கருணை மனு மீது நியாயப்படுத்த முடியாத காலதாமதம்: ராம் ஜெத்மலானி வாதம்

புதுடெல்லி:  முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்குத்தண்டனையை குறைக்கக் கோரும் வழக்கில் வாதிட்ட பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, கருணை மனுக்கள் மீது  முடிவெடுப்பதில் நியாயப்படுத்த முடியாத  காலதாமதம் காட்டப்பட்டுள்ளதாக கூறினார்.

கருணை மனு மீதான முடிவு எடுப்பதில் கால தாமதம் செய்ததால் வீரப்பன் கூட்டாளிகள் நால்வர் உள்பட 15 பேரின் தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் அண்மையில் ரத்து செய்தது.
 
இதைத் தொடர்ந்து முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரும் தங்களது தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது. ஆஜரான மத்திய அரசின் வழக்கறிஞர், அரசு தரப்பு வாதங்களை முன்வைக்க கால அவகாசம் கேட்டார். இதை நீதிபதிகள் நிராகரித்தனர். இதனிடையே, பேரறிவாளன் உள்பட 3 பேரின் சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், சிவகீர்த்தி சிங் ஆகிய கொண்ட அமர்வில்  இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, முருகன் சார்பில் வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியும், பேரறிவாளன், சாந்தன் ஆகியோர் சார்பில் வழக்கறிஞர் யுக்முக் சவுத்ரியும் வாதிட்டனர்.

நியாயப்படுத்த முடியாத காலதாமதம்

வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி வாதிடுகையில், "பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவருக்கும் 1998 ஜனவரி 28 அன்று தடா நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, 1999 மே மாதம் 11ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டது. அவர்கள் குடியரசுத் தலைவருக்கு 2000ஆம் ஆண்டு ஏப்ரல் 26இல் கருணை மனு தாக்கல் செய்தனர். அந்தக் கருணை மனுக்கள் 11 ஆண்டுகளுக்கும் மேலாகக் கிடப்பில் போடப்பட்டு 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12இல் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 2011 செப்டம்பர் 9இல் மரண தண்டனை நிறைவேற்ற ஆணை இடப்பட்டது.

11 வருடங்கள் 4 மாதங்கள் கருணை மனுக்கள் மீது எந்த முடிவும் எடுக்காமல் தாமதம் செய்ததற்கு மத்திய அரசு எந்த விளக்கமும் காரணமும் கூற முடியாது. உள்துறை அமைச்சகத்தில் 5 வருடங்கள் 6 மாதம் கருணை மனுக்கள் எந்த அசைவும் இல்லாமல் இருந்தன. அதுபோலவே, குடியரசுத் தலைவரிடம் 5 வருடங்கள் 6 மாதம் எந்த நகர்வும் இன்றிக் கிடந்தன. நியாயப்படுத்த முடியாத இந்தக் காலதாமதம் ஒன்றே இந்த மூவரின் மரண தண்டனையை ரத்து செய்வதற்கான அடிப்படையாகும்" என வாதிட்டார்.

பிப்ரவரி 4 ல் மத்திய அரசு வாதம்

இதைத் தொடர்ந்து மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், தங்கள் வாதங்களைச் சொல்ல அவகாசம் கேட்டார். இதையடுத்து, வழக்கு விசாரணையை பிப்ரவரி 4ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அன்றைய தினம் மத்திய அரசு தரப்பு வழக்கறிஞரின் வாதம் நடைபெறும் என்று அறிவித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!