வெளியிடப்பட்ட நேரம்: 10:10 (28/01/2014)

கடைசி தொடர்பு:14:16 (28/01/2014)

ஓரினச் சேர்க்க குற்றம் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய முடியாது: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: ஓரின சேர்க்கை, கிரிமினல் குற்றம் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய முடியாது என்று கூறி அது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஓரின சேர்க்கை சட்டரீதியாக செல்லும் என்று கடந்த 2009 ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஓரின சேர்க்கை, கிரிமினல் குற்றம் என்று கூறும் இ.பி.கோ. 377வது பிரிவு, அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்றும் கூறியது. இதனால், ஓரின சேர்க்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட அப்பீல் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த மாதம் 11 ஆம் தேதி, டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தது. ஓரின சேர்க்கை, கிரிமினல் குற்றம். அது, ஆயுள் தண்டனை வரை அளிக்கக்கூடிய குற்றம். இதுதொடர்பான இ.பி.கோ. 377வது பிரிவு செல்லும் என்று தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து, 'நாஸ் பவுண்டேசன்' என்ற தொண்டு நிறுவனம் உள்பட ஓரின சேர்க்கை ஆர்வலர்கள், உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுக்களை தாக்கல் செய்தனர். அந்த மனுவில், ''டெல்லி உயர் நீதிமன்றம், ஓரின சேர்க்கையை சட்ட ரீதியாக ஆக்கியதால், ஓரின சேர்க்கையாளர்கள் தங்களைப் பற்றிய அடையாளத்தை கடந்த 4 ஆண்டுகளாக வெளிப்படையாக தெரிவித்து வந்தனர். ஆனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பால் அவர்கள் வழக்கு தொடரப்படும் அபாயத்தில் சிக்கி உள்ளனர். எனவே, அந்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பில், சட்ட ரீதியான தவறுகள் உள்ளன. சட்டம் தவறாக பிரயோகிக்கப்படுத்தப்பட்டு உள்ளது. அந்த தவறுகளை சரிசெய்ய வேண்டும். ஓரின சேர்க்கையை கிரிமினல் குற்றம் ஆக்குவது ஓரின சேர்க்கையாளர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல் ஆகும். அவர்களின் ஆரோக்கியத்துக்கான உரிமையை மீறும் செயலும் ஆகும். அவர்கள் எச்.ஐ.வி. தடுப்பு சிகிச்சை உள்பட எந்த சிகிச்சையும் மேற்கொள்ள முடியவில்லை. இந்த கருத்தை மத்திய சுகாதார அமைச்சகமும் இந்த நீதிமன்றத்தில் ஆதரித்துள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் ஓரின சேர்க்கை பிரியர்களுக்கு ஆதரவாக, மத்திய அரசும் உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது. அதில், 'ஆயிரக்கணக்கான ஓரின சேர்க்கையாளர்களுக்கு நீதி சிதைக்கப்படக்கூடாது. அதற்காக தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மறு ஆய்வு மனுக்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எச்.எல்.தத்து, எஸ்.ஜே.முகோபாத்யாயா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஓரின சேர்க்கை, கிரிமினல் குற்றம் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய முடியாது என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்