Published:Updated:

14 நாள்களில் 22 தீவிரவாதிகள்; 9 ஆபரேஷன்கள்! - காஷ்மீரில் பிடியை இறுக்கும் ராணுவம்

இந்திய ராணுவம்
இந்திய ராணுவம் ( AP )

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 36 நடவடிக்கைகளில் 88 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மேலும், தீவிரவாதிகளுக்கு உதவியதாக 40 பேர் மற்றும் 245 தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒன்பது தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், புல்வாமா தாக்குதல் போன்ற பெரிய அளவிலான IED குண்டு வெடிப்பு தகற்பு, ஜம்மு-காஷ்மீரை சுற்றிலும் தீவிரவாதிகள் ஊடுருவும் அச்சுறுத்தல், பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல், உள்ளூர் இளைஞர்களைத் தீவிரவாதிகளாக மாற்ற முயற்சி செய்யும் கும்பல் என நிழல் உலக போர்குணங்களைக் கொண்டிருக்கும் காஷ்மீரில் இழப்புகளைக் கடந்து ஒவ்வொரு முறையும் தீவிரவாதிகளை எதிர்த்து வெற்றிக்கொடி கட்டுகிறது இந்திய ராணுவம்.

கடந்த மே 2-ம் தேதி தீவிரவாதிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு பிணை கைதிகள் மீட்கப்பட்டபோது 2 ராணுவ அதிகாரிகள் 2 வீரர்கள், ஒரு காவல்துறை அதிகாரி உட்பட 5 பேர் வீரமரணம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து தீவிரவாத நடவடிக்கைகளை கடுமையாகக் கண்காணித்து வந்த ராணுவ அதிகாரிகள் கடந்த இரண்டு வாரங்களில் 22 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றுள்ளனர். இவர்களுள் 6 பேர் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த தீவிரவாத இயக்கங்களின் தளபதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள் அன்று (ஜூன் 8) அதிகாலை 3 மணி அளவில் காலை ராணுவ அதிகாரிகள் தெற்கு காஷ்மீரின் சோபியன் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக வந்த தகவலை அடுத்து அங்கு சென்றனர். திடீரென தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வீரர்கள் எதிர் தாக்குதல் நடத்தினர் 4 மணிநேரம் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையின் முடிவில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது 24 மணிநேரத்துக்குள் சோபியன் பகுதியில் நடைபெற்ற இரண்டாவது தாக்குதல் ஆகும்.

இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் காவல்துறை இயக்குநர் தில்பக் சிங் சோபியனில் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் ஹிஸ்புல் முஜாஹிதீன் (HM) தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், ``கடந்த இரண்டு வாரங்களில் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை துரித்தப்படுத்தியுள்ளனர். கடந்த இரண்டு நாள்களில் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த 9 பேர் சோபியனில் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களுள் முக்கிய தீவிரவாதத் தளபதிகளும் அடங்குவர். அவர்கள் மேல் ஏற்கெனவே பொதுமக்கள் மற்றும் காவல்துறையினரைத் தாக்கியதாக வழக்குகள் பதிவாகியுள்ளது" என்றார்.

மேலும், ``கடந்த இரண்டு வாரங்களில் தீவிரவாதிகளுக்கு எதிராக 9 நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 6 முக்கிய தீவிரவாதிகள் உட்பட 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவந்திப்போரா பகுதியில் தீவிர கண்காணிப்பில் இருந்த காவல்துறையினர் இளைஞர்களை மூளைச்சலவை செய்து தீவிரவாத இயக்கங்களில் சேர்க்கும் கும்பலை கைதுசெய்தனர். மேலும், அவர்கள் பிடியில் இருந்த மூன்று இளைஞர்களை மீட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், நவ்ஷேரா மற்றும் கலகோட் பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவும் முயற்சி தடுக்கப்பட்டத்தைச் சுட்டிக்காட்டி பாகிஸ்தானில் பயிற்சிபெற்ற தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊருவ முயற்சி செய்ததாகவும் குறிப்பிட்டார்.

தில்பக் சிங்
தில்பக் சிங்
ANI

தொடர்ந்து பேசிய அவர், மே 28-ம் தேதி ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் நடத்தவிருந்த IED குண்டுவெடிப்பு தவிர்க்கப்பட்டதாகக் கூறினார். ``150 கிலோ வெடிமருந்துகள் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடக்கப்பட்டிருந்தால் சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த புல்வாமா தாக்குதல் போன்ற மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கக் கூடும். ஹிஸ்புல் முஜாஹிதின் இயக்கத்தோடு இணைந்து இந்தத் தாக்குதலுக்குத் திட்டமிட்ட அப்துல் ரஹ்மான் என்ற பவுஜி பாய் என்பவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.

இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து 36 நடவடிக்கைகளில் 88 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், தீவிரவாதிகளுக்கு உதவியதாக 40 பேர் மற்றும் 245 தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களுள் பெரும்பாலானோர் மீது ஏற்கெனவே குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன.

பயங்கரவாதிகளுக்கு `கொரோனா'... பாகிஸ்தானின் சதித் திட்டம்! -ஜம்மு-காஷ்மீர் டிஜிபி அதிர்ச்சி

நமது எல்லைப் பாதுகாப்புப் படை எப்போதும் விழிப்புணர்வோடு இருந்து வருகிறது. பாகிஸ்தானில் இருந்து பெறப்படும் கட்டளைக்கேற்ப ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மேலும் IED வெடிகுண்டுகளைத் தயாரித்து வருகின்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்தும் வண்ணம் நம் வீரர்கள் எப்போதும் விழிப்போடு இருந்து வருகின்றனர். கடந்த மார்ச் 31-ம் தேதி முதன் முறையாக கேரன் பகுதி வழியாக ஊடுருவிய தீவிரவாதிகளைத் தொடர்ந்து பல முறை காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.

காஷ்மீர்
காஷ்மீர்
AP

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளைப் பொறுத்தவரை 2018 மற்றும் 2019 ஆண்டுகள் மிகவும் வெற்றிகரமான ஆண்டுகளாக கருதப்படுகின்றன. கடந்த 2 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அடிப்படையில் தீவிரவாதத் தாக்குதல்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. 370 வது பிரிவை ரத்து செய்ததும் தீவிரவாத நடவடிக்கைகளின் அளவு குறைய முக்கிய காரணமாக உள்ளதால், மக்களும் அதை ஏற்றுக்கொண்டு பாராட்டியுள்ளனர். இந்த ஆண்டைப் பொறுத்தவரை தீவிரவாத இயக்கங்களில் இணைவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவு. எனவே, பல உள்ளூர் இளைஞர்களைத் தீவிரவாதிகளாக மாற்ற அவர்கள் முயற்சி மேற்கொள்கின்றனர். இதுவரை தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த பலர்மீது ஏற்கெனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டன.

தலிபான் இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ளனரா என்பது குறித்து எந்த அறிக்கையும் கிடைக்கப்பெறவில்லை. தற்போதைய நிலவரப்படி லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் பெயரில் தீவிரவாதிகள் ஜம்மு மற்றும் காஷ்மீருக்குள் நுழைய முயல்கின்றனர். மேலும், தீவிரவாத மறுமலர்ச்சி முன்னணி என்ற பெயரில் இந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்று சேர்ந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

செனாப் பள்ளத்தாக்கு விரைவில் வன்முறைகளிலிருந்து மீட்கப்பட்டு பயங்கரவாதம் இல்லாத பகுதியாக அறிவிக்கப்படும். ரம்பன் பகுதியில் எந்த தீவிரவாத நடவடிக்கைகளும் இல்லை. தோடாவைச் சேர்ந்த மசூத் என்ற ஒரு பயங்கரவாதி காஷ்மீரிலும் ரியாஸ், ஜஹாங்கிர் சரூரி, முடாசிர் ஆகிய மூன்று பயங்கரவாதிகள் கிஷ்த்வாரிலும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். பயங்கரவாதத்தை கூடியவிரைவில் அகற்றிவிடுவோம் என்று நம்பிக்கை கொண்டுள்ளோம்” என்றார் காவல்துறை இயக்குநர் தில்பக் சிங்.

அடுத்த கட்டுரைக்கு