Election bannerElection banner
Published:Updated:

மும்பை: தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா! - தயார்நிலையில் 200 ரயில் பெட்டிகள்

தயார்நிலையில் ரயில் பெட்டி
தயார்நிலையில் ரயில் பெட்டி

மும்பையில் கொரோனா நோயாளிகளைத் தனிமைப்படுத்த 200 ரயில் பெட்டிகள் தயார்நிலையில் இருப்பதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

மகாராஷ்டிராவில் கொரோனா நோயாளிகளின் தினத் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து 50,000-க்கும் அதிகமாகவே இருந்துவருகிறது. இதைக் கட்டுப்படுத்த அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் எந்தவிதப் பயனும் அளிக்கவில்லை. அதோடு கொரோனா தடுப்பூசி போடுவதும் இரண்டு நாள்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. போதிய அளவு தடுப்பூசி இல்லாத காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. மற்றொருபுறம் கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாமல் இருந்துவருகிறது. இதனால் மாநில அரசு கடுமையான நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.

இந்தநிலையில், மும்பையில் கொரோனா நோயாளிகளைத் தனிமைப்படுத்த ரயில்வே நிர்வாகம் 200 ரயில் பெட்டிகளை தயார்நிலையில் வைத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. மேற்கு ரயில்வே 152 பெட்டிகளையும், மத்திய ரயில்வே 48 பெட்டிகளையும் இதற்காகத் தயார்நிலையில் வைத்திருக்கின்றன. இது தொடர்பாக மேற்கு ரயில்வே பொது மேலாளர் அலோக் கன்சால் அளித்த பேட்டியில், ``152 பெட்டிகள் அனைத்து உபகரணங்களும் பொருத்தப்பட்ட நிலையில் தயாராக இருக்கின்றன. மாநில அரசு கேட்டுக்கொண்டால் உடனே 24 மணி நேரத்தில் பயன்பாட்டுக்குக் கொண்டு வர முடியும்” என்று தெரிவித்தார்.

மோகன் பகவத்
மோகன் பகவத்

மத்திய ரயில்வே தலைமை மக்கள் செய்தித் தொடர்பு அதிகாரி சிவாஜி சுதார் இது குறித்துக் கூறுகையில், ``ஜனவரி மாதமே இது தொடர்பாக மகாராஷ்டிரா அரசிடம் தெரிவித்தோம். அவர்களும் குறிப்பிட்ட அளவு பெட்டிகளைத் தயார்நிலையில் வைத்திருக்கும்படி கேட்டுக்கொண்டனர். எனவே, ரயில் பெட்டியில் நடுவிலிருக்கும் படுக்கையை அப்புறப்படுத்திவிட்டு ஆக்ஸிஜன் சிலிண்டர் உட்பட அனைத்துவிதமான மருத்துவ உபகரணங்களும் பொருத்தப்பட்டு தயார்நிலையில் இருக்கின்றன. இரண்டு கேபின்களுக்கு இடையே பிளாஸ்டிக் விரிப்பால் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பெட்டியில் நான்கு கழிவறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதில் ஒன்று குளியல் அறையாகவும் மாற்றப்பட்டிருக்கிறது” என்றார்.

இந்த ரயில் பெட்டிகள் அவசர காலத்துக்காகத் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் அருகிலுள்ள நகரங்களுக்கும் கொண்டு செல்ல முடியும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். மாநில அரசு உத்தரவிட்டால் 24 மணி நேரத்தில் பெட்டிகளை வழங்கிவிடுவோம் என்றும் தெரிவித்தனர். டெல்லியிலும் இதே போன்று நூற்றுக்கணக்கான ரயில் பெட்டிகள் கொரோனா நோயாளிகளுக்காகத் தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் அவை கடைசிவரை பயன்படுத்தப்படவே இல்லை.

இதற்கிடையே மும்பையிலுள்ள வைர மார்க்கெட்டில் தொழிலாளர்கள் தங்கி வேலை செய்ய மார்க்கெட் உரிமையாளர்கள் தேவையான வசதிகளைச் செய்திருக்கின்றனர். அதோடு யாருக்காவது கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அவர்களைத் தனிமைப்படுத்தவும் தேவையான வசதி செய்யப்பட்டுள்ளது. பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸில் செயல்பட்டுவரும் பாரத் டைமண்ட் மார்க்கெட்டில் 2,000-க்கும் அதிகமான ஊழியர்கள் வேலை செய்கின்றனர். தற்போது அவர்களில் 20 சதவிகித ஊழியர்கள் மட்டுமே பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளது,

மும்பை
மும்பை

ஆர்.எஸ்.எஸ் தலைவருக்கு கொரோனா

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு நாக்பூரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருக்கிறார். கடந்த மாதம் 7-ம் தேதி மோகன் பகவத் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இரண்டாவது தடுப்பூசி இன்னும் அவருக்குப் போடப்படவில்லை. அவருக்கு தற்போது கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ மரணம்

இதற்கிடையே கொரோனாவுக்கு மகாராஷ்டிராவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் உயிரிழந்துள்ளார். மும்பை மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்றுவந்த ராவ்சாஹேப் அந்தாபுர்கர் வெள்ளிக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி இறந்துபோனார். நாண்டெட் மாவட்டத்திலிருந்து எம்.எல்.ஏ-வாகத் தேர்வு செய்யப்பட்ட ராவ்சாஹேப் கடந்த ஒன்றாம் தேதியிலிருந்து செயற்கைச் சுவாசம் பெற்றுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு