லோக்பால் மசோதா நிறைவேறியது; முக்கியமான நடவடிக்கை என பிரதமர் கருத்து!

புதுடெல்லி: திருத்தப்பட்ட லோக்பால் மசோதா மாநிலங்களவையில், பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் இன்று நிறைவேறியது. 

லோக்பால் மசோதா மீது  மாநிலங்களவையில் இன்று பகல் 12 மணி முதல் விவாதம் தொடங்கி நடைபெற்ற விவாதம் மாலையில் முடிவடைந்ததை தொடர்ந்து,மசோதா மீது பல்வேறு கட்சிகள் தெரிவித்த 14 திருத்தங்கள் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது.

குரல் வாக்கெடுப்பில் பா.ஜனதா, திமுக, அதிமுக உள்ளிட்ட பெரும்பான்மை கட்சிகளின் ஆதரவுடன் இம்மசோதா நிறைவேறியது.

அன்னா ஹசாரே மகிழ்ச்சி

இந்நிலையில் லோக்பால் மசோதா நிறைவேறி உள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, இதன் மூலம் 40 முதல் 50 சதவீத ஊழல்கள் குறையும் எனக் கூறியுள்ளார்.

லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி அன்னா ஹசாரே, தனது சொந்த ஊரான மகாராஷ்ட்ரா மாநிலம் ராலேகான் சித்தியில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை கடந்த 8 தினங்களாக மேற்கொண்டு வந்த நிலையில், மசோதா நிறைவேறியது குறித்த தகவல் அறிந்து, உண்ணாவிரத மேடை அருகே அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

பிரதமர் கருத்து

லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், இது ஒரு முக்கியமான, குறிப்பிடத்தக்க நடவடிக்கை என்று கூறியுள்ளார்.

விவாதத்தில் பங்கேற்ற கட்சிகள்

காங்கிரஸ்

முன்னதாக விவாதத்தை தொடங்கி வைத்துப்  பேசிய மத்திய அமைச்சர் கபில்சிபல், லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவது வரலாற்று சிறப்பு மிக்கதாக அமையும் என்றும், லோக்பால் தேர்வுக் குழுவில் 7 பேர் இடம்பெறுவார்கள் என்றும் அறிவித்தார்.

தொடர்ந்து  லோக்பால் மசோதாவின் சிறப்பு அம்சங்களை எடுத்துரைத்து உரையாற்றிய அவர், தேர்வுக்குழுவில் 50 விழுக்காடு தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு

ஒதுக்கப்படும் என்றும், லோக்பால் மசோதா மக்களின் விருப்பங்களை பிரதிபலிப்பதாக உள்ளது என்றும் கூறினார்.

பா.ஜனதா

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான அருண் ஜெட்லி பேசுகையில்," லோக்பால் மசோதாவை நாங்கள் ஆதரிக்கிறோம். என்ன விலை கொடுத்தேனும் இம்மசோதாவை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என  நாங்கள் ஏற்கனவே தெளிவுபட கூறியிருந்தோம்"  என்று கூறினார்.

பா.ஜனதா உறுப்பினர் ரவி சங்கர் பிரசாத் பேசுகையில், சில நேர்மையான அரசியல்வாதிகள் உள்ளபோதிலும், மக்கள் அரசியல்வாதிகள்  மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதால், லோக்பால் மசோதா நமக்கு மிகவும் அவசியம் என்று கூறினார்.

தி.மு.க.

தி.மு.க.  உறுப்பினர் கே.பி. ராமலிங்கம் பேசுகையில், லோக்பால் வரம்புக்குள் முதலமைச்சரும்  மத நிறுவனங்களும் , கொண்டுவரப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். 

 அ.தி.மு.க.

அ.தி.மு.க. எம்.பி. மைத்ரேயன் பேசுகையில், 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலேயே லோக்பால் மசோதா விவகாரத்தில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுவிட்டதாகவும், ஆனால் மத்தியில் ஆட்சியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இவ்வளவு நாட்களும் அதனை தூங்கச் செய்துவிட்டு, அண்மையில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வி காரணமாக அதனை நிறைவேற்ற முன்வந்ததாகவும் கூறினார்.

சிபிஐ(எம்)

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரி பேசுகையில்,லோக்பால் வரம்புக்குள் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களும் கொண்டு வரப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

மக்களவையில் விவாதம்

இந்நிலையில் லோக்பால் மசோதா மீது மக்களவையில் நாளை விவாதம் நடைபெற உள்ளது.

 

 

அ.தி.மு.க.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!