பா.ஜனதா ஆதரவுடன் தெலங்கானா மசோதா மக்களவையில் நிறைவேறியது!

புதுடெல்லி: கடும் அமளிக்கிடையே இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட தெலங்கானா மசோதா, 3 திருத்தங்களுடன் நிறைவேறியது.

மக்களவையில் இன்று  கடும் அமளிக்கிடையே தெலுங்கானா மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே  தாக்கல் செய்தார். உறுப்பினர்கள் அமளி தொடர்ந்ததை அடுத்து அவையை பகல் 12.45 மணிவரை சபாநாயகர் ஒத்திவைத்தார்.

இந்நிலையில் அவை 12.45 மணிக்கு கூடியதும், தெலங்கானா மசோதாவை அமைச்சர் ஷிண்டே படிக்க தொடங்கினார்.அப்போது அமளி நீடித்ததால், அவை பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் 3 மணிக்கு அவை கூடியதும், தெலங்கானா மசோதா குறித்துப் பேசிய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, சீமாந்திராவுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்படும் என்றார். அதனைத் தொடர்ந்து மசோதா மீதான விவாதம் தொடங்கும் என அறிவித்த சபாநாயகர் மீராகுமார், தொலைக்காட்சியில் அவை நடவடிக்கைகளின் நேரடி ஒளிபரப்புக்கு தடை விதித்தார்.

பா.ஜனதா ஆதரவு

அதனைத் தொடர்ந்து மசோதா மீது ஷிண்டே, எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் ஜெய்பால் ரெட்டி ஆகிய 3 பேர் மட்டுமே விவாதத்தில் பங்கேற்ற நிலையில், பா.ஜனதா ஆதரவுடன் 3 திருத்தங்களுடன் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய சுஷ்மா ஸ்வராஜ், சீமாந்திரா மக்களின் கவலையையும் அரசு கருத்தில் கொள்ளவேண்டும் என்று கூறினார். 

இதில் ஹைதராபாத்தை புதிய தெலங்கானா மாநிலத்தின் தலைநகராக்க வேண்டும் என்ற திருத்தம் குரல் வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. 

முன்னதாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆந்திர எம்.பி.க்கள் அவைக்குள் நுழைய முற்பட்டபோது அவர்களை அவைக்காவலர்கள் தடுத்து நிறுத்தினர்.

தெலங்கானா பகுதியில் கொண்டாட்டம்

இதனிடையே தெலங்கானா மசோதா நிறைவேறியதை தொடர்ந்து, தெலங்கானா பகுதியில் கொண்டாட்டங்கள் களை கட்டத் தொடங்கி உள்ளன. தெலங்கானா ஆதரவாளர்கள் பட்டாசுகளை வெடித்து ஆடிப்பாடி கொண்டாடி வருகின்றனர்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!