள்ளனர். கன்னோஜ் மற்றும் மனிப்பூர் ஆகிய இடங்களிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. ஓட்டுநர் தன் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறியதாலேயே விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது” எனக் கன்னோஜ் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கும் அரசுப் பேருந்து விபத்துகள்... என்னவாகும் போக்குவரத்துத் துறை?

சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறும்போது, ``தீ பிடித்தவுடன் 10 முதல் 12 பேர் மட்டுமே குதித்து வெளியேறினர். மீதமுள்ள அனைவரும் உள்ளேயே சிக்கிக்கொண்டனர். அளவுக்கு அதிகமான பயணிகள் பேருந்தில் இருந்தனர். மேலும், பேருந்து முற்றிலும் மூடிய அமைப்பிலிருந்ததால் பலரால் வெளியேற முடியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

பேருந்து விபத்தில் சிக்கிக் காயமடைந்தவர்களுக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளையும் இலவசமாகவும் விரைவாகவும் வழங்க உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

பிரதமர் மோடி, ``உத்தரப்பிரதேசத்தின் கன்னோஜ் மாவட்டத்தில் ஏற்பட்ட கடுமையான விபத்து குறித்து அறிந்தேன். மிகவும் வருத்தமாக உள்ளது. விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர் அவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.